"எங்கள் சுகாதார அமைப்பின் பலவீனத்தை கொரோனா வெளிப்படுத்தியது" - சீனா ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

தங்கள் சுகாதார அமைப்பில் இருந்த பலவீனங்களை கொரோனா வைரஸ் அடையாளம் காட்டி உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் இயக்குநர் லீ பின் சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சீனா இப்படி தனது பிழைகளை ஒப்புக் கொள்வது மிகவும் அரிதானது.

நோய்த்தடுப்பு, பொது சுகாதாரம், தரவுகளை திரட்டுதல் ஆகிய விஷயங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா உலகளாவிய தொற்றை சமாளிப்பதற்கு வடகொரியாவுக்கு சீனா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று சீனாவின் ஆட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

சீனாவின் சுகாதார அமைப்பிலும் பெருந்தொற்றுகளை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளிலும் இருக்கிற பலவீனமான கன்னிகளை கண்டறிய இந்த கொரோனா தொற்று உதவியதாக அவர் தெரிவித்தார்.

வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியபோது அதன் ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு மிக மெதுவாக எதிர்வினை ஆற்றியதாகவும், சர்வதேச சமூகத்தை விரைவாக எச்சரிக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளில் ஒரு பகுதியாக தேநீர் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தளர்வுகள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மருந்து: சித்தர் திருத்தணிகாச்சலம் யார்?

கோவிட்- 19 நோய்க்கு மருந்து இருப்பதாகச் சொன்னதால் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சித்தர் திருத்தணிகாச்சலம். அவரது பின்னணி என்ன?

சென்னை கோயம்பேட்டின் ஜெய் நகர் பகுதியில் ரத்னா சித்தா ஹாஸ்பிடல் என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்திவருகிறார் திருத்தணிகாச்சலம். இந்த மருத்துவ மனையில் வேறு சில சித்த மருத்துவர்கள் பணியாற்றுவதாகக் கூறிவந்தாலும், முக்கியமான மருத்துவர் இவர்தான்.

கொரோனா வைரஸ்: தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படுமா?

அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் நூற்றுக்கணக்கான திடீர் மரபணு மாற்றங்களை (mutation) அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால், கொரோனா வைரஸின் இந்த நூற்றுக்கும் அதிகமான திடீர் மரபணு மாற்றங்களுக்கும் அதன் பரவும் தன்மைக்கும், அது தடுப்பூசி கண்டறிவதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதுவரை நிருவப்படவில்லை.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸால் அச்சுறுத்தலா?

உடல் பருமனாக இருப்பது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

இந்த நிலையில், உடல்பருமன் உடையவர்களுக்கு மற்றவர்களை விட கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது எப்படி சாத்தியம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: