You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் மருந்து: திடீர் மரபணு மாற்றத்தால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படுமா?
- எழுதியவர், ரேச்சல் ஷ்ரேயர்
- பதவி, பிபிசி
அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் நூற்றுக்கணக்கான திடீர் மரபணு மாற்றங்களை (mutation) அடையாளம் கண்டுள்ளனர்.
ஆனால், கொரோனா வைரஸின் இந்த நூற்றுக்கும் அதிகமான திடீர் மரபணு மாற்றங்களுக்கும் அதன் பரவும் தன்மைக்கும், அது தடுப்பூசி கண்டறிவதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதுவரை நிருவப்படவில்லை.
திடீர் மரபணு மாற்றம் அடைவது வைரஸின் இயல்பு.
ஆனால், இந்த மாற்றங்களுக்கும், கோவிட்-19 நோயின் வீரியம் தீவிரமடைவதற்கு அல்லது தொற்று பரவும் விதத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸின் புதிய மரபுப் பிறழ்வான (mutant) D614G ஆதிக்க நிலையை அடைந்து வருவதாகவும், இது நோய்த்தொற்று பரவலை மேலும் மோசமாக்கும் என்றும் இதுதொடர்பாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் முதற்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த ஆய்வு முடிவுகள் பரந்துபட்ட அறிவியல் உலகின் மற்ற ஆராய்ச்சியாளர்களால் உற்றுநோக்கப்படவும் இல்லை, முறையாக பதிப்பிக்கப்படவும் இல்லை.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வைரஸின் தனித்துவமான வடிவத்தில் ஏற்படும் மாற்றங்களை GISAID எனும் தரவுத்தளத்தை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த குறிப்பிட்ட வைரஸ் மரபுப் பிறழ்வு மற்றவற்றைவிட வேகமாக வளர்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இதுவரை தெளிவில்லை.
பிரிட்டனிலுள்ள நோயாளர்களை கொண்டு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. வைரஸின் அந்த குறிப்பிட்ட பிறழ்வுள்ள நபர்களின் மாதிரிகளில் அதிக அளவு வைரஸ் இருப்பதாக அவர்கள் கண்டறிந்தாலும், அதன் காரணமாக நோயாளிகள் நோய்வாய்ப்பட்டதற்கான அல்லது நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கவில்லை.
‘பிறழ்வு மோசமானது அல்ல’
யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸின் 198 விதமான பிறழ்வுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
“வைரஸ்களில் மரபுப் பிறழ்வுகள் என்பது ஒரு மோசமான விடயம் அல்ல. அதே சமயத்தில், இந்த பிறழ்வுகளை மையமாக கொண்டு கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விட வேகமாக அல்லது மெதுவாக மாறுகிறது என்ற முடிவுக்கும் வர முடியாது” என்று அந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் கூறுகிறார்.
“தற்போதுள்ள சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கான மற்றும் உயிரை பறிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்று கூற முடியாது.”
கொரோனா வைரஸின் மரபுப் பிறழ்வுகள் குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகம் பகுப்பாய்வு செய்தது. தற்போது உலகம் முழுவதும் ஒரே வகை வைரஸ் மட்டுமே பரவுகிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
வைரஸின் கட்டமைப்பில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றத்தையும் கண்காணிப்பது அவசியம். ஏனெனில், அது தடுப்பூசி உருவாக்கத்தில் தாக்கத்தை செலுத்தக்கூடும்.
அதாவது, ஒருவேளை தற்போது பரவும் கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட பிறழ்வுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு, அதன் வடிவம் மாறிக்கொண்டே இருந்தால், அப்போதெல்லாம் தடுப்பூசியிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
தடுப்பூசி கண்டறிவதில் உள்ள சிக்கல்
தற்போது ஆராய்ச்சி நிலையில் உள்ள பல கோவிட்-19 தடுப்பூசிகள் அந்த வைரஸின் தனித்துவமான கூர்முனைகளை குறிவைக்கின்றன. அதாவது, கொரோனா வைரஸின் தனித்துவமான கூர்முனைகளை உங்களது உடல் கண்டறிய செய்து அதை எதிர்த்து போராடும் திறனை அளிக்கும் வகையில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அந்த கூர்முனையின் அமைப்பு மாறினால், இந்த வழியில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் மிக்கதாக மாறும்.
இந்த நேரத்தில் இது எல்லாம் தத்துவார்த்தமானது. வைரஸின் மரபணுவில் நடக்கும் மாற்றங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கூற ஆராய்ச்சியாளர்களிடம் இன்னும் போதுமான தகவல்கள் இல்லை.
வைரஸின் எண்ணற்ற மரபணுக்களை பகுப்பாய்வு செய்வது “தடுப்பூசி கண்டறிவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும்” என்று கூறுகிறார் இந்த ஆய்வை முன்னெடுத்த யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் மற்றொரு ஆய்வாளரான லூசி வான் டார்ப்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: