You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிறு இரவு அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பியுள்ளார்.
அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவிக்கிறது.
திங்களன்று அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
87 வயதாகும் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் ஞாயிற்றுக்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டது.
"புதிய மருந்தொன்றை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான வேறு காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் கார்டியோடோராசிக் மையத்தின் மருத்துவர்கள் குழுவின் பராமரிப்பில், அவர் நிலையான உடல்நிலையில் உள்ளார்" என்று மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்திருந்தன.
மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்திய பிரதமாக இருந்தார்.
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அதிகம் பேசாதவராக அறியப்படும் மன்மோகன் சிங், ''எனது அமைதி ஆயிரம் பதில்களை விட சிறந்தது'' என கூறியிருக்கிறார்.
இந்திய அரசியல்வாதிகளில், ஊழல் கறை படியாத நபராக இவர் அறியப்படுகிறார்.
இந்தியாவில் பிரதமர் பதவியை ஏற்ற முதல் சீக்கியரான இவர், 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்
முன்னதாக, கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என தொடர்ந்து மன்மோகன் தெரிவித்து வந்தார்.
அண்மையில் காங்கிரஸ் முதல்வர்கள் இணையவழி கூட்டம் சோனியா தலைமையில் நடந்தது. அதில் மன்மோகன் கலந்து கொண்டு, ஊரடங்கு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும், மாநிலங்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: