You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்" - மன்மோகன் சிங்
"நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இதைவிட அதிகமான வேகத்தில் வளர்ச்சியடையும் திறன் இந்தியாவுக்கு இருக்கும் நிலையில், அனைத்து நிலைகளிலும் தவறான நிர்வாகத்தை வெளிப்படுத்தும் மோதி அரசாங்கமே தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு காரணம்." என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மன்மோகன் சிங். அவர் கூறியது பின்வருமாறு:
குறிப்பாக, உற்பத்தித்துறையின் வளர்ச்சி 0.6 சதவீதத்துடன் தள்ளாடிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. மனிதனால் செய்யப்பட்ட பெருந்தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றிலிருந்து நமது பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை இது மிகவும் தெளிவுப்படுத்துகிறது.
பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைந்து காணப்படும் நிலையில், அதன் நுகர்வு 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. பணவீக்கத்தை தவிர்த்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதே போன்று வரி வருவாயிலும் தேக்கநிலை காணப்படுகிறது. சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் வேட்டையாடப்படுவதாலும், வரி பயங்கரவாதம் தடையின்றி தொடருவதாலும் வரி வருவாய் மிதப்பு நிலை எட்டப்படவில்லை. முதலீட்டாளர்கள் உற்சாகம் குன்றி உள்ளனர். இவை பொருளாதார மீட்டெடுப்பதற்கான அடித்தளம் அல்ல.
மோதி அரசின் கொள்கையினால் வேலைவாய்ப்பின்மையின் விகிதம் பெரியளவில் அதிகரித்துள்ளது. மோட்டார் வாகனத்துறையில் மட்டும் 3.5 லட்சத்துக்கும் மேலான வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. முறைசாரா துறையில் இதேபோல் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்கும்.
கிராமப்புற இந்தியாவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு வருமானரீதியில் துயரத்தை ஏற்படுத்துவதன் மூலம் மோதி அரசாங்கம் குறைந்த பணவீக்க விகிதத்தை காட்ட விரும்புகிறது.
அரசின் முக்கிய அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி அவற்றின் சுயாட்சி அரிக்கப்பட்டு வருகிறது. ரூ. 1.76 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் எவ்வித மாற்றத்தை கொண்டுவர கூடும் என்பது குறித்து தன்னிடம் ஒரு திட்டம் இல்லை என்று கூறும் நிலையில் ரிசர்வ் வங்கி இருக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் தரவுகள் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழும் சூழ்நிலை இந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் ஒன்றை அறிவிப்பதும், பின்பு அதை மாற்றுவதும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்துள்ளது.
புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் எழுந்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை. இதுதான் மோதி அரசாங்கத்தின் கீழ் பொருளாதார நிர்வாகத்தின் தற்போதைய நிலை.
இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இதைவிட சிறந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள். இந்த பாதையில் இந்தியாவால் இனியும் தொடர முடியாது. எனவே, மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து விவேகமான குரல்கள் மற்றும் சிந்தனைகளை பெறுமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்