கொரோனா வைரஸ்: ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது அனைவருக்கும் கட்டாயமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பூமிகா ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகின் அனைத்து நாடுகளைப் போலவே, இந்தியாவும் பொது முடக்கநிலை முறையை பின்பற்றியுள்ளது. மார்ச் 25 முதல் நாட்டில் முடக்கநிலை அமலில் உள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசு, தொற்று பரவாமல் தடுப்பதற்காக தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.
இந்திய அரசு ஏப்ரல் 2ம் தேதி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த செயலியின் உதவியால், அருகிலுள்ள கோவிட் 19 நோயாளிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
மத்திய அரசின் பத்திரிகை தொடர்பு அமைப்பின் (PIB) இணையதளத்தில் உள்ள ஆரோக்ய சேது செயலி தொடர்பான தகவல்களின்படி, கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதற்கான அபாயத்தை மதிப்பிடுவதற்கும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் இந்த செயலி உதவியாக இருக்கும்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

குடிமக்கள் அனைவரின் மொபைலிலும் இருக்க வேண்டிய கட்டாய செயலியா?
மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆரோக்ய சேது செயலி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு ஏப்ரல் 29 அன்று "கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க (கொரொனா வைரஸ் தொற்று சங்கிலியை தகர்க்க) ஆரோக்ய சேது செயலி பயனுள்ளது" என்ற தலைப்பில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதன் கீழ், அரசு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைவரும் பின்வரும் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- மத்திய அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் (அவுட்சோர்ஸ் ஊழியர்கள் உட்பட) அனைவரும் 'மொபைல்களில்' ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அலுவலகத்தில் வேலையைத் தொடங்குவதற்கு முன், ஒவ்வொருவரும் 'ஆரோக்ய சேது' செயலியில் தங்கள் நிலையை மதிப்பாய்வு செய்ய வேண்டும். செயலியில் 'பாதுகாப்பான' அல்லது 'குறைந்த ஆபத்து' நிலையைக் காட்டினால்தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லலாம்.
- 'நடுத்தர' அல்லது 'அதிக ஆபத்து' என்று இந்த செயலி சுட்டிக் காட்டினால், 'பாதுகாப்பானது' அல்லது 'குறைந்த ஆபத்து' என்ற நிலையை செயலி காட்டும் வரை அவர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று அதிகாரிகள் / பணியாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆரோக்ய சேது பயன்பாடு கட்டாயமானது என்று இந்த சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் கீழ் வேலை செய்யாதவர்களுக்கு இந்த செயலி கட்டாயமானதா?
2020 மே 1 அன்று வெளியிடப்பட்ட அரசாங்க வழிகாட்டுதல்கள், இது தொடர்பான குழப்பங்களை தெளிவுபடுத்தியது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த செயலி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் இந்த செயலியைப் பதிவிறக்குவதை உறுதி செய்யும் பொறுப்பு, நிறுவனத்தின் நிர்வாகியுடையதாகும்.
இது தொடர்பாக, உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், சைபர் சட்ட நிபுணருமான வரிக் குப்தாவிடம் பேசினோம். "அரசின் இந்த முழு அறிவுறுத்தல்களையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சில இடங்களில் இந்த செயலியை கட்டாயமாக்க அரசாங்கம் முறையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, டி.எம்.ஆர்.சி-யால் இயக்கப்படும் மொட்ரோ ரயில்கள், தங்கள் மாநிலத்திற்குத் திரும்பிச் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் சில இடங்களில் வேறு வழிமுறைகளில் கட்டாயமாக்க முயற்சிப்பது சட்டரீதியில் சரியானது இல்லை. இந்த அறிவுறுத்தல்கள் பெரும்பாலான இடங்களில் ஆலோசனை என்ற அளவில் மட்டுமே இருந்தாலும், இந்த ஆலோசனையின் தன்மையானது, கட்டாயமாக செயல்படுத்த அறிவுறுத்துபவையாக இருக்கின்றன."

பட மூலாதாரம், Mygov.in
செயலியை பதிவிறக்குவதை கட்டாயப்படுத்துவது தனியுரிமை மீறல் தொடர்பான மிகப்பெரிய சர்ச்சை என்று வரிக் குப்தா கூறுகிறார். எது எப்படியிருந்தாலும், தனியுரிமையை ஒரு அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு அங்கீகரித்தது. இருந்தாலும்கூட, நாட்டில் தனியுரிமை மீறல் குறித்த நிலைமை இன்னும் தெளிவாகவில்லை. தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், இது தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லை. ஆனால் தனியுரிமையைத் தாண்டி நாம் ஆராய்ந்தால், இப்படி எந்தவொரு செயலியையும் நாம் கட்டாயமாக்க முடியாது என்பது தெளிவான விஷயம் ஆகும்.
ஆரோக்ய சேது செயலி தொடர்பான சர்ச்சைகளை, ஆதார் அட்டை தொடர்பான விவாதங்களுடன் பொருத்திப் பார்க்கிறார் வரிக் குப்தா.
"உச்சநீதிமன்றம் தனது பல உத்தரவுகளில் ஆதார் அட்டையை கட்டாயம் என்று கூறவில்லை, ஆனால் அரசு, பல்வேறு வழிகளில் தொடர்ந்து முயற்சித்து ஆதார் அட்டையை கட்டாயமாக்க முயன்றது" என்பதை வரிக் குப்தா சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இதை சட்டரீதியான முரண்பாடாகக் கருதும் வரிக் குப்தா, ஆனால் சட்ட எல்லைகளை மீறி செயல்படும் அரசாங்கத்தின் ஒரேயொரு விஷயம் இது மட்டுமே என்று கருதவில்லை.
"முடக்கநிலை அமலில் இருக்கும்போது இதுபோன்ற பல சட்ட மீறல்கள் நடைபெறுகின்றன. அதற்கான சட்டரீதியான அதிகாரம் உண்மையில் அரசுக்கு இல்லை" என்று வரிக் குப்தா குறிப்பிடுகிறார்.
செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியுமா?
"முடக்க நிலை அமலில் இருக்கும்போது, சமத்துவம், சுதந்திரம், வாழ்க்கைக்கான உரிமை உட்பட பல முக்கியமான உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, தொற்று நோய் சட்டம், பேரழிவு மேலாண்மை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 ஆகிய மூன்று சட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்களும் மூடப்பட்டிருப்பதால் இந்தத் தொற்றுநோய்க் காலகட்டத்தில் அரசாங்கத்தின் பெரும்பாலான உத்தரவுகளின் சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மை இன்னும் கேள்விக்குட்படுத்தப்படவில்லை. தொற்றுநோய் காலம் முடிந்தபிறகு, நிச்சயமாக இந்த பிரச்சினைகளைப் பற்றிய விவாதங்கள் எழும்" என்று சொல்கிறார் வரிக் குப்தா.

பட மூலாதாரம், Play store
பிஐபியின் செய்திக்குறிப்பைக் சுட்டிக்காட்டும் அவர், தனிநபர் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் ஒரு நபர் தனது மொபைலில் இந்த செயலியை நிறுவினால், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் இதுபோன்ற ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்திருந்தால், முதலில் அவற்றை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்களிடமும், நோய்தொற்று ஏற்படலாம் அல்லது ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்களிடம் அதை செயல்படுத்தியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களின் மொபைலில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், ஒருவேளை நிலைமை மேம்பட்டிருக்கலாம்.
ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்க முடியுமா?
நிச்சயமாக மறுப்பு தெரிவிக்கலாம் என்று வரிக் கூறுகிறார், ஏனெனில் இது பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகிறது, கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. ஆனால் ஒரு உள்ளாட்சி அமைப்பு அல்லது பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் இந்த செயலியைக் கட்டாயமாக்கினால், மனித பாதுகாப்பின் அடிப்படையில் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், கட்டாயமாக்குவது தொடர்பாக யர் வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாக கேள்வி எழுப்பலாம். ஆனால் அத்தகைய கேள்விகளுக்கு உடனடியாக முடிவு கிடைக்காது. இந்த முழு விவாதமும் சட்ட சிக்கல்களில் சிக்கி உழலக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் செயலி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
டிஜிட்டல் நிபுணர் நிகில் பஹ்வாவின் கூற்றுப்படி, "இதுவரை புரிந்து கொள்ளப்பட்டவற்றின் அடிப்படையில், இந்த செயலியில் தனியுரிமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் செயலியை மாற்றியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் மறுக்க முடியாது".
'பிரதமரின் நிதியத்திற்கான கட்டணம் மற்றும் இ-பாஸிற்கான சேவைகள் உள்ளிட்ட செயலியில் சேர்க்கப்படும் சேவைகளால் நிறைய தரவுகளை சேகரிப்பார்கள்' என்கிறார் நிகில்.
இந்த செயலியின் நன்மை என்ன? இது உண்மையில் வேலை செய்கிறதா இல்லையா? இது கொரொனா வைரஸ் தொற்று இருப்பதை உண்மையில் கண்டறிகிறதா இல்லையா? என ஆரோக்ய சேது செயலி தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் பல விஷயங்களில் இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை, அரசாங்கம் இது குறித்து எந்த தரவையோ, தகவலையோ வெளியிடவில்லை.
Falls positive என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது நான் ஒரு கட்டடத்தின் ஒரு மாடியில் இருந்தால், இந்த செயலியை இயக்கிய பிறகு, எனது புளூடூத் இயக்கப்பட்டால், மேல் மாடியில் இருக்கும் மற்றொருவருடைய செயலியும் என்னுடையதும் இணைந்துவிடும். ஆனால் உண்மையில் நாங்கள் தொடர்பில் இருக்கமாட்டோம். எனவே, யார், யாருடைய தொடர்புக்கு வந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆரோக்ய சேது செயலி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என்று நிகில் விளக்குகிறார்.
ஆரோக்ய சேது செயலியை கட்டாயமாக்குவது தொடர்பாக செய்யப்படும் விவாதங்களை பார்த்தால், தனியுரிமையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருப்பது தெரியும் என்றும் நிகில் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆதார் அட்டை போன்றது தான் ஆரோக்ய சேது செயலி என்று வரிக் குப்தா சொல்வதை ஆமோதிக்கும் நிகில், இது தன்னார்வமானது என்று கூறப்பட்டாலும், கட்டாயமாக்கும் முயற்சிகள் நடைபெறுவதை சுட்டிக் காட்டுகிறார்.
ஆரோக்ய சேது செயலி தொடர்பான சில விஷயங்களைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நிகில் கூறுகிறார். ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த செயலியின் பயனர்களுக்கு, தனியுரிமைக் கொள்கையை மாற்றுவதாக ஏப்ரல் 12 ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், கொள்கை மாற்றங்கள் செய்யப்ப்ட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த அறிவிப்பு பயனர்களுக்கு கொடுக்கப்பட்டது.
அதாவது, பயனர்களுக்கு அறிவிக்காமலேயே, தனியுரிமைக் கொள்கை மாற்றப்பட்டது. பயன்பாட்டில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
இது கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட ஒரு தற்காலிக பயன்பாடு என்று தனியுரிமைக் கொள்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நிகில் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், செயலியின் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் தொழில்நுட்ப உதவியை நாடும் நாடு இந்தியா மட்டும் அல்ல. கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கம் ஒரே இரவில் தற்காலிக சட்டத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலைத் தவிர, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் இந்த வைரஸ் பரவலை தடுக்க தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளன.

இது குறித்துக் கேள்வி எழுப்பும் உலகெங்கிலும் உள்ள சைபர் வல்லுநர்கள், இதை தனியுரிமை மீறல் என்று அழைக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் அரசாங்கங்களின் இந்த நடவடிக்கை சரியானதாக தோன்றினாலும், இந்த விவகாரம் மக்களின் தனியுரிமையை மீறுவதாகவும், சேகரிக்கும் தகவல்களை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தும் என்பது தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லாமலும் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், ஆரோக்கிய சேது செயலியின் வடிவமைப்பு தனியுரிமையை உறுதி செய்வதாக PIB இல் வெளியான தகவல் கூறியது. இந்த செயலியின் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகள், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்படுகிறது என்றும், மருத்துவ சிகிச்சை வசதி தேவைப்படும் வரை தரவு தொலைபேசியில் பாதுகாப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த பயன்பாடு 11 மொழிகளில் கிடைக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
பிற செய்திகள்:
- ஆழ்கடல் பகுதியில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுப்பு - செத்து மடியும் கடல்வாழ் உயிரிகள்
- கொரோனா வைரசும், இஸ்லாமிய வெறுப்பும் - விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் அலோக் குமார் நேர்காணல்
- சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்கிறது மலேசியா
- ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டி காய்கறி விவசாயிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












