இஸ்லாமிய வெறுப்பு: “முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறோமா? - விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் அலோக் குமார் நேர்காணல்

Islamophobia

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.

முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன.

ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் பதாகை மற்றும் நாலந்தாவில் பஜ்ரங் தளத்தின் காவிக் கொடிகள் மூலம், காய்கனிகளை விற்பவர்களுக்கு 'இந்துக்களின் கடை' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சூடுபிடித்தபோது, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சுகாதார நெருக்கடியின் தற்போதைய கடினமான காலகட்டத்திலும் பிரிவினைவாதம் பரப்புவது ஏன்?

கொரோனா வைரஸ்: இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் நோக்கம் இல்லை- விஷ்வ இந்து பரிஷத்

பட மூலாதாரம், Facebook

"யாராவது கோபத்திலோ அல்லது பயத்திலோ ஏதாவது தவறு செய்தால், அதற்காக முழு சமுதாயத்தையும் விலக்கி வைப்பது சரியல்ல" என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

ஆனால், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இந்த விஷயத்திற்கு ஏன் மதரீதியிலான நிறத்தைக் கொடுக்க முயல்கின்றன? இது போன்ற கேள்விகளுடன், பிபிசி நிருபர் கீர்த்தி துபே, விஷ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகத் தலைவர் அலோக் குமாரிடம் பேசினார்.

இந்த கொரொனா பெருந்தொற்றுக்கு விஷ்வ இந்து பரிஷத் ஏன் மதச்சாயம் பூசுகிறது? ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் பழம் விற்கும் கடைகளில் காவிக் கொடிகளும் காணப்படுவது ஏன்?

"பத்தாயிரம் தப்லீகிகள் ஒரு விதத்தில் நடந்து கொள்ளும்போது, நீங்கள் எங்களுக்கு புரிய வைக்கிறீர்கள். நாட்டின் இரண்டு சிறிய மாவட்டங்களில் சில பதாகைகள் வைத்திருக்கிறார்கள், அதை நீங்கள் பெரிதுபடுத்தி, விஷ்வ இந்து பரிஷத் தான் இதை செய்கிறது என்று சொல்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக இரண்டு டஜன் இடங்களில் கூட இப்படி நடந்திருக்காது. நாங்கள் இவ்வாறு நடந்து கொள்ள விரும்பினால், அதை இரண்டு மணிநேர அறிவிப்பில் முழு நாட்டிலும் செய்துவிடலாம். இது நடந்தது என்னவோ உண்மைதான். ஆனால் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை, மீண்டும் இதுபோல் வேறெங்கும் நடைபெறாது" என்று சொல்கிறார் அலோக் குமார்.

மோகன் பாக்வத் ஐயா சொன்னது, எங்கள் அனைவருக்கும் தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, அவர் சொல்வதுதான் எங்கள் அனைவரின் கருத்தும் கூட என்கிறார் அலோக் குமார்.

கொரோனா வைரஸ்: இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் நோக்கம் இல்லை- விஷ்வ இந்து பரிஷத்

பட மூலாதாரம், ALOK KUMAR

இந்த எட்டாயிரம் தப்லீகிகள் என்ன செய்திருந்தாலும் சரி, எங்கள் நோக்கம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சீற்றத்தைத் தூண்டுவதல்ல, அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சேவையைப் பெறுவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. மோகன் பாக்வத் ஐயா கூறியது போல், 130 கோடி மக்களுக்கும் சம உரிமை உண்டு என்பதுதான் விஷ்வ இந்து பரிஷத்தின் நிலைப்பாடு என்று பதிலளிக்கிறார் அவர்.

உங்கள் செய்தி தொண்டர்களை சென்றடையவில்லையா?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் அலோக் குமார், "பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் பதாகைகள் வைத்ததை மாநில காவல்துறை மிகைப்படுத்தி கூறுகிறது. இது கிரிமினல் வழக்கு பதியக்கூடிய தவறு அல்ல. உள்ளூர் மட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு வி.எச்.பி அமைப்பை எவ்வாறு குறை சொல்கிறீர்கள்? மோகன் பாக்வத் ஐயா கூறியது எங்கள் அனைவரின் சார்பில் கூறப்பட்டது என்பதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதைத்தான் எங்களுடைய தொண்டர்கள் அனைவருக்கும் சொல்கிறோம். மோகன் ஐயா சொல்வதை நாங்கள் வழிகாட்டு நெறிமுறையாக எடுத்துக் கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா பெருந்தொற்று சிக்கல் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மதத்தின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் காட்ட நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் இந்திய குடிமக்கள் என்பதால், இதுபோன்ற சண்டையிலிருந்து வெளியே வரவேண்டும்" என்று சொல்கிறார்.

 ஜாம்ஷெட்பூர் அல்லது நாலந்தாவில் நிகழ்ந்தவற்றை நாங்கள் கொள்கை முடிவாக எடுக்கவில்லை. மோகன் ஐயா கூறும் உறுதியான நிலைப்பாட்டில் நாங்கள் நிற்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது" என்று அலோக் குமார் தெரிவித்தார்.

இருப்பினும், நாங்கள் பலமுறை கேட்ட போதிலும், பதாகைகளையும் காவிக் கொடிகளையும் கொடுத்து 'இந்து கடை' சான்றிதழ் கொடுத்த சம்பவத்தை அவர் கண்டிக்கவில்லை.

மத சுதந்திரம் ஆபத்தில் இருக்கும் 14 நாடுகளை பட்டியலிட்ட அமெரிக்காவின் ஒரு அமைப்பு, அதில் இந்தியாவையும் சேர்த்துள்ளது. கோவிட் -19 இன் நெருக்கடியான காலகட்டத்திலும் கூட இஸ்லாமோஃபோபியா-வின் காணொளிகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது கவலை அளிக்கும் விஷயமல்லவா?

இதற்கு பதிலளிக்கும் அலோக் குமார், "நீங்கள் தப்லீகி ஜமாத்தை சேர்ந்தவர்களை நிரபராதிகள் என்று கருதுகிறீர்கள். மக்களை பரிசோதிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சென்ற பகுதிகளில், அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்களே? அந்த வீடியோக்களை நாங்கள் தயாரித்தோமா அல்லது அரசாங்கம் அவற்றைத் தயாரித்ததா? இதுபோன்றவர்களே தங்களுடைய சமூகத்திற்கும் சிரமத்தை உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை தடுத்து நிறுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து மக்களுக்கு கோபம் ஏற்படுவது இயல்பானது தான்" என்று கூறுகிறார்.

கொரோனா வைரஸ்: இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் நோக்கம் இல்லை- விஷ்வ இந்து பரிஷத்

பட மூலாதாரம், Alok kumar

"ஆனாலும் கூட, மோகன் பாக்வத் ஐயா கூறியதுதான் எங்கள் நிலைப்பாடு. எஞ்சியிருப்பது அமெரிக்காவின் அறிக்கை, இப்படி பரப்புரை செய்து அதன்மூலம் அழுத்தம் உருவாக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அறிக்கையை நான் நிராகரிக்கிறேன்" என்று அலோக் குமார் விளக்கமளிக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

டிரம்பின் பாராட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் ஒரு அமைப்பின் அறிக்கையை நிராகரிக்கிறீர்கள். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை அல்லவா?

இதற்கு பதிலளிக்கும் அலோக் குமார் இவ்வாறு கூறுகிறார்: "இந்த அறிக்கை உண்மையில் தவறானது. இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு சம உரிமை இருக்கிறது. அது அப்படியே தொடரும் என்று நான் நம்புகிறேன்.''

Donald Trump

பட மூலாதாரம், Getty Images

மேலும், ''விஷ்வ இந்து பரிஷத் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் உங்களுக்கு விருப்பமான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். நான் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன், "முஸ்லிம்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இந்த நாட்டில் ஒரு முஸ்லீம் கூட இல்லாவிட்டால் இந்துக்களின் நிலை என்னவாக இருந்திருக்குமோ, அதேதான் இன்றும் இருக்கிறது என்று சொன்னார்.'' என ஆலோக் குமார் கூறுகிறார்.

பால்கர் கும்பல் வன்முறை வழக்கில் ஆக்ரோஷப்படும் விஷ்வ இந்து பரிஷத் புலந்த்ஷகரில் துறவிகளைக் கொன்றது குறித்து ஏன் அமைதி காக்கிறது?

இதற்கு பதிலளிக்கும் அலோக் குமார், "பால்கர் கொலை வழக்கை இந்து-முஸ்லீம் விவகாரமாக விஷ்வ இந்து பரிஷத் மாற்றவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் பால்கர் வழக்கு தொடர்பாக எங்களிடம் சில கேள்விகள் உள்ளன. சம்பவத்தில் முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை?" என்று கேள்வி எழுப்புகிறார். ('பிரதான குற்றம் சாட்டப்பட்டவரின்' பெயரை பிபிசி கேட்டபோது, அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.)

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் விடுதலை பெற முயற்சிக்கும் அமைப்புகள், மிஷனரிகளுடன் தொடர்புடையவை என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் ஆதரவளிப்பதாக நாங்கள் கூறுகிறோம்.

அதுமட்டுமல்ல, இந்த காணொளியில் காணப்படும் கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசும் வட்டார வழக்கு மராத்தி அல்ல, அசாமின் எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் பேசும் பல வார்த்தைகள் கலந்து பேசப்படுகிறது. எனவே, இந்த சம்பவத்தில் உள்ளூர் பழங்குடியினர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த சம்பவம் ஏப்ரல் 16 அன்று நிகழ்ந்தது, ஆனால் 17 ஆம் தேதி வரை யாரும் கைது செய்யப்படவில்லை. வீடியோ வெளியான பிறகு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. மகாராஷ்டிரா அரசு இதை முறையாக விசாரிக்கவில்லை என்றும், மத்திய விசாரணை முகமையிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

புலந்த்ஷஹர் சம்பவம் குறித்து நமது உத்தரபிரதேச அமைச்சர் ராஜ்கவல் குப்தா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தையும் விரைவில் விசாரிக்குமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். முக்கிய குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மட்டுமே தனியாகவே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்.

ஒரு தனி நபர் கொலை செய்வதையும், கும்பலாக கொலை செய்வதையும் எவ்வாறு ஒன்றாக ஒப்பிடமுடியும்? இரண்டாவதாக, உத்தரபிரதேச காவல்துறை சில மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு இதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆனது. இதனால் தான் கேள்விகள் எழுகின்றன.

புலந்த்ஷஹர் விவகாரத்தில் வேறு எந்த கோணமும் இல்லை, கைது நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

சிறுபான்மையினருக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது இந்தியத்தன்மையுடன் ஒத்துப்போகாது. சமுதாயத்திற்கு சேவை செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் விஷ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகத் தலைவர் ஆலோக் குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: