கொரோனா வைரஸ் அழிந்தவுடன் ரோபோக்களால் மனிதனுக்கு வரப்போகும் ஆபத்துகள் என்ன? - அதிர்ச்சி தகவல்

ரோபோட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜோ தாமஸ்
    • பதவி, பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்

உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 'இதையெல்லாம் சமாளித்துவிடலாம். ஆனால்' எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

பணியிடங்களில் மனித வள ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா வைரஸ் பரவல் மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.

கொரோனா வைரஸ்:ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் - என்ன நடக்க இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

சுத்தம் செய்யும் ரோபோட்கள்

இடங்களையும் பொருட்களையும் தூய்மை படுத்தும் ரோபோக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் தேவை அதிகம் உள்ளது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த யுவிடி எனும் நிறுவனம், புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகளை அழிக்கும் ரோபோக்களை நூற்றுக்கணக்கில் தயாரித்து சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறது.

யுவிடி ரோபோட்கள்

பட மூலாதாரம், UVD-ROBOTS

பல்பொருள் அங்காடி மற்றும் உணவு விடுதிகள் இந்த இயந்திரங்களை பெரிதும் வாங்குகின்றனர்.

இன்னும் பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் கடைப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் பள்ளி அல்லது அலுவலகத்தில் ரோபோக்கள் சுத்தம் செய்வதை நம்மால் காண முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

"இப்போது நுகர்வோர் தங்கள் பாதுகாப்பு மற்றும் வேலை செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறார்கள்," என கஸ்டமர் ஆஃப் த ஃப்யூச்சர் என்னும் புத்தகத்தின் எழுத்தாளர் பிலேக் மார்கன் கூறியுள்ளார்.

"தானியங்கி தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்வது மக்களை உடல்நிலையை பாதுகாக்கும். இதனால் அந்த நிறுவனத்திற்கு மக்கள் வர விரும்புவர்," என்கிறார் அவர்.

ஆனால் இதில் பிரச்சனைகளும் உள்ளது. பல்பொருள் அங்காடியிலிருக்கும் தானியங்கி பணபரிவர்த்தனை செய்யும் ரோபோக்கள் மனிதர்களுடன் பேசுவதை குறைக்கும். ஆனால் அவை பெரும்பாலும் சரியாக வேலை செய்யாததால் அல்லது எளிதாக சேதமடையக்கூடும் என்பதால், அத்தகைய கடைகளைத் தவிர்த்துவிட்டு, பணபரிவர்த்தனை செய்யும் இடத்தில் மனிதர்கள் இருக்கும் கடைகளைத் தேடிச் செல்வார்கள் என மார்கன் கூறியுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

சமூக விலகல்

உணவு கொண்டு செல்லுதல் போன்ற வேலைக்கு ரோபோக்கள் பெரிதும் பயன்படலாம். மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் சமைக்கவும் உணவு பரிமாறவும் ரோபோக்களைப் பயன்படுத்தி பரிசோதனை செய்கின்றனர்.

கொரோனா வைரஸ்:ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் - என்ன நடக்க இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களில் குடோன்களில் வேலை சிறப்பாக நடைபெற ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோவிட்-19 தொற்றுப் பரவலின்போது பொருட்களை பிரிக்க, அதை வேறு இடத்திற்கு அனுப்ப மற்றும் பேக்கிங்கிற்காக ரோபோக்களைப் பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

இது குடோன்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சமூக விலகலைக் கடைப்பிடிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் இது சிலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் செய்யும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஒரு முறை ஒரு நிறுவனம் மனிதர்கள் வேலை செய்வதை மாற்றும் நோக்கில் ரோபோக்களில் முதலீடு செய்தால் மீண்டும் மனித வளத்தை அந்தப் பணிக்காக எடுக்க மாட்டார்கள். ரோபோக்களை வணிகத்திற்காக தயாரிப்பதும் ஒருங்கிணைப்பதும் அதிக செலவுகளைத் தரும். ஆனால் அதை ஒரு முறை செய்துவிட்டால் மனித வளத்தைக் காட்டிலும் குறைவாகவே செலவாகும்.

ஃபியூச்சரிசம் (Futurism) கோட்பாட்டாளரான மார்டின் ஃபோர்ட் கூறுகையில், கோவிட்-19க்கு பிறகு ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் சந்தையில் சில நன்மைகள் கிடைக்கும் என்றார்.

"மக்கள் இயந்திரங்கள் அதிகமாகவும் ஆட்கள் குறைவாகவும் இருக்கும் இடத்திற்கு செல்ல விரும்புவர். ஏனென்றால் அங்கே அவர்கள் ஆபத்து குறைவு," எனக் கருதுவார்கள் என கூறுகிறார் ஃபோர்டு.

குடோன்களில் ரோபோட்

பட மூலாதாரம், Getty Images

மனிதர்களை போல இயங்கும் செயற்கை நுண்ணறிவு

இப்போது உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பள்ளி ஆசிரியர், உடற்பயிற்சியாளர், மற்றும் நிதி ஆலோசகர் ஆகிய தொழில்களுக்கு பதிலாக மாற்றப்படலாம்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் பயனை விரிவுபடுத்துகின்றன. ஃபேஸ்புக் மற்றும் கூகுள் முறையற்ற பதிவுகளை நீக்க செயற்கை நுண்ணறிவையே பயன்படுத்துகின்றன.

ரோபோக்களை நம்பாதவர்கள் மனிதர்களின் வேலையே அனைத்து பணிகளிலும் தேவை என நம்புகின்றனர். ஆனால் இந்த ஊரடங்கு அவர்களின் சிந்தனையை மாற்ற உதவியாக இருக்கும். இந்த இயந்திரங்களுக்கு உத்தரவு கொடுக்க மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனிதன்போல் சிந்திக்க தெரிந்தால் போதும்.

மெக்கென்சி என்னும் சர்வதேச தொழில் ஆலோசனை நிறுவனம் 2017ல் ஓர் ஆராய்ச்சியை வெளியிட்டது. அதில் 2030ல் அமெரிக்காவில் மூன்றில் ஒரு பணியாளருக்கு பதில் ரோபோக்கள் இடம் பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது போன்ற பெருந்தொற்று பரவும் சூழல் அத்தகைய நிலைமை வரும் காலகட்டத்தை மாற்றவோ தள்ளிவைக்கவோ வல்லவை. தங்கள் வாழ்வில் அங்கமாக தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மனிதர்களே முடிவு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோன வைரஸ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: