கொரோனா வைரஸ்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டி காய்கறி விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டி காய்கறி விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகளை பயிரிட்டவர்களின் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊட்டியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு ஆகிய மலைக்காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டி மலைக்காய்கறி விவசாயிகள்

ஊரடங்கின் காரணமாக மற்ற மாநிலங்களுக்குக் காய்கறிகளை அனுப்புவதும், சந்தைகள் செயல்படுவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் கேரட் விற்பனையை முற்றிலுமாக முடக்கியுள்ளதாகக் கூறுகிறார் விவசாயி சி.கே.என் பாபு.

"ஊட்டியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலடா பகுதியில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கேரட் பயிரிட்டு விற்பனை செய்து வருகிறேன். பயிரிட்ட 110 நாட்களில் கேரட் விளைந்துவிடும். விரைவில் அழுகிவிடும் காய்கறி என்பதால் விளைந்த 3 நாட்களுக்குள் விற்றாக வேண்டும். இலைதழைகளிலிருந்து கேரட்டை பிரித்து, கழுவி, மூட்டையாக கட்டி மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பும் பணிகளுக்காக, தொலை தூரத்திலிருந்து பணியாளர்கள் பலர் தோட்டத்துக்கு வருவார்கள்."

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டி மலைக்காய்கறி விவசாயிகள்

"ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் பணியாளர்கள் வேலைக்கு வர முடியவில்லை. கேரட்டை சுத்தம் செய்வதற்கு தோட்டத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு லோடு வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். சாலைகள் அடைக்கப்படுவதால் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. ஒருவழியாக, தோட்டத்தில் விளைந்த கேரட்டை, மேட்டுப்பாளையம் சந்தை வரை கொண்டு சென்றாலும், காலை 6 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே சந்தை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விற்காத கேரட் முட்டைகளை மீண்டும் எடுத்துச் செல்ல வாகனச் செலவாகவும் என்பதால் கிடைக்கும் விலைக்கு கேரட் மூட்டைகளை விற்று வருகிறோம். இதனால், முதலீட்டுத்தொகையைக் கூட எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது" என்கிறார் கேரட் விவசாயி பாபு.

மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறிகள் மொத்த விற்பனை மண்டியில் ஒரு கிலோ கேரட் ரூ. 10 க்கும், ஒரு கிலோ பீட்ரூட் ரூ. 20 க்கும் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. இவை மார்ச் மாதத்திற்கு முன்புவரை ஒரு கிலோ ரூ.40க்கு வாங்கப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

"ஒரு ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்தால் தான் 20 டன் கேரட் எடுக்க முடியும். ஒரு கிலோ ரூ.20 க்கு விற்பனையானால் தான், முதலீடு செய்த தொகையை திருப்பி எடுக்க முடியும். ஆனால், எங்களிடமிருந்து அதிகபட்சம் ரூ.12 க்கு தான் வாங்கப்படுகிறது. கிடைக்கும் விலைக்கு விற்றால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். சில விவசாயிகள், மக்களுக்கு இலவசமாக கேரட்டுகளை அள்ளிகொடுத்து வருகின்றனர். சென்றவாரம், மனவிரக்தி அடைந்த விவசாயிகள் சிலர் கேரட்டுகளை சாலையில் கொட்டிவிட்டு வந்தனர்." என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் விவசாயிகள் சங்க பிரதிநிதி ஆர். ரங்கசாமி.

"பணியாளர்களை தோட்டத்திற்கு அழைத்து வர சொந்த வாகனங்களை அனுப்பி, எப்படியாவது கேரட்டுகளை அறுத்துவிடலாம் என முயற்சித்தோம். தனிமனித இடைவெளியை காரணம் காட்டி காவல்துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. தனித்தனியாக ஜீப் வைத்து தொழிலார்களை அழைத்து வருவதும் சாத்தியமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தது 25 முதல் 30 பணியாளர்கள் கேரட்டுகளை எடுத்து, கழுவும் பணிகளுக்கு தேவைப்படுவார்கள். ஊட்டியில் பல நூறு தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்."

ஊரடங்கால் அவர்கள் அனைவரும் தற்போது வேலையிழந்துள்ளனர். கேரட்டுகளை எடுக்க பணியாளர்கள் இல்லாததால் பல விவசாயிகளின் தோட்டத்தில் கேரட்டுகள் அழுகிய நிலையில் கிடக்கிறது. இதே நிலைதான் பீட்ரூட் விவசாயிகளுக்கும். இந்த நிலை எப்போது மாறும் எனத் தெரியவில்லை. ஆனால், தோட்டத்திற்கு பணியாளர்களை அழைத்து வருவதில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், கிடைக்கும் விலையில் காய்கறிகளை விற்று வருவாய் இழப்பை குறைத்துக்கொள்வோம்" என்கிறார் இவர்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஊட்டி மலைக்காய்கறி விவசாயிகள்

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டிருப்பதால், நெருக்கடிகள் மேலும் அதிகத்திருப்பதாக கூறுகிறார் விவசாயி கே. சுரேந்திரன்.

"ஊரடங்கிற்கு முன்பு, அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை மேட்டுப்பாளையம் சந்தை இயங்கும். மீதமாகும் கேரட் மூட்டைகளை மாலையில் கோயம்பேடு சந்தைக்கு விற்றுவிடுவோம். இதனால், காய்கறிகள் தேங்கும் நிலை உருவாகாது. தற்போது, கோயம்பேடு சந்தை முடங்கியிருப்பதால், உள்ளூர் சந்தைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மேலும், ஊரடங்கின் காரணமாக பணப்புழக்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 'காய்கறிகள் விற்றால் மட்டுமே பணம் தர முடியும்' என வியாபாரிகள் விவசாயிகளிடம் கூறுகின்றனர். இந்த நிலையில் நீலகிரியில் மழைப்பொழிவு அதிகரித்தால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகளின் நிலை மேலும் மோசமாகிவிடும்." என தெரிவிக்கிறார் இவர்.

ஊரடங்கு காலத்தில் வேளாண் தொழில்களுக்கும், அதை சார்ந்த போக்குவரத்துக்கும் அரசு அனுமதி அளித்திருந்தாலும், காவல்துறையினரின் கெடுபிடி, சந்தைகளில் உள்ள நேரக்கட்டுப்பாடு மற்றும் மிகக்குறைந்த அளவிலான நுகர்வு ஆகிய பிரச்சனைகளை கருத்தில்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிதி உதவி வழங்கிட அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் ஊட்டியைச் சேர்ந்த விவசாயிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: