விஜய் மல்லையா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் ரத்து

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: முன்னணி தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கம்
வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.
அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.
ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.
காங்கிரஸ் கண்டனம்
ஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 'வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக-வின் நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது' என்று தெரிவித்துள்ளார்.
'பிரதமர் பதிலளிக்க வேண்டும்'
காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுா்ஜேவாலா காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பிரதமர் நரேந்திர மோதி அரசின் தவறான கொள்கைகளை இந்த விவகாரம் பிரதிபலிக்கிறது. தொழிலதிபர்களின் கடன்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக பிரதமர் மோதி விளக்கமளிக்க வேண்டும்'' என்றார்.
-இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
இந்து தமிழ் திசை: கொரோனா வைரஸ் - இந்தியர்களை மீட்க நடவடிக்கை

பட மூலாதாரம், SOPA IMAGES
கொரோனா வைரஸால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஏர் இந்தியாவின் விமானங்கள், கடற்படையின் கப்பல்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றன என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
வெளிநாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள், கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அந்தந்த நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். சீனா, இரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏற்கெனவே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது பெரும்பாலான நாடுகள் விமான சேவையை முற்றிலுமாக நிறுத்திவிட்டதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிகமாக உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து கேரள அரசின் இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்கு உதவுமாறு கேரள அரசு தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ''வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பான விரிவான திட்டத்தை தயாரித்து வருகிறோம். இதற்காக ஏர் இந்தியாவின் விமானங்கள், கடற்படை கப்பல்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
துபையில் பணியாற்றும் இந்திய தூதர் விபுல் கூறும்போது, ''டெல்லியில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தொழிலாளர்களை எவ்வாறு இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். டெல்லியில் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் குறித்து ஆன் லைன் வாயிலாக விவரங்களை சேகரிப்போம். ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்'' என்றார்.
கடற்படை கப்பல்கள்
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க கடற்படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. ''வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஐஎன்எஸ் ஜலாஸ்வா மற்றும் கடற்படையை சேர்ந்த 2 சரக்கு கப்பல்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் கப்பல்கள் வளைகுடாவுக்கு புறப்படும்'' என்று கடற் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ''மே 3-ம் தேதி வரை சர்வதேச, உள்நாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சார்பில் சிறப்பு விமானங்களை இயக்க தயாராக உள் ளோம். ஏற்கெனவே சீனா, இத்தாலி, இரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்துள்ளோம். எங் களது விமானங்கள் தயார் நிலை யில் உள்ளன. மத்திய அரசு உத்தரவு கிடைத்தவுடன் வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் பறக்கும்'' என தெரிவித்தன.
தினத்தந்தி: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
ஊரடங்கு காலத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் சாத்தியமா? என மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன் அடையும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வக்கீல்கள் ரீபக் கன்சால், சஞ்ஜய் குமார் விசன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் நேற்று காணொலி மூலம் விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
முன்கூட்டியே அமல்படுத்த முடியுமா?
மத்திய அரசு ஏற்கனவே ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூன் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்து வருகிறது. இதில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.
இருப்பினும் தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவும் வகையில் இந்த திட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த முடியுமா? என்று மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












