கொரோனா வைரஸ்: சீனாவின் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களின் ஆர்டரை ரத்து செய்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான, சுமார் ஐந்து லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்களுக்கான (rapid testing kit) ஆர்டர்களை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் பரிசோதனைக் கருவிகள் மோசமான தரத்தில் உள்ளன என்பதால் அவற்றை பரிசோதனைக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசு கடந்த வாரம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் ரத்தத்தில், உடலுக்கு வெளியே உள்ள பிற பொருட்கள் (antibodies) ஏதாவது உள்ளனவா என்பதை சுமார் 30 நிமிட நேரத்தில் இந்தக் கருவிகள் காட்டும்.
மறுக்கும் சீனா
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக கூறுவதை சீன அரசு மறுத்துள்ளது.
"சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களின் தரத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். சீனப் பொருட்கள் சரியாக செயல்படாது என்றும் தரம் குறைவானது என்றும் சில நபர்கள் முன் முடிவுகளுடன் பேசுவது நியாயமற்றது மற்றும் பொறுப்பற்றது," என்று இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜீ ரோங் செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருவிகள் நேரடியாக கொரோனா வைரஸ் இருக்கின்றனவா இல்லையா என்பதைக் கண்டறியாமல் மனித உடலில் வழக்கத்துக்கு மாறான வேறு ஏதாவது பொருள், அதாவது ஆன்டிபாடீஸ், உள்ளதா என்பதையே கண்டறியும் என்பதால் இவற்றை பரிசோதனை செய்யப் பயன்படுத்துவது எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
போதிய அளவிலான எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படவில்லை என்ற காரணத்தால் இந்த கருவிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு இந்திய மாநில அரசுகளும் தொடர்ந்து வலியுறுத்தின.
தொடக்கத்தில் அதற்கு அனுமதி அளிக்காத இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திய பின்பு இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து இவற்றை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்த தொடங்கிய பின்பு அவற்றின் துல்லியம் வெறும் 5% மட்டுமே இருப்பதாக புகார் எழுந்தது.
ஏற்கனவே வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கூட அவர்களுக்கு கோவிட்-19 இல்லை என்பதை காட்டும் வகையிலேயே இந்த கருவிகளின் முடிவுகள் இருந்தன.
அதன் பின்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட பரிசோதனைகளும் அவை தரம் குறைவாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சனைகளுக்கு நடுவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அதிகமான விலை கொடுத்து இந்த கருவிகளை வாங்கியதாக சர்ச்சை உருவானது.
இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இவற்றின் விலை அதிகபட்சமாக 400 ரூபாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு திங்களன்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது சீன நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்பணமாக எந்தத் தொகையும் கொடுக்கப்படும் முன்பே ஒட்டுமொத்த ஆர்டரையும் ரத்து செய்துவிட்டதால் இந்திய அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்தியாவின் அண்மை நிலை?
- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஊநீரில் உள்ள எதிர்ப்பொருள் மூலம் கோவிட் - 19க்கு அளிக்கப்படும் சிகிச்சை (பிளாஸ்மா சிகிச்சை) இன்னும் தொடக்கநிலையிலேயே இருப்பதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் செவ்வாய் மாலை தெரிவித்துள்ளது.
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 937 ஆகியுள்ளது என அந்த அமைச்சகம் செவ்வாய் மாலை 6 மணியளவில் தெரிவித்துள்ளது
- இதுவரை 70,27 பேர் குணமடைந்துள்ளனர். 22,010 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பேர் இறந்துள்ளனர்.
- இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்துள்ளவர்கள் விகிதம் 23.3% ஆக உள்ளது.
- இந்தியா முழுவதும் 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
- மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
- இதுவரை இந்தியாவில் பதிவான 937 மரணங்களில் 743 பேர் மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இறந்துள்ளனர்.
- கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக 10.9 நாட்கள் ஆவதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












