லூடோ விளையாட்டில் தோற்றதால் மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
ஆன்லைன் விளையாட்டில்தோற்றதால்மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் - டைம்ஸ் ஆப் இந்தியா
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வீடுகளில் செய்வதறியாது முடங்கியுள்ளனர். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் ஆன்லைனில் லூடோ கேம் விளையாட முடிவு செய்தனர்.
இந்த விளையாட்டில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியின் முதுகெலும்பில் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதுகெலும்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சிகிச்சை அளிக்கும் குஜராத்தின் வதோதரா மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமா அல்லது சமரசம் செய்ய விரும்புகிறீர்களா ? என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன நல ஆலோசகர்கள் கேட்டறிந்தனர். தவறை ஒப்புக்கொண்டு கணவன் மன்னிப்பு கோரியதால், சிகிச்சை முடிந்து தனது பெற்றோர்களுடன் சில நாட்கள் தங்கி விட்டு வீடு திரும்புவதாக அந்த பெண் கூறியுள்ளார்.
ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் மன நல ஆலோசகர்கள் சில அறிவுரை வழங்கி வருகின்றனர் என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடுகிறது.
கோயம்பேடு மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுமா ? - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், TWITTER
கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேட்டில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து வரும் லாரி ஓட்டுநர் எப்போதும் இவர் கடைக்கு வருவதுண்டு, எனவே அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சலூன் கடைக்கு வந்து சென்ற 32 பேரை கண்டுபிடித்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் முடிவுகள் வெளிவரவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக துணை முதல்வர் ஓ பன்னிர்செல்வம் கோயம்பேடு மார்க்கெட்டை 3 இடங்களில் பிரித்து செயல்படுத்தப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
மாதவரம், கேளம்பாக்கம் மற்றும் கோயம்பேடு என மூன்று இடங்களில் மார்க்கெட்டை பிரித்து விற்பனையில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள விற்பனையாளர்களை சிலரை அருகில் உள்ள பள்ளிகள் அல்லது ஏதேனும் விளையாட்டு மைதானங்களில் கடைகள் அமைக்க அறிவுறுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபாட்டிலில் உள்ள மதுவை எலிகள் குடித்துவிட்டன : மதுக்கடை கண்காணிப்பாளர் - தினகரன்

பட மூலாதாரம், Getty Images
ஊரடங்கு எதிரொலியால் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கடைக்குள் புகுந்து 78 மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக திருமலையில் உள்ள மதுக்கடை கண்காணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு மதுக்கடை கண்காணிப்பாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
எனவே ஆந்திரா மாநில அரசு மதுக்கடைகள் மற்றும் பார்களில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு கடையில் எவ்வளவு இருப்பு இருந்தது? தற்போது எவ்வளவு உள்ளது? என்பது குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டது.
இதன் காரணமாக ஆந்திர மாநில கலால் துறை போலீசார் மதுக்கடைகள் மற்றும் பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரகாசம் மாவட்டம், அந்தங்கி மண்டலத்தில் 30 மதுக்கடைகள் உள்ளது. இதில் 13 கடைகளில் இருப்பை காட்டிலும் மதுபாட்டில்கள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இதில் ஒரு கடையில் 78 மதுபாட்டில்களை எலிகள் கடித்து மதுபானங்களை குடித்துவிட்டதாக கண்காணிப்பாளர் கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து மதுக்கடை கண்காணிப்பாளர் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி அவரிடம் எலிகள் கடித்து குடித்ததாக கூறப்பட்ட மதுபாட்டில்களுக்கான பணத்தை அரசுக்கு செலுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதை மறைக்க ஆளுங்கட்சியினர் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக நாடகம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?
- சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம்
- ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் இந்திய அரசுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பு இல்லை - மத்திய அரசு விளக்கம்
- கர்ப்பிணிக்கு தேவைப்பட்ட அரியவகை ரத்தம் - உதவி செய்த புதுச்சேரி காவலர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












