கொரோனா வைரஸ்: ரேபிட் டெஸ்ட் கிட் - அதிக விலை கொடுத்து வாங்கியது குறித்து இந்திய அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கிய விவகாரத்தில் இதுவரை எந்தத் தொகையும் அளிக்கப்படவில்லை; இதனால் இந்திய அரசுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பு ஏற்படவில்லையென மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
"கொரோனாவைத் தடுப்பதில் சோதனைகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதைச் செய்ய அதற்கான கிட்களை வாங்கி மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்த கிட்களை வாங்க எல்லா நாடுகளும் தங்களுடைய பணபலம், ராஜதந்திர வலு ஆகியவற்றை முழுவீச்சில் பயன்படுத்திவருகின்றன.
இந்த கிட்களை வாங்க ஐசிஎம்ஆர் முதலில் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரவில்லை. இரண்டாவது முறையாக முயன்றபோது, போதுமான அளவில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இவற்றில் பயோமெடிமிக்ஸ், வோன்ட்ஃபோ ஆகிய இரு நிறுவனங்களிலிருந்து கிட்களை வாங்குவதென முடிவுசெய்யப்பட்டது. இவை இரண்டுக்கும் சர்வதேச தரச்சான்றிதழ் இருந்தது.
வோன்ட்ஃபோலிருந்து 1,204, 1200, 844, 600 என நான்கு விதமான விலைகள் கிடைக்கப்பெற்றன. இதில் குறைந்த விலையான 600 என்பது தேர்வுசெய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் வோன்ஃபோவிடமிருந்தே நேரடியாக வாங்கவும் ஐசிஎம்ஆர் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அதில் சில பிரச்சனைகள் இருந்தன. முதலாவதாக, அவற்றைக் கொண்டுவந்து சேர்ப்பது குறித்த உறுதி தரப்படவில்லை. எவ்வித உறுதியுமின்றி 100 சதவீத பணத்தை முன்பே தரவேண்டும் என்றார்கள். காலக்கெடு குறித்த வாக்குறுதி இல்லை. விலையை அமெரிக்க டாலரில் குறிப்பிட்டிருந்தார்கள். டாலர் விலை ஏற்ற - இறக்கம் குறித்த தெளிவு இல்லை.
ஆகவே கிட்களை கொண்டுவந்து சேர்க்க பொறுப்பேற்றுக்கொண்ட வோன்ஃபோவின் இந்திய விநியோகஸ்தரைத் தொடர்புகொண்டோம். அவர்கள் முன்கூட்டிய தொகை எதையும் கேட்கவில்லை.
இந்திய அமைப்பு ஒன்று இம்மாதிரி கிட்களை வெளிநாட்டிலிருந்து வாங்குவது இதுவே முதல் முறை. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலை என்பது ஒரு குறியீட்டு அளவுதான்.
இந்த ஆர்டரில் ஒரு பகுதி வந்து சேர்ந்த பிறகு, அவை களத்தில் ஐசிஎம்ஆரால் பரிசோதிக்கப்பட்டன. ஆனால், அவை சரியாக செயல்படவில்லையென்பது தெரியவந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த கிட்களுக்காக ஐசிஎம்ஆர் இதுவரை எந்தப் பணத்தையும் தரவில்லை. 100 சதவீத பணம் முன்கூட்டியே கொடுக்கப்படாததால், இந்திய அரசுக்கு இதனால் ஒரு ரூபாய்கூட இழப்பில்லை" என இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இதற்கிடையில், இந்த கிட்களை பயன்படுத்த வேண்டாம் என மாநிலங்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுத்து செய்யப்படும் ஆர்டி - பிசிஆர் சோதனையே சிறப்பான முடிவுகளைத் தருகின்றன என்றும் அவற்றையே தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
சில மாநிலங்கள் துரித சோதனை தொகுப்புகளை வாங்கியிருப்பதாகவும் அவற்றின் கோரிக்கையின் பேரில் ஐசிஎம்ஆரும் வாங்கியிருப்பதாகவும் ஆனால், அவை சரியாக செயல்படவில்லையென தெரியவந்தருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
குவான்ஸோ வோன்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸான் டயக்னாஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சப்ளை செய்த ரேபிட் கிட்களின் முடிவுகளில் பெரும் வேறுபாடுகள் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை மாநிலங்கள் நிறுத்த வேண்டுமென்றும் மீதமிருக்கும் கிட்களை வாங்கியவர்களிடமே திரும்பி அளித்துவிட வேண்டுமென்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












