கொரோனா வைரஸ்: மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - பிரதமர் நரேந்திர மோதி முதல்வர்களிடம் கூறியவை

கொரோனா வைரஸ்: மே 3ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - முதல்வர்களிடம் என்ன பேசினார் பிரதமர்?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோதி, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய தகவல்களைக் கீழே தொகுத்தளித்துள்ளோம்.

  • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை நல்ல பலனை கொடுத்துள்ளது. இதன் மூலம், கடந்த ஒன்றரை மாதங்களில் ஆயிரக்கணக்கானோரின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அபாயம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளதால், தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.
  • நாம் இரண்டு விதமான முடக்க நிலைகளை பார்த்துவிட்டோம். எனவே, அடுத்த கட்டத்தை குறித்து யோசிக்க வேண்டும். வல்லுநர்களின் கருத்துப்படி, அடுத்து வரும் மாதங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர கூடும்.
  • சமூக விலகலை நாம் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். முகக்கவசங்கள், முக உறைகள் போன்றவை அடுத்து வரும் நாட்களிலும் நமது இயல்பு வாழ்க்கையின் அங்கமாக இருக்கும்.
  • கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலமாகவும், பிறகு அதை பச்சை மண்டலமாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டு மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
  • கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் அதே வேளையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேவையான இடங்களில் தொழில்நுட்பத்தின் உதவியை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
  • அதே சூழ்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சேது செயலியை’ இன்னும் அதிகளவிலான மக்கள் பயன்படுத்த வேண்டும்.
  • கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான ஆராய்ச்சியில் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் பங்கெடுத்து கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
  • வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து திட்டமிடும்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சிரமமோ, அச்சுறுத்தலோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
Banner image reading 'more about coronavirus'
Banner

நான்காவது கூட்டம்

கொரோனா வைரஸ் தொடர்பாக இந்திய பிரதமரின் தலைமையில் முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவது இது நான்காவது முறையாகும்.

கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவில் முடக்க நிலை அமலில் இருந்து வருகிறது. முதலில் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பின்னர் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

முதல்முறையாக நாட்டில் முடக்க நிலை அமல்படுத்துவதற்கு முன்னதாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 20ஆம் தேதியன்று ஆலோசனை நடத்தினார்.

அதேபோல் கடந்த ஏப்ரல் 2, 11-ஆம் தேதியன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: