கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

கொரோனா பாதிப்பிற்கு முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தை மையப்படுத்தி மொத்த சமூகத்தையும் குறை சொல்லாதீர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொண்ட சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதில் அந்தந்த ஊர்களில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று பரவியது.

நோய் தொற்று பரவியது குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது. மேலும் பாரபட்சம் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி செய்யுங்கள் எனவும் கூறினார்.

நாக்பூரில் இருந்து இணையம் மூலம் நடத்தப்பட்ட அக்ஷயதிருத்தியை குறித்து பேசிய மோகன் பகவத், ''130 கோடி இந்தியர்களும் ஒன்றே, நாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்''. தப்லீக் ஜமாத் என்ற பெயரை குறிப்பிடாமல் பேசிய மோகன் பகவத், இருந்து சமூகத்தை சேர்ந்த மூத்தவர்களும் முன்வந்து மக்கள் மனதில் உள்ள தவறான புரிதல் குறித்து பேசி புரிய வைக்க முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பால்கர் சம்பவம் குறித்து பேசிய மோகன் பகவத், கிராமவாசிகள் சட்டத்தை கையில் எடுத்திருக்கக்கூடாது. யாராக இருந்தாலும் ஒருவரை அடித்து கொலை செய்வது தவறு எனவும் குறிப்பிட்டார்.

Presentational grey line

பேஸ்புக், இன்ஸ்டாகிரம் மூலம் 100 பெண்களை அச்சுறுத்திய இளைஞர்:லேப்டாப், செல்ஃபோன் பறிமுதல் - தினகரன்

பேஸ்புக், இன்ஸ்டாகிரம் மூலம் 100 பெண்களை அச்சுறுத்திய இளைஞர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேஸ்புக், இன்ஸ்டாகிரம் மூலம் 100 பெண்களை அச்சுறுத்திய இளைஞர்

சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி, பல இளம் பெண்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்து வந்த இளைஞர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் மூலம் பல பெண்களுடன் பேசி தொடர்பில் இருந்த இளைஞர் மீது சென்னை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்ததன் அடிப்படையில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுஜியின் சமூக வலைத்தள பக்கங்களை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்ததில், காசி, சுஜி என பல பெயர்களில் போலி கணக்குகளை வைத்திருப்பது தெரியவந்தது. இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள காசியின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையின் மூலம் சுஜியின் தந்தை நடத்தும் கோழிப்பணையில் இருந்தும் லேப்டாப்கள், செல்லிடப்பேசிகள், இரண்டு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்களை சைபர் கிரைம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் என தினகரன் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

Presentational grey line

மேற்கு வங்க அரசுக்கு எதிராக பா.ஜ.க வினர் உள்ளிருப்புப் போராட்டம் - தினமணி

கொரோனா பாதிப்பிற்கு முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்:ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா பாதிப்பிற்கு முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்:ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மேற்கு வங்கத்தில் மாநில அரசாங்கம் கொரோனா பரவுவது குறித்த எந்த தகவல்களையும் வெளிப்படையாக கூறுவதில்லை, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க பா.ஜ.க.வினர் பலர் தங்கள் வீடுகளிலேயே பதாகைகள் ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் சில கட்சி தொண்டர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளில் மேல் தளத்தில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று குறித்த உண்மை நிலவரங்களை மாநில அரசாங்கம் மறைக்கிறது என மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார் என தினமணி நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: