கொரோனா வைரஸ்: மலேசியாவில் கோவிட் 19 பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்தது

மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை.

பலி எண்ணிக்கை 98ஆக நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நூறு நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,862 நோயாளிகள் கோவிட் 19 பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

தற்போது 1,820 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவர்களில் 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் 21,466 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்நடவடிக்கையின் மூலம் 638 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். நோய் தொற்றியோரில் 388 பேர் வெளிநாட்டினர் என்றும் மற்றவர்கள் மலேசியர்கள் என்றும் அவர் கூறினார்.

ஆணையை மீறுபவர்களை அடைக்க 11 தற்காலிக சிறைகள்:

ஆணையை மீறுபவர்களை அடைக்க 11 தற்காலிக சிறைகள்

பட மூலாதாரம், Getty Images

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக கைதானவர்கள் தற்போது சிறப்புச் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இத்தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் என்றும், அதன் காரணமாக தண்டனையை அனுபவிக்க சிறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோரை அடைப்பதற்காக மலேசிய உள்துறை அமைச்சு 11 சிறப்புச் சிலைகளை திறந்துள்ளது. அவை தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன.

ஆணையை மீறுபவர்களை அடைக்க 11 தற்காலிக சிறைகள்

பட மூலாதாரம், Getty Images

இதுவரை 58 பேருக்கு நீதிமன்றம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியததற்காக தண்டனை வழங்கியுள்ளது. அவர்கள் தற்காலிகச் சிறைக்கு அனுப்பப்படுவதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள சிறைச்சாலைகளில் புதிதாக சிலரை அனுமதித்தால் வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், தற்காலிக சிறைகளை ஏற்பாடு செய்துள்ளது மலேசிய அரசு. மேலும் அரசு ஆணையை மீறியதற்காக சிறையில் அடைக்கப்படுபவர்கள் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 5ஆக குறைந்தது

மலேசிய அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தீவிர வைரஸ் தொற்று பாதிப்புள்ள மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தற்போது ஆபத்து இல்லாத பச்சை மண்டலங்களாக மாறியுள்ளன.

நாடு முழுவதும் 1,200 பகுதிகளை மலேசிய சுகாதார அமைச்சு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவற்றுள் 40 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவை சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டன.

சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 5ஆக குறைந்தது

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் கடந்த 38 நாட்களாக அமலில் உள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது 1,200 பகுதிகளில், ஐந்து மட்டுமே சிவப்பு மண்டலங்களின் பட்டியலில் நீடிக்கின்றன. மற்ற அனைத்துமே பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

20 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவை ஆரஞ்சு மண்டலங்களாகவும், 20க்கும் குறைவான நோயாளிகள் உள்ள பகுதிகள் மஞ்சள் மண்டலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ரோஹிஞ்சா அகதிகள்: மலேசிய அரசு மனிதநேயத்துடன் செயல்பட வலியுறுத்து

ரோஹிஞ்சா அகதிகள் விவகாரத்தில் மலேசிய அரசு மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் என சுவாராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

கடந்த 16ஆம் தேதி ரோஹிஞ்சா அகதிகளுடன் வந்த படகு மலேசிய கடற்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இது மனிதநேயமற்ற செயல்பாடு என அத்தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்பாட்டில் மலேசியா கையெழுத்திடவில்லை என்றாலும், மனிதநேயத்தின் பேரில் ஒரு பொறுப்பைக் கொண்டுள்ளது என்று சுவாராம் கூறியதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியோருடன் வந்த இரு கப்பல்களை கியூபா அரசு மனிதநேய அடிப்படையில் தங்கள் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அத்தொண்டு நிறுவனம், ரோஹிஞ்சா அகதிகளுடன் வந்த படகை நியாயமான காரணமின்றி மலேசிய அரசு திருப்பி அனுப்பியதாகவும், இதன் மூலம் 200 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மலேசியாவின் நடவடிக்கை மனிதநேயமற்ற ஒரு செயல் என்றும் சுவாராம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

சிங்கப்பூர் நிலவரம்:

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,624ஆக அதிகரிப்பு

சிங்கப்பூர் நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

சிங்கப்பூரில் புதிதாக 931 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,624ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக நோய்த் தொற்றியோரில் 15 பேர் சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை உள்ளவர்கள் ஆவர். மற்ற அனைவரும் தங்குவிடுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: