கொரோனா வைரஸ்: மிகக் கூடுதலான விலைக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனாவுக்கான 'துரித சோதனைத் தொகுப்பு'களை (Rapid Test Kit) சீனாவிலிருந்து இந்தியா வாங்கும்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாடும் இதே கூடுதல் விலைக்கு இவற்றை வாங்கியுள்ள நிலையில், தில்லி உயர்நீதிமன்றம் இவற்றின் விலையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசு கொரோனா சோதனைகளைப் பெரிய அளவில் நடத்துவதற்காக துரித சோதனைத் தொகுப்புகளை பெரும் எண்ணிக்கையில் வாங்குவதற்குத் திட்டமிட்டது. ஐசிஎம்ஆர் மூலம் இவற்றை வாங்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் 27ஆம் தேதியன்று ஐசிஎம்ஆர் ஐந்து லட்சம் துரித சோதனைத் தொகுப்புகளை வாங்குவதற்கான ஆர்டரை செய்தது. இந்தத் தொகுப்புகள் சீன நிறுவனமான வோன்ட்ஃபோவால் தயாரிக்கப்பட்டவை.
இந்த துரித சோதனைக் கிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வது மேட்ரிக்ஸ் என்ற நிறுவனம். மேட்ரிக்ஸ் நிறுவனம் 245 ரூபாய் என்ற விலையில் இவற்றை இறக்குமதி செய்து, ரியல் மெடபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மசூட்டிகல்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பும். இந்த நிறுவனங்கள், ஐசிஎம்ஆர்-க்கு ஒரு கிட்டை 600 ரூபாய் விலைக்குக் கொடுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
மேட்ரிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்யும் கிட்களை எல்லாம் தங்களுக்கே தர வேண்டுமென ரியல் மெடபாலிக்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. அவற்றின் விநியோக உரிமை ஆர்க் பார்மசூட்டிகல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக (டிஎன்எம்எஸ்சி) ஷான் பயோடெக் என்ற நிறுவனத்தின் மூலமாக மேட்ரிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கிட் 600 ரூபாய் என்ற விலைக்கு 60,000 கிட்களை ஆர்டர் செய்தது.
இப்படி இன்னொரு விநியோகிஸ்தா் மூலமாக மேட்ரிக்ஸ் நிறுவனம் துரித சோதனை கிட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கோரி ரேர் மெடபாலிக்ஸ் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. தங்களுக்கு வந்துசேர வேண்டிய முழுத் தொகையும் வரவில்லையென மேட்ரிக்ஸ் நிறுவனம் கூறியது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், மிக அதிகமான லாபம் வைத்து இந்த கிட்கள் அரசுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
மார்ச் 25ஆம் தேதி ரேர் மெடபாலிக்ஸ் நிறுவனம் 10 லட்சம் WONDFO SARS CoV-2 கிட்களை இறக்குமதி செய்ய விரும்புவதாகவும் அவை எவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்றும் மேட்ரிக்ஸ் நிறுவனத்திடம் கேட்டது.
இதற்குப் பிறகு, மார்ச் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐசிஎம்ஆர் அமைப்பு, ரேர் மெடபாலிக்ஸ் நிறுவத்திடமிருந்து விநியோக உரிமையைப் பெற்றிருந்த ஆர்க் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் ஒரு கிட் 600 ரூபாய் என்ற விலையில், 5 லட்சம் கிட்களை ஆர்டர் செய்தது. இவற்றின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஐந்து லட்சம் கிட்களில் 2.76 லட்சம் கிட்கள் ஏற்கனவே சப்ளை செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 2.24 லட்சம் கிட்கள் வரவேண்டியிருந்தன. இந்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் ரேர் மெடபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தன. மேட்ரிக்ஸ் இறக்குமதி செய்யும் கிட்களை தங்கள் மூலமாகவே விநியோகம் செய்ய வேண்டுமென்றும் இந்த ஐந்து லட்சம் கிட்களுக்கான தொகையாக 12.75 கோடியை ஏற்கனவே மேட்ரிக்ஸிற்குத் தந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டின.
வோன்ஃபோ தயாரிக்கும் இந்த துரித கிட்டின் விலை 3 அமெரிக்க டாலர். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 75 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், ஒரு கிட்டின் விலை இந்திய மதிப்பில் 225 ரூபாய். அவற்றை இங்கு கொண்டுவரும் செலவு ஒரு கிட்டிற்கு 20 ரூபாய். ஆக மொத்தம் ஒரு கிட்டின் அடக்க விலை 245 ரூபாய்.
ஆகவே 5,00,000 கிட்களின் அடக்கவிலை 12 கோடியே 25 லட்ச ரூபாய். இதனை 21 கோடி ரூபாய்க்கு அதாவது 41 சதவீத லாபத்தில் மேட்ரிக்ஸ் நிறுவனம் ரேர் மெடபாலிக்ஸிற்கு சப்ளை செய்யும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மேட்ரிக்சிற்கு 7.75 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
இப்படி 21 கோடி ரூபாய்க்கு வாங்கிய 5 லட்சம் கிட்களை, ரேர் மெடபாலிக்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய்க்கு ஆர்க் பார்மசூடிகல்ஸ் மூலமாக ஐசிஎம்ஆர்-க்கு விற்பனைசெய்யும். அதாவது, கூடுதலாக ஏதும் செய்யாமல் 9 கோடி ரூபாய் லாபம் ஆர்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்திற்குக் கிடைக்கும்.
இந்த டெஸ்ட் கிட்களின் முதல் பகுதி அதாவது 2.76 லட்சம் கிட்கள் ஏப்ரல் 17ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. இவற்றுக்கான பில்களை ஆர்க் பார்மசூட்டிகல்ஸ் அனுப்பிவிட்டாலும் ஐசிஎம்ஆர் இன்னும் பணம் கொடுக்கவில்லை. ஐசிஎம்ஆர் பணம் கொடுத்ததும் அந்தப் பணத்தை மேட்ரிக்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்துவிடுவதாக ஆர்க் பார்மசூடிகல்ஸ் மற்றும் ரேர் மெடபாலிக்ஸ் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், 2.76 லட்சம் கிட்களுக்கு மட்டுமல்லாமல், ஆர்டர் செய்த 5 லட்சம் கிட்களுக்கும் பணத்தைக் கொடுக்க வேண்டுமென மேட்ரிக்ஸ் கோரியது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஸ்மி வஸிரி 225 ரூபாய்க்கு வாங்கும் ஒரு கிட்டை 400 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என ஆணையிட்டார்.
தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, "ஐ.சி.எம்.ஆர். ஆர்டர் செய்த கிட்களில் மீதமுள்ள 2.24 லட்சம் கிட்கள் இந்தியாவுக்கு வந்த உடனேயே அவற்றை அரசுக்கு அனுப்பிவிட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
மொத்தத் தொகையான 21 கோடி ரூபாயில் 12.75 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள எட்டேகால் கோடி ரூபாயை ஐசிஎம்ஆரிடமிருந்து வந்தவுடன் இறக்குமதியாளருக்குத் தந்துவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஷான் பயோடெக் மூலமாக ஆர்டர் செய்த கிட்களில் 26,000 கிட்கள் சப்ளைசெய்யப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 24,000 கிட்களை அவை இங்கு வந்துவுடன் மாநில அரசுக்கு நேரடியாக அனுப்பிவிட வேண்டும்.
பெருந்தொற்று இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், 245 ரூபாய்க்கு வாங்கும் கிட்களை 155 ரூபாய் லாபம் வைத்து விற்பதே போதுமானது. நாட்டில் பொருளாதாரச் சுழற்சியே நின்று போயிருக்கிறது. மிக அவசரமாக பொதுமக்களிடம் விரிவான சோதனைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில், தனியாரின் லாபத்தைவிட, மக்களின் நலனே முக்கியம்.
ஆகவே ஒரு கிட்டை 400 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது. இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். இறக்குமதியாளரே நேரடியாக அரசிடம் இதனை சப்ளை செய்ய ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆகவே, மேலும் வரவிருக்கும் ஐந்து லட்சம் கிட்களில் 50,000 கிட்களை தமிழகத்திற்கென ஒதுக்கிவைத்துவிட வேண்டும். மீதமுள்ள 4,50,000 கிட்களை எந்த அரசுக்கோ, அரசு நிறுவனத்திற்கோ கொடுத்துவிடலாம்" என்று கூறியிருக்கிறது.
சட்டீஸ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களை ஒரு கிட் 337 ரூபாய் விலையில் வாங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு 600 ரூபாய்க்கு வாங்குவது ஏன் என கேள்வியெழுப்பப்பட்டபோது, ஐசிஎம்ஆர் அங்கீகரிக்கப்பட்ட விலையிலேயே அவற்றை வாங்குவதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்தது.
இப்போது, இந்த வோன்ட்ஃபோ துரித சோதனை கிட்களில் முடிவுகள் சரியாகத் தெரிவதில்லையென்று பல மாநிலங்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. இதனால், இரண்டு நாட்களுக்கு அவற்றின் பயன்பாட்டையே நிறுத்திவைத்தது ஐசிஎம்ஆர்.
இதற்குப் பிறகு, இந்த கிட்களை 'ஸ்க்ரீனிங் சோதனை'களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












