கொரோனா வைரஸ்: மலேசியாவில் பிறந்து இரு வாரங்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து மலேசியா அத்தொற்றிலிருந்து மீண்டு வரும் கட்டத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைதான் நாடு நோய்த்தொற்றிலிருந்து மீண்டுவர முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார். சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கை கழுவுதல், ஆகியவற்றை மக்கள் பின்பற்றுவதற்கு பொதுக் கட்டுப்பாட்டு ஆணை வெகுவாக உதவியுள்ளது என்றார் அவர்.
"மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்ததால் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக நோய்த்தொற்றுள்ள அபாயப் பகுதிகளில் கவனம் செலுத்துவது, பரவலாக பரிசோதனை மேற்கொள்வது, நோய்த் தொற்றியோரை அடையாளம் காண்பது, அவர்களைத் தனிமைப்படுத்துவது, நோய் சங்கிலித் தொடரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது எனப் பல்வேறு விஷயங்களில் நம்மால் கவனம் செலுத்த முடிந்தது.
"பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை திரும்பப் பெறப்பட்டாலும் மக்கள் தற்போது பின்பற்றும் அனைத்தையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை கோவிட் 19 நோயின் பிடியிலிருந்து மலேசியா விடுபட்டு விட்டதாக கருதமுடியாது என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் இந்நோய் குறித்து இன்னும் சில காலம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
மலேசியாவின் இன்றைய நிலவரம்
இந்நிலையில் மலேசியாவில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 75 நோயாளிகள் குணமடைந்திருப்பதாக நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,851, நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,032.
தற்போது 1,719 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 36 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 69 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் வாரத்தில் அல்லது மே மாத மத்தியில் மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்குக் குறையக்கூடும் என டாக்டர் நூர் ஹிஷாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் மக்கள் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாம் இவ்வாறு குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
"மலேசியா தற்போது கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்திலிருந்து மீண்டுவரும் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை விரைவில் ஒற்றை இலக்கத்துக்குக் குறையக்கூடும். பொதுமக்களின் ஒத்துழைப்போடு பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது," என்றார் நூர் ஹிஷாம்.
துணை அமைச்சருக்கு அபராதம் விதிப்பு
இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக மலேசிய சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு 1000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தம் மீதான குற்றச்சாட்டை துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அதிகபட்ச அபராதத் தொகையை செலுத்தவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் பேராக் மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பிறந்த குழந்தைக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. குழந்தையின் தாய்க்கு நோய்த் தொற்று இருப்பது இரு வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பிரசவமானது.
எனினும் பிரசவமான இரு வாரங்களுக்குப் பிறகு குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
எனினும் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதா அல்லது, வேறு காரணங்கள் உள்ளதா என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், பிரசவத்தின்போது சிக்கல்கள் ஏதும் எழவில்லை என்றார்.
சிங்கப்பூர் நிலவரம்
அந்நியத் தொழிலாளர்கள் 12,183 பேருக்கு கிருமித்தொற்று
சிங்கப்பூரில் இன்று புதிதாக 528 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14,951 ஆக அதிகரித்துள்ளது.
இன்று நண்பகல் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இத்தகவலை வெளியிட்டது. இன்று பதிவான சம்பவங்களில் 8 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்றும் மற்ற அனைவரும் தங்கு விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் அந்த அமைச்சு உறுதிபடுத்தியது.
சிங்கப்பூரில் சற்றேறக்குறைய 3,23,000 அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 12,183 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 3.77 விழுக்காடாகும்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,095 என்றும், 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள சுகதார அமைச்சு, வைரஸ் தொற்று இருந்த போதிலும் வேறு காரணங்களால் 4 நோயாளிகள் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுப் பரிசோதனையை சிங்கப்பூர் அரசு அதிகரித்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் தொழிலாளர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












