"டெல்லியில் உள்ள தமிழக முஸ்லிம்களை பார்த்துக்கொள்ளுங்கள்": முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழக முஸ்லிம்களை பார்த்துக்கொள்ளுங்கள்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரெஸ்: "தமிழக முஸ்லிம்களை பார்த்துக்கொள்ளுங்கள்"

டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முஸ்லிம்கள் 559 பேர் டெல்லியிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சரியாக கவனித்துக்கொள்ளுங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

''டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல முஸ்லிம்களுக்கு சக்கரை நோய் இருப்பதால், அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும். அங்குள்ளவர்கள் தங்களுக்கு காலதாமதமாக உணவு வழங்கப்படுவதாக புகார் அளிக்கின்றனர். எனவே இந்த புகாரை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் உணவு வழங்குமாறு'' தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அங்குள்ளவர்களுக்கு வேறு சில உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ உதவிகளை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையும் குறிப்பிட்டு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களையும் கொடுத்து உதவுமாறு என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தினகரன்: சென்னையில் நிழல் இல்லாத நாள்

சூரியன் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்யமாகி விடும். நிழல் சரியாக காலுக்கு கீழ் இருக்கும். இவ்வாறு ஓர் ஆண்டுக்கு இரு முறை நிகழும். சூரியன் 90 டிகிரியில் செங்குத்தாக வரும் போது ஒரு பொருளின் நிழல் நீளம் பூஜ்ஜியமாகிறது. அந்த நாளை நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்னையில் நேற்று 12:07 முதல் 12:30 மணிவரை நிழலின் நீளம் பூஜ்ஜியமாக இருந்தது என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியும் ஆகஸ்ட் 18ம் தேதியும் இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர்: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பட மூலாதாரம், ANI

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதில் 2 பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர் ஒருவரை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அச்செய்தி குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: