கொரோனா வைரஸ் பாதிப்பு: அனைத்து மதத்தினருக்கும் அடைக்கலம் தரும் ஆந்திர கோயில்கள்

ஸ்ரீகாளஹஸ்தி கோயில்
    • எழுதியவர், ஹ்ருதய விஹாரி
    • பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக

மனித வரலாற்றில் தற்போது புதிய சகாப்தம் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது.

இந்த சூழலில் பள்ளிகள் மற்றும் கோயில்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் இடங்ளாக மாறி வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் பிரபல கோயில்களான திருமலை-திருப்பதி, ஸ்ரீகாலஹஸ்தி, கனிபாகம் போன்ற சில கோயில் நிர்வாகங்கள் தங்களுக்கு சொந்தமான சில கட்டடங்களை கோவிட்-19 நோயாளிகளை தங்க வைக்கும் இடங்களாக மாற்றியுள்ளன. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், இங்கே தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்து , இஸ்லாமியர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சில வெளிநாட்டவர்களும் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிலர் இந்த கட்டடங்களில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

வருமானத்திலும் பக்தர்கள் கூட்டத்திலும் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் நிறைய தங்கும் விடுதிகளும் விருந்தினர் மாளிகைகளும் உள்ளன.

கோப்புப்படம்

அதில் ஸ்ரீனிவாசம் தங்கும் விடுதி மற்றும் மாதவம் தங்கும் விடுதி ஆகிய இரு விடுதிகள் முக்கியமானதாகும். மலையின் கீழிருக்கும் இரண்டு விடுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்குவார்கள். எப்போதும் பக்தர்களின் கூட்டத்தோடு இருக்கும் விடுதிகள் இவை.

ஸ்ரீனிவாசம் மற்றும் மாதவம் விடுதிகள் திருப்பதி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளன.

இவை தற்போது தங்க இடமில்லாத வெளி மாநில தொழிலாளர்களுக்கு முகாம் போல செயல்பட்டு வருகின்றன. சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் இந்த விடுதிகளில் அடைக்கலம் தரப்படுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இவர்களை தவிர கொரோனா காரணமாக திருப்பதியிலேயே தடை செய்யப்பட்டவர்களும் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விடுதிகளுடன், திருப்பதி ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணு நிவாஸம் எனும் மற்றொரு விடுதியையும் திருப்பதி தேவஸ்தானம் ஆந்திரப் பிரதேச அரசுக்கு ஏழைகள், வீடு இல்லாதவர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் உதவியற்றவர்களை தங்க வைக்க தற்காலிகமாக கொடுத்துள்ளது.

திருப்பதியில் ரேனிகுண்டா நெடுஞ்சாலைக்கு அருகே புதிதாக பத்மாவதி நிவாஸம் என்னும் விடுதி கட்டப்பட்டது. இப்போது கோவிட்-19 நோயாளிகள் தங்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அது மாறியுள்ளது. 500 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் தற்போது 200 கோவிட்-19 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட மருத்துவ அதிகாரி கூறுகிறார்.

டெல்லி மத வழிப்பாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் இங்கேதான் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் இவர்களை தனிமைப்படுத்தி வைக்க உதவியதோடு அவர்களுக்கு உணவும் அளிக்கிறது. சமீபத்தில் பத்மாவதி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட 56 வயதான பிரிட்டனை சேர்ந்த ஒருவர் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

தேவைப்படுவோருக்கு உணவும் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம். தினமும் 1.4 லட்சம் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. 500 பணியாளர்கள் தேவஸ்தானத்தில் இதற்காக வேலை செய்கின்றனர் என கூறியுள்ளார் திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ரவி.

கோப்புப்படம்

திருப்பதி தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு 1.4 லட்சம் பேருக்கு உணவு அளித்து வருகிறது. மதியம் 70,000 பொட்டலங்கள் மற்றும் இரவு 70,000 உணவு பொட்டலங்களை திருப்பதி நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறையிடமும் கொடுக்கிறார்கள். இது அனைத்து விடுதிகளிலும் இருப்பவர்களுக்கும் விநியோகிக்கப்படும். இந்த வேலைக்காக 500 பேர் காலை மதியம் என இரு வேலைகளில் மாறி மாறி வேலை செய்கின்றனர் என்கிறார் ரவி.

கனிப்பாகம் கோயில்

கனிப்பாகம் கோயில் இந்தியாவின் மிகப்பெரிய பிள்ளையார் கோயில்களில் ஒன்று. திருப்பதிக்கு அருகே உள்ள சித்தூரில் இது அமைந்துள்ளது. தனிமைப்படுத்துதலுக்காக 100 அறைகளைக் கொண்ட கணேஷ் சதன் எனும் கட்டடத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. நான்கு நாட்களில் கொரோனா இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் 40 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கோயில் அதிகாரி தேவுல்லு பிபிசியிடம் கூறினார்.

"எப்ரல் 1 முதல் ஏபரல் 4ஆம் தேதி வரை அரசுக்கு தனிமைப்படுத்துதலுக்கான விடுதியாக இந்த கணேஷ் சதனைக் கொடுத்தோம். ஆனால் இங்கே தங்க வைக்கப்பட்டவர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என தெரிய வந்த பிறகு அவர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு இங்கே யாரும் வரவில்லை" என்கிறார் தேவுல்லு.

ஆனால் ஒருசில நாட்களுக்கு முன்பு கனிப்பாகம் கோயில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான மையமாக மாறியதாகவும், அங்கே இஸ்லாமியர்கள் காலணிகளோடு நுழைவதாகவும் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது.

கொரோனா வைரஸ்

இந்த காணொளி உண்மையல்ல என்று கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக விஷ்ணுவர்தன் ரெட்டி என்பவரை சித்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் மதங்களுக்கு இடையே கலவரங்களை தூண்டுவது, அரசு ஊழியர்களை வருத்துவது போன்ற பல்வேறு வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

கணேஷ் சதனில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அது கோயில் கிடையாது கோயிலுக்கு சொந்தமான ஒரு தங்கும் விடுதி. முதலில் கனிப்பாகம் கோயிலுக்கு சொந்தமான விநாயக் சதன் எனும் கட்டடத்தைதான் அரசுக்கு கொடுப்பதாக இருந்தோம். ஆனால் கிராம மக்களின் பயத்தின் காரணமாக அது முடியவில்லை. கொரோனா தொற்று சமயத்தில் இருக்க வேண்டிய சமூக விலகல் என்பது இந்த கணேஷ் சதனில்தான் எளிதாக இருக்கும் என்று கூறினார் தேவுல்லு.

சித்தூரில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தனிமைப்படுத்தி வைத்திருந்தவர்களின் சோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்த பிறகு கணேஷ் சதனில் இருப்பவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் தற்போது அந்த கட்டடம் காலியாக உள்ளது.

கோப்புப்படம்

ஸ்ரீகாலஹஸ்தி

கணேஷ் சதனை அரசிடம் கொடுத்த கோயில் நிர்வாகத்தில் காலஹஸ்தியும் ஒன்று என்கிறார் கோயில் அறக்காவலர். ஆனால் அரசு சில நாட்களிலேயே வேறு இடத்திற்கு தனிமைப்படுத்துதலின் மையத்தை மாற்றியது.

கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் இடமாக ஸ்ரீகாலஹஸ்தி கோயிலின் கணேஷ் சதன் இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பிறகு மாற்றப்பட்டது. தற்போது வெர்பேடு எனும் இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். கணேஷ் சதனில் இருக்கும்போது பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

இவர்கள் அனைவருக்கும் காலஹஸ்தி கோயிலில் இருந்து உணவு அளிக்கப்பட்டது. இது மதங்களை கடந்து யோசிக்கும் தருணம் ஆகும். ஸ்ரீகாலஹஸ்தியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அங்கு வேலை செய்யும் சிலருக்கு கூட தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என தற்போது தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மண்டல வருவாய் அதிகாரி சரீனா பேகம் பிபிசியிடம் கூறியுள்ளார்.

கோப்புப்படம்

ஸ்ரீகாலஹஸ்தி கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கா சதன் எனும் விடுதியும் முன்னர் தனிமைப்படுத்துதலுக்காக அரசிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மையமும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என ஒரு அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

தற்போது சித்தூர் முழுவதற்கும் சிவப்பு நிற எச்சரிக்கை, அதாவது ஆபத்து மிகுந்த பகுதியாக உள்ளது. 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களின் கட்டிடங்களை அரசு தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றியுள்ளன. சாதி, மதம் என்று பாராமல் அனைத்து தரப்பினரும் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படுவோருக்கு ஏற்ப ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் பெரிய கோயில்களின் அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான கட்டடங்களை தனிமைபடுத்துதலின் மையமாக மாற்றுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: