கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.
பாரம்பரிய மூலிகைகளும் வைரஸ் தாக்குதல்களும்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அணுகுமுறைகளில், பாரம்பரிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளுமாறு குடிமக்களுக்குக் கூறும் யோசனையும் அடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏழு அம்சத் திட்டத்தைத் திரு. மோதி அறிவித்தார்.
அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட மூலிகை மருந்தை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி கூறியுள்ளார். ``காதா'' என்ற பெயரிலான அந்த மருந்து ``நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வைரஸுக்கு எதிராக போரிடும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுமே தவிர, இதுபோன்ற வழிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
``இதுபோன்ற (சில உணவு வகைகள் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்பது போன்ற) தகவல்களுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது தான் பிரச்சினை'' என்று யேல் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் துறையின் நிபுணர் அகிக்கோ இவசாகி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்குப் பாரம்பரிய கிச்சை முறைகளை இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதில் பல சிகிச்சை முறைகள் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கானது என குறிப்பாகச் சொல்லப்படுகிறது.
அவை அந்த வகையில் சிறப்பாக செயல்படும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.
இளஞ்சூடான நீரைக் குடிப்பது - அல்லது வினிகர் நீரில் அல்லது உப்பு கரைத்த நீரில் வாய் கொப்பளிப்பது தொடர்பான தகவல்கள் தவறானவை என்று இந்திய அரசின் உண்மை அறியும் பிரிவு நிரூபித்துள்ளது.
தேநீர் குடிப்பது இந்த நோயைத் தடுக்கும் என்ற பாரம்பரிய நிவாரணமாகக் கூறப்படும் விஷயத்தை நாங்கள் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். சீனாவில் உருவான போலியான இந்தத் தகவல் இந்தியா உள்படப் பல பகுதிகளில் பரவியுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

வைரஸ் தாக்கம் குறித்து இல்லாத ஓர் ஆய்வுக் கட்டுரை
இந்தியாவில் முடக்கநிலை அமல் செய்யாமல் போயிருந்தால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 0.8 மில்லியன் பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன என்று ABP News என்ற இந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மருத்துவத்தின் உயரதிகார அமைப்பான - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐ.சி.எம்.ஆர்.) - அது மேற்கோள் காட்டியிருந்தது.
இந்தியாவில் ஆளும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து மறுட்விட் செய்திருந்தனர்.
ஆனால் அதுபோல எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று இந்தியாவின் சுகாதார அமைச்சகம் கூறிவிட்டது. ஐ.சி.எம்.ஆரும் அதே கருத்தைக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், GoI
``முடக்கநிலை அமல் செய்ததால் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டது என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். எந்த ஆய்வும் நடத்தவில்லை'' என்று அதன் ஆராய்ச்சி மேலாண்மை மற்றும் கோட்பாட்டுப் பிரிவு பிராந்தியத் தலைமை அதிகாரி டாக்டர் ரஜினிகாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகமே மறுத்துவிட்ட நிலையிலும், தன் செய்தியில் இருந்து ABP News பின்வாங்கவில்லை.

பட மூலாதாரம், ABP
இருந்தபோதிலும் நோய் பாதிப்பு எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ``உள்ளுக்குள் ஆராய்ச்சி'' நடந்தது என்றும், அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை என்றும் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
முடக்கநிலை அமல் செய்யாதிருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரியாது. ஏனெனில் இந்தியாவில் மக்கள் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்தே வெளியில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.
தேநீர் குடிப்பது பற்றி கட்டுக்கதை பதிவு

பட மூலாதாரம், Getty Images
``இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு கப் தேநீர் தீர்வாக இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்.'' பொய்யான இந்தத் தகவல் - சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது - சீன டாக்டர் வென்லியாங் சொன்னதாகப் பரவுகிறது. வுஹானில் இந்த வைரஸ் பரவியது பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்த, பின்னர் அதே நோயால் இறந்துவிட்ட நிலையில், ஹீரோவாக மதிக்கப்படும் அவர் சொன்னதாக இந்தத் தகவல் பரவுகிறது.
தேநீரில் காணப்படும் மெதிலெக்ஸான்தைன்கள் - எனப்படும் பொருள் வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் என்று தனது குறிப்புகளில் அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீனாவில் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்குத் தினமும் 3 வேளை தேநீர் கொடுக்கப்பட்டது என்றும் கூறும் அந்தப் பதிவுகள் பரவலாகப் பகிரப்படுகின்றன.
தேநீரில் மெதிலெக்ஸான்தைன்கள் இருக்கிறது என்பது உண்மை. அது காபி, சாக்லெட்டிலும் கூட இருக்கிறது.
ஆனால் இதன் தாக்கம் பற்றி டாக்டர் லீ வென்லியாங் ஆராய்ச்சி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வைரஸ் நிபுணர் என்பதைக் காட்டிலும் கண் சிறப்பு மருத்துவர். - சீனாவில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளிலும் தேநீர் தரப்படவில்லை.
பிற செய்திகள்:
- கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? - கமல் அறிக்கை
- “ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் தயார், விரைவில் நடவடிக்கை” -கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி
- மகாராஷ்டிரா: கொள்ளைக்காரர்கள் என நினைத்து அடித்து கொல்லப்பட்ட துறவிகள், 110 பேர் கைது
- “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்” - கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












