கொரோனா வைரஸ்: ரேபிட் டெஸ்ட் கிட் முதல் நிதி வரை - பிரதமர் நரேந்திர மோதியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

பட மூலாதாரம், CMOTamilNadu
இரண்டு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட்களை விரைவாக தமிழகத்திற்கு தரவேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கியதற்கு பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சனிக்கிழமையன்று பிரதமருடன் காணொளி வாயிலாக நடந்த சந்திப்பில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த முதல்வர், கொரோனா சோதனையை விரைவாக நடத்த தேவைப்படும் ரேப்பிட் டெஸ்ட் கிட் விரைவாக அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இரண்டு லட்சம் கிட் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை வாங்குவதற்கு தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி தேவை என முன்னர் கேட்டிருந்தாகவும், அந்த நிதியை அளிக்கவேண்டும் என கேட்டுள்ளார்.உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை எதிர்கொள்வதற்காக, 33 சதவீதம் அதிகப்படியாக கடனை மத்திய அரசிடம் பெறுவதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரியுள்ளார்.அதேபோல கிராமம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டில் அளிக்கப்படவேண்டிய நிதியில் 50 சதவீதத்தை தற்போதே வழங்கவேண்டும் என கோரியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு வேளாண்மை துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, ரயில் மற்றும் விமான சேவைகளை தற்போது தொடங்கக் கூடாது என்றும் ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் 64.65 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பருப்பு, மசாலா பொருட்கள் மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்பதால், அந்த பொருட்களை ரயில் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் தாமதமின்றி கொண்டுசேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படும் வேளையில், முறைசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 911 நபர்கள் உள்ளனர் என்றும் 21 அரசு மருத்துவமனைகள் மற்றும் 155 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் பழனிச்சாமி பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை செயலர் சண்முகம் கூறியது என்ன?
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவை அறிவிக்கும் என்றும் தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதால், ஊரடங்கு நீடிப்பது குறித்து முடிவு பிரதமரின் உரையை அடுத்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என சண்முகம் தெரிவித்தார். ''கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு இரண்டு வார காலத்திற்காகவாது நீடிக்கப்படவேண்டும் என முதல்வர் பிரதமரிடம் தெரிவித்தார்,'' என்றார் சண்முகம்.
கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக 58 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், 485 நபர்களுக்கான சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்றார். ''தற்போது கொரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நபர் இன்று(ஏப்ரல் 11)இறந்துள்ளதால், தற்போது இறப்பு எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47,500 கண்காணிப்பில் உள்ளனர்,'' என தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ள பகுதிகளில், 24லட்சம் குடும்பங்களில் சர்வே எடுக்கப்பட்டு, அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா இருப்பதை விரைவாக கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட் தேவை என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது என்று கூறிய அவர், தற்போது சோதனை செய்வதற்கு, பிசிஆர் என்ற முறை பின்பற்றப்படுகிறது. அதற்கு 15,000 கிட்கள் உள்ளன என்றார்.
ஊரடங்கு காலத்தில், விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள விளைச்சல் வீணாகிவிட்டது என தெரிவித்துள்ளதால், அவர்களிடம் உள்ள பொருட்களை வாங்கி நேரடியாக மக்களுக்கு அரசு விற்பனை செய்யவுள்ளது என்றார். ''இதுவரை விவசாயிகளிடம் வாங்கிய விளைபொருட்களை விற்க 5,000 நடமாடும் காய்கறி கடைகள் நடத்தப்படுகின்றன. எல்லா மாவட்டத்திலும் விவசாயிகளிடம் பொருட்களை வாங்கி கூட்டுறவுத்துறை மூலம் விற்க முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மளிகை பொருட்களை விற்க ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
ஊரடங்கு குறித்து ஆலோசனை செய்ய கூட்டப்பட்ட கூட்டத்தில், கடந்த 21 நாட்களாக ஊரடங்கு நடைமுறைக்கு பொது மக்கள் அளித்துவரும் ஆதரவுக்கு தமிழக அரசவை பாராட்டு மற்றும் நன்றிகளை தெரிவித்துள்ளது என்றார் சண்முகம். அர்ப்பணிப்பு உணர்வோடு சுகாதாரத்துறை பணியாளர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினர் பணிபுரிகின்றனர் என்றும் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.












