கொரோனா வைரஸ்: மூன்றாம் கட்ட நோய் தொற்றை இந்தியாவால் தவிர்க்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி நிருபர்
கொரொனா நோய் தொற்று இந்தியாவில் இரண்டாம் கட்டத்தில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதாவது, தற்போது நோய்த்தொற்று உள்ள நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் அல்லது ஏற்கனவே கொரோனா நோய்தொற்று இருக்கும் நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவுகிறது.
தொற்றுநோயின் நான்கு கட்டங்கள்
கொரோனா வைரஸ் பரவலில் நான்கு கட்டங்கள் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் கூறுகிறது.
முதல் கட்டத்தில், வேறொரு நாட்டிலிருந்து நோய்தொற்றுடன் இந்தியாவிற்கு வந்தவர்கள். தற்போது இந்தக் கட்டத்தை இந்தியா கடந்துவிட்டது. ஏனெனில் இப்போது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இந்தியாவில் தொற்றுநோயை பரப்பியதால் முதல் கட்டத்தை இந்தியா தாண்டிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது கட்டத்தில், தொற்று உள்ளூர் மட்டத்தில் பரவுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று, இந்தியா திரும்பி வந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கும் நோய்தொற்று பரவுகிறது.
மூன்றாவது மற்றும் சற்று ஆபத்தான கட்டம் 'சமுதாய பரிமாற்றம்' (Community transmission) ஆகும். இந்த கட்டத்தைப் பற்றிதான் இந்திய அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளாத போதும், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாட்டிற்கு பயணிக்காத போதும் நோய்தொற்று பரவுவது சமுதாய பரிமாற்றம் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில், இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் அனைத்திலும், இந்தியாவின் கொரோனா மூன்றாம் கட்டத்திற்கு வரவில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்கள்.

பட மூலாதாரம், Hindustan Times/getty images
நான்காவது கட்டத்திற்கு வைரஸ் பாதிப்பு முன்னேறினால், உள்நாட்டில் இது பெரும் நோயாக மாறிவிடும்.
கொரோனா வைரஸ் 159 நாடுகளில் பரவிவிட்டது. ஐரோப்பாவிற்குப் பிறகு தென்கிழக்கு ஆசியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
மூன்றாம் கட்டத்தை அதாவது சமுதாய பரிமாற்றம் என்ற கட்டத்திற்கு வந்தால் அதை சமாளிக்க இந்தியா எவ்வளவு தயாராக உள்ளது?
கொரோனா வைரஸை சமாளிக்க இந்தியா எடுத்திருக்கும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.
இந்த நோய் சீனாவில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் WHOவின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய இயக்குநர் பூனம் கேதர்பால் சிங் மூன்று கடிதங்கள் மூலம் நிலைமையின் தீவிரத்தை சுகாதார அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Barcroft Media/getty Images
கொரோனாவை சமாளிக்க ஒவ்வொரு நாடும் எதுபோன்ற முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் உலக சுகாதார நிறுவனத்தின் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் உடனடியாக செயல்படத் தொடங்கியது. அதோடு, இதற்காக அமைச்சர்கள் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
பரிசோதனை வசதிகள்
மூன்றாம் கட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது.
தற்போது, நாட்டில் ஐ.சி.எம்.ஆரின் கீழ் 70க்கும் மேற்பட்ட பரிசோதனை பிரிவுகள் செயல்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், NurPhoto/getty images
இந்த வார இறுதிக்குள் சுமார் 50 அரசு ஆய்வகங்களில் கோவிட் -19-ஐ பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுவிடும் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா கூறுகிறார். கோவிட் -19 பரிசோதனைக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமான கிட்களை இந்தியா கேட்டுள்ளது.
மார்ச் 23ஆம் தேதிக்குள் தினசரி 1400 பேருக்கு பரிசோதனை செய்யப்படும் அளவிலான இரண்டு ஆய்வகங்கள் இந்தியாவில் தயாராக இருக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. இதன் மூலம், கோவிட் -19ஐ மூன்று மணி நேரத்திற்குள் பரிசோதிக்க முடியும்.
அமெரிக்கா மற்றும் ஜப்பானிடம் உள்ள சில இயந்திரங்களில் கோவிட் -19ஐ ஒரு மணி நேரத்தில் பரிசோதிக்க முடியும். இதுபோன்ற வேறு சில இயந்திரங்களையும் இந்திய அரசு வெளிநாட்டிலிருந்து வரவழைக்க உத்தரவிட்டுள்ளது.
மேம்படுத்தப்படும் தனியார் ஆய்வகங்கள்
கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் கட்டத்தை இந்தியா அடைந்தால், இந்த நிலையை சமாளிக்க தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வது அவசியமாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
அண்மையில் தனியார் ஆய்வகங்கள் மூன்றாம் கட்ட கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா கூறுகிறார்.


ஆனால் இந்த பரிசோதனைக்கு அவர்களுக்கு கிட் தேவைப்படும் என்கிறார் மருத்துவர் அரவிந்த் லால். அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட ஆய்வகங்களில் ஒன்றான லால் பாத் ஆய்வகத்தின் உரிமையாளர்தான் மருத்துவர் அரவிந்த் லால்.
ஒரு பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்? தனியார் ஆய்வகங்கள் இந்த பரிசோதனைக்கு மக்களிடமிருந்து எவ்வளவு கட்டணம் வசூலிப்பது? அரசு இந்த பரிசோதனைகளுக்கு இலவசமாக கிட் வழங்குமா? என பல விஷயங்கள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அரவிந்த் லால் கூறுகிறார். இதன் மூலம் தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனைகளை செய்வது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியாகிறது.

NABL சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களுடன் ஐ.சி.எம்.ஆர் பேச்சுவார்த்தை நடத்துகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை தனியார் மருத்துவமனை அல்லது ஆய்வகம் அடையாளம் கண்டால், உடனடியாக அந்த தகவலை அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணில் கொடுக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நிதி மேலாண்மை
கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் எந்த அளவு பரவுகிறது என்பதை கண்டறிய, சந்தேகத்திற்குரிய நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய இரண்டு வகையான பரிசோதனைகள் தேவை.
முதல்கட்ட பரிசோதனையில் முடிவுகள் பாஸிடிவ் என்று வந்தால், இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பட மூலாதாரம், ROMEO GACAD/getty images
ஒரு பரிசோதனைக்கு 3000 ரூபாய் செலவாகிறது. முதல் கட்ட பரிசோதனைக்கு 1500 ரூபாய் வரை செலவாகும்.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, இந்தியாவில் 223 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனாவிற்கு நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
இதைத்தவிர, கடந்த பல நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பரிசோதனைக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது.
அண்மையில் சார்க் நாடுகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்தாலோசித்தார். இந்தியா 10 மில்லியன் டாலர் கொரோனா நிதியை கொடுப்பது குறித்தும் அப்போது பேசப்பட்டது
அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது, வெளிநாடுகளுக்கு செல்வதும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருவதற்கும் பயணத் தடை அறிவித்தது என அரசாங்கம் தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு போதுமான தகவல்களை வழங்கியது.
இந்தப் பிரச்சாரத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனையும் அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் #safehand என்ற சவாலில் பங்கேற்று வீடியோக்களையும் பதிவிடுகிறார்.
அரசாங்கத்தின் இத்தகைய முயற்சிகள் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். அதோடு, சானிடைசர் மற்றும் முகக்கவசங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்கி, அவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது. எனவே இவை அதிக விலைக்கு விற்கமுடியாது என்பதோடு, கள்ளச் சந்தையிலும் விற்கமுடியாது.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உதவி எண்கள் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. சமுதாய விலகல் தொடர்பாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாநில அரசாங்கங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. நாள்தோறும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, தேவையான தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறது.
கொரோனாவுக்கான அமைச்சர்கள் குழு
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை அங்கீகரித்த இந்திய அரசு, நிலைமையை கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழுவை (GOM) உருவாக்கியது.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் - மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மண்ட்வாடியா, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவைக் குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கேரளாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் முதல் பாதிப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்த கலந்தாலோசனைகளும் நடைபெற்றன.
இந்த அமைச்சர்கள் குழு, குறிப்பிட்ட இடைவெளியில் கூட்டங்களை நடத்தி, தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்பு; அவசர நிலை அறிவிப்பு - அண்மைய தகவல்கள்
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் - என்ன காரணம் தெரியுமா?
- மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கொரோனா நோயாளி: பலருக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்
- கொரோனாவால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:














