கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நோயாளி - பரவும் அச்சம்

கொரோனா மாஸ்க்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மலேசிய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோலாலம்பூரில் உள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற நிகழ்வில் புருனே நாட்டைச் சேர்ந்த, கொரோனா கிருமித்தொற்றுள்ள நபர் கலந்து கொண்டது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோரை அடையாளம் காண வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது மலேசிய சுகாதார அமைச்சு.

மார்ச் 13, வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158ஆக நீடிக்கிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்தப் பள்ளிவாசல் நிகழ்வில் 14,500க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பங்கேற்றதாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளிநாட்டவர்கள் 5 ஆயிரம் பேரும், மலேசியர்கள் 5 ஆயிரம் பேரும் இந்நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.

ஆனால் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் சுமார் 1,500 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சு இன்று உறுதி செய்தது.

"தற்போது சுகாதாரக் குழுக்கள் மிகப்பெரிய அளவிலான கொரோனா கிருமித் தொற்றை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனைப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன. பள்ளிவாசல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பை ஏற்றுக் கொண்டு நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஒத்துழைத்து வருகின்றனர். கோலாலம்பூரில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது," என சுகாதார அமைச்சின் பொதுச்செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'

இந்தப் பரபரப்புக்கும் கவலைக்கும் வித்திட்ட அக்குறிப்பிட்ட நபர் புருனேவைச் சேர்ந்த 53 வயது ஆண் எனத் தெரியவந்துள்ளது. இவருக்கு இருந்த கொரோனா கிருமித் தொற்று, பள்ளிவாசல் நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் சுலபமாகப் பரவிவிட்டதாக அஞ்சப்படுகிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற மலேசியாவின் நெகிரி செம்பிலான், ஜொகூர், பகாங், சபா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிலருக்கும் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே புருனேவிலும் அக்குறிப்பிட்ட நபரால் வேறு யாருக்கேனும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருட்களை வாங்கிக் குவித்த சபா மாநில மக்கள்

மலேசியாவின் சபா மாநிலத்தில் கொரோனா கிருமித் தொற்றுள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். இதுகுறித்து தகவல் வெளியானதால், அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சம் பரவியது. இதனால் மக்கள் கடைகளுக்கு விரைந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்தனர்.

மார்ச் 12, வியாழக்கிழமை கிருமித்தொற்றுள்ள நபர் குறித்த தகவலை சபா மாநில அரசு வெளியிட்டது. அடுத்த சில நிமிடங்களில் பொதுமக்கள் பேரங்காடிகள், சிறிய கடைகள் என எதையும் விட்டு வைக்காமல் எங்கெங்கு அரிசி, சமையல் எண்ணெய், சோப்பு கிடைத்தனவோ, அங்கெல்லாம் குவிந்தனர்.

மலேசியா

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் இதர பகுதிகளிலும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வெளியான தகவலும், பொதுமக்களை இவ்வாறு பொருட்களை வாங்கத் தூண்டியது.

ஒருசிலர் மருந்துப் பொருட்களையும் அதிகளவில் வாங்கிச் சென்றதாக சபாவில் உள்ள மருந்துக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

கோலாலம்பூர் பள்ளிவாசல் நிகழ்வில் பங்கேற்ற ஒருவர் மூலமாகவே சபா மாநிலத்திலும் கொரோனா கிருமி நுழைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் யூனியன் பிரதேசமான லாபுவானிலும் சுகாதார முன்னெச்சரிக்கைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கோலாலம்பூர் பள்ளிவாசல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் லாபுவான் திரும்பியுள்ளதையடுத்து, அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கு பாதிப்பு

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களில் 11 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவைப் போல் மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

"சிங்கப்பூரில் உள்ள 9 மலேசியர்களுக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்புள்ள மேலும் இரு மலேசியர்கள் ஜப்பானில் இருந்து தற்போது நாடு திரும்பியுள்ளனர். எனினும் கிருமித் தொற்றுடன் நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மற்ற அமைச்சுகளுடன் கலந்து பேசிய பின்னர் உறுதி செய்யப்படும்.

"இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு அங்குள்ள மலேசிய தூதரகம் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. கையைச் சுத்தப்படுத்துவதற்கான கிருமி நாசினி, முகக்கவசம், மேகி நூடுல்ஸ் உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும்," என்று அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கொரோனோ பாதிப்புள்ள 10 நாடுகளில் வசிக்கும் 54 ஆயிரம் மலேசியர்கள்

கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளில் வசிக்கும் 54,430 மலேசிய குடிமக்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசிய தூதகரகங்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் கூறினார்.

இவர்களில் அமெரிக்காவில் 23,179 பேரும், சீனாவில் 14,929 பேரும் உள்ளனர்.

கொரோனா மாஸ்க்

பட மூலாதாரம், Getty Images

தென்கொரியாவில் 4,297 மலேசியர்கள் இருப்பதாகவும், இத்தாலியில் 380 பேர் உள்ளனர் என்றும் அமைச்சர் உறுதி செய்தார். ஈரானில் 67 பேர், ஜப்பானில் 6,019 பேர், பிரான்சில் 2,401 பேர், ஜெர்மனியில் 2,218 பேர், ஸ்பெயின் 150 பேர், சுவிட்சர்லாந்தில் 790 பேர் உள்ளனர் என்று குறிப்பிட்ட அமைச்சர், இக்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள மலேசியாவின் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் 841 பேர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றார்.

பத்து நாடுகளில் உள்ள 54,430 மலேசியர்களின் நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை வெளியுறவு துணை அமைச்சர் தலைமையிலான பணிக்குழு கவனித்துக் கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பக்தர்களுக்கு இந்து அமைப்புகள் அறிவுறுத்தல்

கோவில்களில் திரளாகக் கூடுவதை இந்து பக்தர்கள் தவிர்ப்பது நல்லது என மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கோவில் திருவிழா, மகா கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர், ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதை மனதிற்கொண்டு, தங்கள் பங்கேற்பை தவிர்ப்பது நல்லது என மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் கேட்டுக் கொண்டுள்ளார்.

"கண்டிப்பாக கோவில் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என முடிவெடுப்பவர்கள், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட சுய சுகாதாரத்தைப் பேணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்," என மோகன் ஷான் அறிவுறுத்தி உள்ளார்.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ஸ்ரீராதாகிருஷணன் அழகமலை கூறுகையில், பக்தர்கள் கூடுமானவரை திரளாக கூடுவதை தவிர்ப்பது நல்லது எனக் கூறியுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'

"பக்தர்களும், கோவில் நிர்வாகக் கமிட்டிகளும் சிறிய அளவிலான பூசைகளை செய்வதில் தவறில்லை. எனினும் மலேசிய சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்," என்று ஸ்ரீ ராதாகிருஷ்ணன் அழகமலை தெரிவித்துள்ளார்.

பத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

கொரோனா கிருமித் தொற்று அச்சம் காரணமாக மலேசியாவின் பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 5 ஆயிரம் பேர் வந்து செல்லக்கூடிய நிலையில், தற்போது நூறு சுற்றுலா பயணிகள் மட்டுமே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோவிலின் செயலர் சேதுபதி குமாரசாமி கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் அச்ச உணர்வைப் போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"பத்துமலை கோவில் திறந்தவெளியில் அமைந்துள்ள கோவில். எனவே இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் உள்ளோம். நிச்சயம் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்," என்று சேதுபதி குமாரசாமி தெரிவித்ததாக மலேசிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மலேசிய கத்தோலிக்க தேவாலயம் மார்ச் 14 தொடங்கி இரு வார காலத்துக்கு கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: