கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்பு; அவசர நிலை அறிவிப்பு - அண்மைய தகவல்கள்

கொரோனா பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செத் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி வழியாக நாடு மக்களிடம் தெரிவித்தார். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4209-ஐ எட்டியுள்ளது.

அடுத்த வாரத்தில் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொடும் என சான்செத் தெரிவித்துள்ளார்.

அண்மைய தகவல்கள்

இந்தியாவில் சில இடங்கள், பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனியின் சில பகுதிகள் மற்றும் அமெரிக்காவில் சில மாநிலங்கள் ஆகிய பகுதிகளில் பள்ளிகளை மூடுவதாக சமீபமாக தெரிவித்துள்ளனர்.

செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, மால்டா, உக்ரைன், பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகள் பயணத் தடைகளையும், தனிமைப்படுத்தும் முறைகளையும் அறிவித்துள்ளன.

பிரேசில் அதிபரின் உதவியாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டாலும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அதிபர் போல்சினாரூ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் திங்கள் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் மேட்ரிட்டில் மட்டும் சுமார் 2000 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அபாயத்தால் உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 100 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை

கொரோனா வைரஸை தடுக்க 100 பேருக்கு மேல் கூடுவதற்கு ஃப்ரான்ஸில் தடை விதிப்பதாக ஃப்ரான்ஸ் பிரதமர் எட்வார் ஃபிலிப் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.

இதுவரை 2800 பேர் கொரோனாவால் ஃப்ரான்ஸில் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்

லத்தின் அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தங்கள் நாட்டிற்கு வரும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

அனைத்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா, இரான், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அர்ஜெண்டினா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வரும் விமானங்களை கால வரையறை இல்லாமல் நிறுத்தி வைப்பதாக பெரு தெரிவித்துள்ளது.

மார்ச் 26ஆம் தேதி வரை ஐரோப்பிவிலிருந்து வரும், செல்லும் நேரடி விமானங்களை ரத்து செய்துள்ளது.

வெனிசுவேலாவும் ஒரு மாத காலத்திற்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4614-ஐ எட்டியுள்ளது.

118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 1,25, 288 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தாலியும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது, கடந்த 24 மணிநேரத்தில் 188 பேர் இறந்துள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

கொரோனாவால் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய நெருக்கடியை இத்தாலி எதிர்கொண்டுள்ளது.

வெறிச்சோடிய இத்தாலி சாலைகள்

பட மூலாதாரம், Vittorio Zunino Celotto/Getty Images

படக்குறிப்பு, வெறிச்சோடிய இத்தாலி சாலைகள்

இந்நிலையில், சீனாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) எட்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டதாக சீனா கூறுகிறது.

சீனாவில் இதுவரை குறைந்தது மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஹாங்காங்கில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துளளது.

கொரோனா பாதிப்பை சமாளிக்க ஐ.எஸ் குழுவினர் அறிவுரை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஐ எஸ் குழுவினர் நடத்தும் நாளிதழில் நோய் தொற்றில் இருந்த தப்பிக்க மத ரீதியான சில வழிமுறைகளையும் பாதுகாப்பு சோசனைகளையும் வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று என பெயரை குறிப்பிடாமல் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

  • உடல்நிலை சரி இல்லாதவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
  • நோய் தொற்று இருக்கும் இடத்திற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்
  • இருமல் மற்றும் கொட்டாவியின் போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும்
  • சாப்பிடும் முன்பும், தண்ணீர் குடிக்கும் முன்பும் கை கழுவ வேண்டும்.

மேலும் தங்கள் ஆதரவாளர்களை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, இறைவனிடம் அடைக்கலம் தேடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆசிய பங்குச்சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.

ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்குசந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

இதேபோல் இந்தியாவின் பங்குசந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. காலை பங்கு வர்த்தகம் துவங்கியவுடன் நிப்டி சுமார் 10% வீழ்ச்சியை கண்டதால் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Sorry, your browser cannot display this map