CAA - NRC: குடியுரிமை திருத்த சட்டம் - சிறுபான்மை வாக்குகளை இழக்கும் அ.தி.மு.க அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்காததால், 2021ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அ.தி.மு.கவினரிடம் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைபெறும் நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சியினர் அந்த சட்டத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்தாலும்கூட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய முறையில் அமல்படுத்தமுடியாது என பிஹார் அரசாங்கம் தெரிவித்துவிட்டது.

ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருப்பதால், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கருதும் அ.தி.மு.க, இதுவரை வெளிப்படையாக எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசிடம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய கேள்விகளை நீக்கவேண்டும் என கடிதம் மட்டுமே அனுப்பியுள்ளது. இதனால், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.கவினர் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.கவின் மூத்த அமைச்சர் ஒருவர், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இழப்பு ஏற்படும் என்பது உறுதி என்றார்.

பட மூலாதாரம், Getty Images
''மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தால் தமிழ்நாட்டில் காலங்காலமாக வசித்துவரும் இஸ்லாமியர்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்படமாட்டார்கள். முதல்வர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இஸ்லாமிய அமைப்புகள் தங்களது போராட்டத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால், அவர்களின் நியாயத்தைச் சொல்வார்கள். ஆனால் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது பற்றி எந்த யோசனையும் கட்சியில் இல்லை,'' என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த அமைச்சர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இஸ்லாமியர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் பற்றிக் கேட்டபோது, ''குறைந்தபட்சம் இஸ்லாமியர்களை சிறிதளவு சாந்தப்படுத்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மீதமுள்ள ஒரு வருடத்தில் அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது சிரமம்தான். அடுத்துவரவுள்ள தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கி என்னவாகும் என்ற பேச்சும் எழுகிறது. இருந்தபோதும் முடிவு எடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம். எங்கள் கட்சித் தலைவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் செயல்பாடுகளுக்காகப் பல இடங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தன. ஆனால் இந்த தேர்தலில் அவர்களின் வாக்குகள் கணிசமாகக் குறையும்''என்றார் அமைச்சர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பத்திற்குக் குடியுரிமை இல்லை?
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் மோசமான தோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது. ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, தோல்வி கிடைக்கும் என்று தெரிந்துதான் தனது மகனையும் மகளையும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட வைத்ததாக ஊடகங்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்களிடம் அதிமுகவின் நன்மதிப்பு குறைந்துவிட்டதா என அன்வர் ராஜாவிடம் கேட்டபோது, ''குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார்கள். அசாமில் 19 லட்சம் பேரின் குடியுரிமை கேள்விக் குறியாகியுள்ளது. இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் பக்ருதீன் அலி அகமது. அவரது குடும்பத்தினரின் பெயர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கொண்டுவரப்படவில்லை. இதுபோன்ற தகவல்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் நீங்க சில காலம் ஆகும்'' என்றார்.
அடுத்துவரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்கூட, இஸ்லாமியர்களின் அச்சம் காரணமாக வாக்குகளை இழக்கநேரிடும் என்கிறார் அன்வர் ராஜா. ''குடியுரிமை சட்டம் நேரடியாக தமிழக இஸ்லாமியர்களை பாதிக்காது என முதல்வர் கூறியிருக்கிறார். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஆதார் தகவல்கள் கட்டாயம் என்பதை நீக்கவேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர். இருந்தபோதும், இஸ்லாமியர்கள் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பது அவர்களின் அச்ச உணர்வைக் காட்டுகிறது'' என்கிறார் அவர்.
மேலும் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, சட்டமன்றத்தில் எவ்வாறு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என தீர்மானம் கொண்டுவரமுடியும் என கேள்வியெழுப்புகிறார் அவர்.
''முகாமுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற பயம்''
மறைந்த சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் பேரனும், இந்திய யூனியன் காய்தே மில்லத் லீக் தலைவருமான தாவூத் மியாகான் மற்றொரு கோணத்தை முன்வைக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தமுடியாத வகையில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன எனக் குற்றம்சாட்டுகிறார்.
''எங்கள் உறவினர்கள் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. பல கட்டங்களாகப் போராட்டங்களை முன்னெடுத்த பிறகுதான், சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டன. பலரும் தங்களது வாக்குகளை செலுத்த முடியவில்லை. இதுபோன்ற நிலையில், குடியுரிமை சட்டம் அமலாகும்; ஆவணங்கள் இல்லாதவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்; அவர்கள் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற பயம் இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவுகிறது. வாக்களித்த அரசாங்கம் தங்களைக் காப்பாற்றவில்லை என்ற எண்ணத்தால், இஸ்லாமியர்களின் வாக்குகள் அ.தி.மு.கவுக்கு கிடைப்பது சிரமம்'' என்கிறார் தாவூத் மியாகான்.
அதிமுக என்ன செய்யவேண்டும்?
இஸ்லாமியர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின்னர் அ.தி.மு.க. எதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், 2021ஆம் ஆண்டு தேர்தலில் தங்களது வாக்குவங்கியை ஓரளவு காப்பாற்ற முடியும்?

''அ.தி.மு.க., பா.ஜ.கவின் கூட்டணியில் இருப்பதால், பா.ஜ.கவின் நிலைப்பாட்டிலிருந்து ரொம்பவும் விலகிச்செல்ல முடியாது. தமிழகத்தில் இஸ்லாமியர்களின் கணிசமான வாக்குகளை அதிமுக கடந்த காலங்களில் பெற்றுள்ளது. குடியுரிமை சட்டம் மட்டுமல்லாது, இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காரணமாக, பல இடங்களில் அதிமுகவுக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுகள் கிடைக்காது என்பது நிதர்சனம்,''என்கிறார் எழுத்தாளரும் அரசியல் நோக்கருமான மார்க்ஸ்.
குறைந்தபட்சம் பிகார் மாநில அரசு அறிவித்துள்ளதைப்போல, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது சர்ச்சைக்குரிய கேள்விகளை அனுமதிக்கமாட்டோம் என அறிவித்தால் ஓரளவு வாக்குகளைப் பெறலாம் என்கிறார் அவர்.
''15 நாட்களுக்கு முன்னர், ஆறு கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை. அடுத்த கடிதம் எழுதுகிறோம் என கூறுவது வேடிக்கை. குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் பேசுகிறார். இது பச்சையான ஏமாற்று வேலை. லட்சக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் போராடுகிறார்கள். தெளிவில்லாமல், பாதிப்பு யாருக்கும் வராது எனக்கூறுவது நியாயமா? பிஹார் மாநிலத்தில், நிதிஷ் குமார் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருக்கிறார். ஆனால் அவரது மாநிலத்தில், சிறுபான்மையினர் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க, தனது கருத்தை தைரியமாக அறிவித்துள்ளார்.கணக்கெடுப்பு நடக்கும்போது சர்ச்சைக்குரிய கேள்விகளை அனுமதிக்கமாட்டோம் எனச் சொல்வதால், கணக்கெடுப்புக்கு எதிராக இல்லாமல், அதேசமயம், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு, அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பினோம் என்ற கருத்தை மக்களிடம் கொண்டு செல்லலாம்,''என்கிறார் மார்க்ஸ்.
நடந்து முடிந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது. அதற்குப் பிறகு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்பட்டபோது, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரைவிட தி.மு.கவைச் சேர்ந்த கதிர் ஆனந்த், சுமார் 8,100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் காஷ்மீரைப் பிரிப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வேலூரில், இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்த நிலையில், வேலூரில் நடந்த தேர்தலில் இந்த நிகழ்வு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாகக் கருதப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













