டெல்லி வன்முறை: "என் உயிருக்கே ஆபத்து" - உளவுத்துறை ஊழியர் கொலையில் கைதான தாஹிர் ஹுசேன்

பட மூலாதாரம், Getty Images
வடகிழக்கு டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI
இந்நிலையில், அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான தாஹிர் ஹுசேனிடம் அவர் கைது செய்யப்படுவற்கு முன்னர் பிபிசி செய்தியாளர் ரஜ்னீஷ் குமார் பேசினார்.
கேள்வி: உங்கள் வீட்டின் மாடியில் இருந்து கையில் தடி, கற்களை வைத்துக் கொண்டிருக்கும் காணொளி வெளியாகியிருக்கிறது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கும், கலவரங்களுக்கும் நீங்கள் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: இதோ பாருங்கள். அந்த காணொளியில் பார்ப்பதை சரியாக புரிந்துக் கொள்ளுங்கள். நான் வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அனைவரையும் தடுக்கிறேன். நான் போனில் பேசிக் கொண்டிருப்பதையும் அந்த காணொளியில் பார்க்கலாம்.
போலீசை வரச் சொல்லி நான் போனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வாருங்கள், வந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று நானே அவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தேன். அனைவரையும் போன் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
எங்கள் அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. யாராவது வந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அப்போது நாங்கள் முயற்சித்துக்கொண்டிருந்தோம். அந்தப் பகுதியில், அந்த இடத்தில் மட்டும்தான் புகை இல்லாமல் இருந்தது. நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்து நிலைமையைக் கட்டுப்படுத்தினோம்.

கேள்வி: உங்களுடன் நின்றுக் கொண்டிருந்தவர்கள், கற்களை வீசுவதை பார்க்க முடிந்ததே?
பதில்: என்னுடன் இருந்தவர்கள், அந்த தொழிற்சாலையில் இருந்தவர்கள். அவர்கள் கலவரங்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் அனைத்தையும் தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தேன்.
கேள்வி: கல் வீசியா தடுத்துக் கொண்டிருந்தார்கள்?
பதில்: அவர்கள் கல் வீசவில்லை.
கேள்வி: காணொளியில் அது தெளிவாகத் தெரிகிறதே?
பதில்: அது வேறு யாரோ...
கேள்வி: உங்களுக்கு பத்து மீட்டர் அருகிலிருந்து கல் வீசுகிறார்களே?
பதில்: நான் அவர்களை தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் மாடிப்படிகள் தெரியும். கீழே எனது கார் நின்று கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்து நேரடியாக மொட்டை மாடிக்கு படிகள் செல்கின்றன.
நான் வீட்டின் நுழைவு முன்பே நின்று கொண்டிருந்தேன். அதற்கு காரணம், பின்புற வழியாக யாரும் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்பதுதான். யார் வந்தாலும், அவர்களை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். சிலரை நான் திருப்பியும் அனுப்பினேன்.
கேள்வி: கபில் மிஸ்ரா உங்கள் நண்பராக இருந்தவர். அவருடைய தேர்தல் அலுவலகம் ஒரு காலத்தில் உங்கள் வீட்டில்தான் இருந்தது.
பதில்: கபில் மிஸ்ராவை நாங்கள் இந்த இடத்தில் இருந்து தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏவாக்கினோம். நான் பிஸினெஸ்மேன். நான் அவருக்கு ஆதரவு கொடுத்தேன். ஆனல் அவர் அனைவரையும் ஏமாற்றினார்.
இங்குள்ள மக்களுக்கு அவர் துரோகம் செய்தார், எங்கள் கட்சிக்கும் துரோகம் செய்தார். இன்று அவர் எனக்கும் துரோகம் செய்துவிட்டார். அரசியலுக்காக அவர் இன்று தவறே செய்யாத என்னை மாட்டிவிடுகிறார். இவரது தேசபக்தி பொய்யானது.
கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கடுமையாக விசாரிக்க வேண்டும். நான் அனைவருடனும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். நான் எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

கேள்வி: அங்கித் சர்மாவை உங்களுக்குத் தெரியுமா?
பதில்: அங்கித் சர்மாவை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. அவர் தொடர்பாக எனக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே ஊடகங்கள் மூலமாகவே கிடைத்தது. அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்து வருந்துகிறேன்.
அவருடைய மரணம் மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினரை நினைத்து கவலைப்படுகிறேன். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக நான், என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் செய்வேன்.
கேள்வி: உங்கள் ஆட்கள்தான் அங்கித் சர்மாவை கொன்றார்கள் என்று கபில் மிஸ்ரா சொல்கிறாரே?
பதில்: கபில் மிஸ்ராவுக்கு என்னுடைய ஆட்கள் அனைவரையும் தெரியும். அவரே சொல்லட்டும் இந்தக் கொலையை யார் செய்தது என்று... அவருடைய அலுவலகமே என்னுடைய இடத்தில்தானே இருந்தது?
கேள்வி: நீங்கள் இந்தப் பகுதியின் கவுன்சிலர்... அங்கு சென்று ஆறுதல் சொன்னீர்களா?
பதில்: இந்த சம்பவம் நடைபெற்ற சாந்த் பாக் பகுதியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் அந்தப் பகுதியின் கவுன்சிலர் அல்ல.
நேரு விஹார் பகுதியின் கவுன்சிலர். சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்திகள் எனக்கு எதிராகவே இருக்கிறது. எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு பிறகு நான் அங்கு சென்றால், எனது உயிருகே ஆபத்து ஏற்படும் என்பதால் நான் அங்கு செல்லவில்லை. என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













