யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்

பட மூலாதாரம், Facebook/itsyuvan
தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தடம் பதித்து 23 ஆண்டுகளாகிவிட்டன. இதனை அவருடைய ரசிகர்கள் '#23YearsOfYuvanism' என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது அஜித் நடிக்கும் 'வலிமை' படத்திற்கும், சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார்.
1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தன் 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா.
அந்த காலகட்டத்தில் பட வெற்றியைப் பொறுத்தே படத்தின் இசை பேசப்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை.
'அரவிந்தன்' படத்திற்குப் பிறகு இரண்டு படங்களில் தோல்வியடைந்த யுவன், 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'தீனா', 'நந்தா', 'துள்ளுவதோ இளமை', 'மெளனம் பேசியதே' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்குத் தன்னை அடையாளம் காட்டத் தொடங்கினார்.
'இளையராஜா'வின் மகன் என்பதைக் கடந்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்க தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் இவருக்கென்று இளைஞர் பட்டாளமே திரண்டது. காதல் தோல்வி குறித்து இவர் இசையமைத்த பாடல்கள் தான் பெரும்பாலான இளைஞர்களின் காலர் டியூனாகிப் போனது.

பட மூலாதாரம், Facebook/itsyuvan
சின்ன பட்ஜெட் படம், பெரிய படம், மாஸ் ஹீரோ என்றெல்லாம் யுவன் பிரித்துப் பார்ப்பதில்லை. தனக்கு கதை பிடித்திருந்தால் அந்தப் படத்திற்கு இசையமைப்பார். இந்த விஷயத்தில் இளையராஜாவும், யுவனும் ஒன்று.
'பில்லா-2' திரைப்படத்தில் மாஸ் ஹீரோவிற்காக இசையமைத்துக் கொண்டிருக்கும் போதே 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற புதுமுகம் நடிக்கின்ற படத்திற்கும் இசையமைத்தார்.
தன் நண்பர்களுக்காக பணம் வாங்காமலும் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
யுவன் ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியாக இசையமைப்பார். செல்வராகவன் - யுவன் காம்போ ஒரு மாதிரியும், ராம் - யுவன் காம்போ வேறு மாதிரியும் இருக்கும். கதைக்கு ஏற்ற இசையை மெட்டமைக்கும் திறன் யுவனின் பலம்.
இவருடைய பின்னணி இசையே கதையின் போக்கை சொல்லிவிடும். அந்த அளவிற்கு கதைக் களம் அறிந்து இசையமைப்பார்.
'பருத்திவீரன்' படத்திற்கும், 'மங்காத்தா' படத்திற்கும் வேறு மாதிரியான இசையை யுவன் கொடுத்திருப்பார். அவரால் குத்துப் பாடல்களுக்கு மெட்டமைக்கவும் முடியும், அதே வேளையில் ஹை டெக்கான பாடல்களுக்கு ஏற்ற இசையையும் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்.
இதுவரை யுவனுடன் பணியாற்றிய இயக்குநர்களே யுவனுடைய இசைக்கு ரசிகர்களாகிவிடுவது கூடுதல் சிறப்பு.
யுவனின் பாடல்களில் பெரும்பாலும் வயலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எந்த இசைக் கருவியை எந்த சரணத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற மேஜிக் யுவனுக்குத் தெரியும்.
யுவனுக்கு ஏராளமான இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு பியானோ. பாடல் தொடங்குவதற்கு முன்னதாக யுவன் மெட்டமைக்கும் பியானோவின் இசையே அந்தப் பாடலுடைய மையக் கருவை ரசிகர்களிடம் கடத்திவிடும்.

பட மூலாதாரம், Facebook/itsyuvan
யுவனும், நா. முத்துக்குமாரும் சேர்ந்து காதலை அவர்களுடைய பாடல்கள் வழி கொண்டாடியிருக்கிறார்கள். காதலிக்கப்படுபவர்களுக்கும், காதலில் தோல்வியடைந்தவர்களுக்கும் இருந்த ஆறுதல் நா.முத்துக்குமாரின் வரியில் யுவன் இசையமைத்த பாடல்கள் என்றாகிப் போனது.
1980களில் இளையராஜாவின் ஆதிக்கம் என்றால், 2000களில் யுவனின் ஆதிக்கம் என்றாகிப் போனது.
'ரெளடி பேபி' பாடல் மட்டுமில்லாமல் யுவன் இசையமைத்த பல பாடல்கள் இன்றும் பலருடைய ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.
பெரிய அளவிலான விருதுகள் இவரைத் தேடி வராவிட்டாலும், 'கிங் ஆஃப் பிஜிம்', ' யூத் ஐகான்' என்கிற பட்டங்களை யுவனுக்கு சூட்டி அழகு பார்த்தார்கள் யுவன் ரசிகர்கள்.
'I will be there for you!' என யுவன் தன்னுடைய ரசிகர்களுக்காக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி 'பியார் பிரேமா காதல்', ' கொலையுதிர் காலம்' போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
2004ஆம் ஆண்டில் '7ஜி ரெயின்போ காலனி' படத்திற்காக பிலிம்ஃபேர் விருதையும், 2006ஆம் ஆண்டில் 'பருத்திவீரன்' படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













