கொரோனா வைரஸ் பாதிப்பால் பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு

கொரோனா பாதிப்பால் பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பால் பொள்ளாச்சியில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நாரின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சியை சேர்ந்த தென்னை நார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News image

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தென்னை சார்ந்த தயாரிப்புகள் சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து, தென்கொரியா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இதில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில், நாட்டின் மொத்த தென்னை நார் உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சமீபத்தில் சீனாவில் இருந்து பரவிவரும் கொரோனா பாதிப்பால் சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான தென்னை நார் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு

'பொள்ளாச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நார்களில் 90 சதவிகிதம் சீனாவிற்கு செல்கிறது. அங்கு அவை மெத்தை, கால்மிதி, அணிகலன்கள் மற்றும் பொம்மைகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஜனவரி மாதம் சீன புத்தாண்டிற்காக அங்கு விடுமுறை அளிக்கப்பட்டு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன. இதற்கிடையே அங்கு கொரோனா பாதிப்பும் துவங்கிவிட்டது. கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர், தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழல் அங்கே உருவாகியுள்ளது. இதனால், பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்பட்ட தென்னை நார்கள் சீனத் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால் சீனாவில் பணப்பரிவர்த்தனையும் முடங்கியுள்ளது' என்கிறார் கோவை மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர், செல்வராஜ்.

பணப்பரிவர்த்தனை முடங்கியதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வங்கி கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் இவர்.

'ஜனவரி மாதத்திற்கு முன்பு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார்களுக்கான தொகை இன்னும் கிடைக்கவில்லை. அனுப்பப்பட்ட தென்னை நார்கள் சீனத் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. மேலும், உற்ப்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கான ஆர்டர்களும் கிடைக்கவில்லை.

இந்த காரணங்களால் தென்னை நார் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சியில் இயங்கிவரும் பெரும்பாலான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இங்கு பணிபுரிந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், வங்கிகளில் பெறப்பட்ட தொழில் கடனுக்கான தவனத்தொகையை செலுத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது' என தெரிவிக்கிறார் செல்வராஜ்.

கொரோனா பாதிப்பால் பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு

தென்னை நார் உற்பத்தியாளர்கள் வங்கியில் பெற்ற தொழில் கடன்களுக்கான தவனத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தேசிய தென்னை நார் வாரியத்திடம் முறையிடவுள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.

தென்னை நார் வர்த்தகம் நஷ்டத்தை தரத்துவங்கியுள்ளதால், உற்பத்தியாளர்கள் பலர் நார்கட்டி உற்பத்திக்கு மாறி வருகின்றனர்.

'பொள்ளாச்சியில் பெரும் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆதலால் தென்னை சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு இயங்கிவருகின்றன. இங்கு தென்னை மட்டையிலிருந்து தென்னை நார் மற்றும் நார்கட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான தொழிற்சாலைகள் தென்னை நார்கட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

தென்னை நார்கட்டிகள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு மண்ணுக்கு பதிலாக அவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சுமார் ரூ.700 கோடி மத்திப்பிலான தென்னை நார் சீனாவிற்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் தென்னை நார் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள துறைமுகங்களில் தேங்கி இருக்கும் தென்னை நார் தயாரிப்புகள் சந்தைக்கு சென்றால் தான் வர்த்தகம் சீராகும்' என்கிறார் தென்னை நார்கட்டிகள் ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் மகேஷ்குமார்.

மேலும், சீனாவில் துறைமுகங்களில் தேங்கியுள்ள தென்னை நார் உற்பத்திகள் சந்தைப்படுத்தப்பட்டு, வரும் மார்ச் மாதம் முதல் தென்னை நார் வர்த்தகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மகேஷ்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: