You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்; புகாரை திரும்ப பெறும் பழங்குடியின சிறுவன்
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தங்களுக்கு பல உதவிகளை செய்ய உள்ளதாகவும், அவர் மீது பதியப்பட்ட புகாரை திரும்பபெறவுள்ளதாகவும் அமைச்சரால் காலணியை கழற்றுமாறு பணிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
இன்று, வெள்ளிக்கிழமை, சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்களை நேரில் அழைத்து தெப்பக்காடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
செருப்பை கழற்றிய சிறுவனுடன் உடன் இருந்த மற்றொரு சிறுவனும், அச்சிறுவனின் குடும்பத்தினரும் அப்போது உடன் இருந்தனர்.
நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் யானைகள் மறுவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு விளையாடிக்கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு சொன்னதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் சீனிவாசன், இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் எந்த உள்நோக்கமும் இல்லாமல் நடைபெற்றது என மறுப்பு தெரிவித்தார்.
பழங்குடியினர் சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் நேற்று மாலை அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.
புகார் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
திண்டுக்கல் சீனிவாசன் நீலகிரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இன்று காலை அங்கு அழைத்துவரப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் அமரவைக்கப்பட்டனர்.
அவர்களுடன் வேறு சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சரை சந்திக்க காத்திருந்தனர்.
விருந்தினர் மாளிகைக்குள் செல்ல பத்திரிகையாளர்களுக்கும், பிற அமைப்பினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் புகாரை திரும்ப பெற வற்புறுத்தியதாக அங்கு வந்திருந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்த சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "ஒரு சாதாரண குடிமகன் இவ்வாறு செய்திருந்தால் போலீஸார் உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அவர் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆனால் அமைச்சர் என்பதனால் புகார் அளித்த பிறகும் அவர்மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். பகிரங்கமாக நடந்த சம்பவம் இது. அதனால் மன்னிப்பும் பகிரங்கமாக கேட்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: