You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் டிரம்ப்: 'அல்-கய்தாவின் முக்கிய தலைவரை கொன்றுவிட்டோம்' மற்றும் பிற செய்திகள்
அரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் அல்-கய்தாவின் தலைவரை கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் அல்-கய்தா ஜிகாதிகள் இயக்கத்துக்கு தலைமையேற்று செயல்பட்டு வந்த காசிம் அல்-ரெய்மியை அமெரிக்க படைகள் யேமனில் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிரான 2000வது ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இவர் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளார்.
சௌதி அரேபியா மற்றும் யேமனை களமாக கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு அல்-கய்தாவின் ஏகியூஏபி என்னும் பிரிவு தொடங்கப்பட்டது. அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான படைகள் உள்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு இது இயங்கி வந்தது.
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் காசிம் அல்-ரெய்மி கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த மாதத்தின் இறுதியில் தகவல்கள் பரவி வந்தன.
இதனை மறுக்கும் வகையில், அல்-ரெய்மியின் ஒலிப்பதிவு ஒன்றை கடந்த இரண்டாம் தேதி ஏகியூஏபி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
காஷ்மீர் அரசியலில் வெற்றிடம்: பாஜக வலுப்பெற முயல்கிறதா?
கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த பகுதி பிரிக்கப்பட்டது.
இந்திய அரசின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை தொடர்ந்த நடவடிக்கைளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு தடை நடவடிக்கைள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையும் உள்ளடங்கும்.
கடந்த ஆறு மாதங்களாக இங்கு தகவல்தொடர்பு தடைகளை சரிசெய்ய மக்கள் முயன்றுவரும் வேளையில், இப்பகுதியில் அரசியல் களம் மிகவும் அமைதியாக காணப்படுகிறது.
விரிவாக படிக்க:காஷ்மீர் அரசியலில் வெற்றிடம்: பாஜக வலுப்பெற முயல்கிறதா?
கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம்
கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த சீன மருத்துவர் இந்த வைரஸ் தொற்றால் இறந்துவிட்டதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
லீ வெண்லியாங் என்ற அந்த கண் மருத்துவர் வுஹான் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியன்று அவர் சக மருத்துவர்களிடம் எச்சரித்து இருக்கிறார்.
ஆனால், இப்படியான தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி சீன போலீஸார் கூறியுள்ளனர்.
விரிவாக படிக்க:கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம்
கியா கார் தொழிற்சாலை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறதா?
ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் மிக்க 'கியா' (KIA) கார் தொழிற்சாலை, கட்டி முடிக்கப்பட்டு இரண்டே மாதங்களில் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்வது பற்றிப் பேச்சு நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பெயர் வெளியிடாத மூத்த அரசு அதிகாரி மற்றும் இந்த பேச்சுவார்த்தை பற்றித் தெரிந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் இந்த தகவலைத் தெரிவித்ததாக கூறி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த பிரத்யேக செய்தியை வெளியிட்டுள்ளது.
கியா நிறுவன நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவாலின் சொத்துகள் அதிகரித்துள்ளனவா?
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை முன் வைத்து ஆட்சியை பிடித்தவரின் சொத்துகள் அளவுக்கு மீறிய விகிதாசாரத்தில் அதிகரித்துள்ளதா? அதிகமான சொத்துகள் வாங்கி குவித்துள்ளாரா கேஜ்ரிவால்? உண்மை என்ன?
டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மொத்த சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.3 கோடி அதிகரித்துள்ளதாக தனது தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார் கேஜ்ரிவால்.
விரிவாக படிக்க:அரவிந்த் கேஜ்ரிவாலின் சொத்துகள் அதிகரித்துள்ளனவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: