டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 : அரவிந்த் கேஜ்ரிவாலின் சொத்துகள் அதிகரித்துள்ளனவா?

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை முன் வைத்து ஆட்சியை பிடித்தவரின் சொத்துகள் அளவுக்கு மீறிய விகிதாசாரத்தில் அதிகரித்துள்ளதா? அதிகமான சொத்துகள் வாங்கி குவித்துள்ளாரா கேஜ்ரிவால்? உண்மை என்ன?

டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மொத்த சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.3 கோடி அதிகரித்துள்ளதாக தனது தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார் கேஜ்ரிவால்.

கடந்த 2015 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட சொத்து மதிப்பையும், இப்போது அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

சட்டசபை தேர்தல் 2015

கடந்த 2015 சட்டசபை தேர்தலில் தனது மொத்த சொத்து மதிப்பு 2,09,85,366 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

அசையும் சொத்துகளாக அவர் பெயரில் 2,26,005 ரூபாய் இருப்பும், அவரது மனைவி சுனிதா பெயரில் 15,28,361 ரூபாயும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்துகளாக அவர் பெயரில் 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், அவரது மனைவி பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனைவி சுனிதா அரசு ஊழியராக பணியாற்றுகிறார்.

சட்டசபை தேர்தல் 2020

2020 சட்டசபைக்கான தேர்தல் வேட்பு மனு வாக்குமூலத்தில் தனது சொத்து மதிப்பு 3.4 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் அசையும் சொத்தாக 9,95,741 ரூபாய் உள்ளதென்றும், தனது மனைவியிடம் 57,07,791 ரூபாய் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள அசையா சொத்தின் மதிப்பு 1.77 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி பெயரில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ஒரு கோடி என தெரிவித்துள்ளார்.

அதாவது கேஜ்ரிவாலின் அசையா சொத்துகளின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தல் வேட்பு மனு வாக்குமூலத்தில் காசியாபாத் இந்திராபுரத்திலும், ஹரியானா சிவானியிலும் 2400 சதுரடி மற்றும் 6750 சதுரடி இருந்ததாக குறுப்பிட்டு இருந்தார். இப்போதும் அதே அசையா சொத்துகளைதான் வேட்பு மனு வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். புதிதாக எந்த அசையா சொத்துகளையும் அவர் வாங்கவில்லை. இதன் மதிப்புகள்தான் உயர்ந்துள்ளன.

சந்தை மதிப்பிற்கேற்ப அசையா சொத்துகளின் மதிப்பு ஏற்றம் காண்பது இயல்பானது.

ஏ.டி.ஆர். அமைப்பு கூறுவது என்ன?

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பானது ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீதுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும்.

அவர்கள் வெளியிட்டுள்ளா அறிகையின்படி ஆம் ஆத்மி சார்பாக 45 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களின் ஒட்டுமொத்த சாரசரி சொத்துமதிப்பு கடந்த சட்டசபை தேர்தலில் தேர்தலில் 7,65,55,239 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இப்போது 8,51,89,284 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது 11.28% அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: