திண்டுக்கல் சீனிவாசன் பதில் - சிறுவனை செருப்பை கழற்றிவிட சொன்னது ஏன்?

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாம் துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக வனத்துறை அமைச்சர் பழங்குடியின சிறுவன் ஒருவரை தனது செருப்பைக் கழற்றிவிட அறிவுறுத்தும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''இன்று காலை முதுமலையில் 67 யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவக்கவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நானும், அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தோம். வழியில் பாரம்பரியம் மிக்க கோயில் ஒன்றில் வழிபட்டுவிட்டு செல்லலாம் என உடன் வந்தவர்கள் கூறினார்கள்."

"நான் சாதாரண செருப்பு அணியாமல், 'பக்கிள்ஸ்' செருப்பை அணிந்திருந்தேன். அங்கே வயதானவர்களும், மூத்தவர்களும் இருந்தனர். சிறுவர்கள் சிலர் அங்கே விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் என் பேரன் போல ஒருவனை அழைத்து செருப்பின் பக்கிள்களை கழற்றிவிடச் சொன்னேன். அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை."

"சீக்கிரமாக கோவிலுக்குள் செல்ல வேண்டும் என நினைத்துதான் சிறுவனை அழைத்து பக்கிள்ஸை கழற்றச் சொன்னேன். எனது பேரன் போல எண்ணித்தான், சிறுவனை அழைத்து கழற்றிவிடக் கூறினேன். பெரியவர்களிடம் கூறினால் மரியாதையாக இருக்காது என்பதால்தான் சிறுவனை அழைத்தேன். திட்டமிட்டு செய்த செயல் என கூறுவதை மறுக்கிறேன், அதேநேரத்தில் யார் மனதும் புண்படும்படி இந்த செயல் அமைந்திருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்," என்று கூறினார்.

புகார்

இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், அமைச்சரின் செருப்பை கழற்றிய பழங்குடி மாணவர் கேத்தன் புகார் அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: