You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு பாதிப்பு
சீனாவில் பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உண்டாகியுள்ளவர்களில் மிகவும் இளம் வயது இந்தக் குழந்தைக்குத்தான்.
கொரோனா வைரஸ் பரவலின் மூலமாக இருக்கும் வுஹான் நகரில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது.
பிரசவத்துக்கு முன்னர் இந்தக் குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பது இதுவரை தெரியவில்லை.
புதன்கிழமை இந்தக் குழந்தை 3.25 கிலோ எடை இருந்ததாகவும், தற்போது மருத்துவக் கண்காணிப்பின்கீழ் இருக்கும் இந்தக் குழந்தை நிலையான உடல்நலத்துடன் இருப்பதாகவும் சீன அரசின் சின்ஹுவா செய்தி முகமை தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ்எவ்வாறு பரவி இருக்கலாம்?
கருவில் இருக்கும்போதே தாயிடம் இருந்து குழந்தைக்கு சில நோய் தொற்றுகள் பரவுவது போலவே இந்தக் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
"தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது," என இந்த நிகழ்வு எச்சரிப்பதாக வுஹான் குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஜெங் லிங்காங் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
தாய் இருமியபோது தாயிடம் இருந்த கொரோனா வைரஸ் தொற்றை குழந்தை உள்ளே உறிஞ்சியிருக்கலாம் என்று தொற்றுநோயியல் பிரிவு வல்லுநர் ஸ்டீபன் மோர்ஸ் பிசினஸ் இன்சைடர் செய்தி இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மிகவும் குறைவான விகிதத்திலேயே குழந்தைகளிடையே பரவியுள்ளது.
சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய் தொற்றுகள் பரவிய சமயத்திலும் குழந்தைகள் குறைவான விகிதத்திலேயே பாதிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: