You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துபாய்க்கு இழுத்து வரப்படும் பனிப்பாறைகள்: பாலைவனத்தின் தண்ணீர் பிரச்சனை தீருமா?
மேகங்களைத் துளையிடும் வானளாவிய கட்டடங்கள் நிறைந்துள்ள பாலைவனம். சாத்தியமே இல்லாதவற்றையும் நிறைவேற்றிக்காட்டும் இடம். அதுதான் துபாய்.
பாலைவனப் பகுதியான துபாயின் தண்ணீர் பிரச்சனையைப் பனிப்பாறைகள் தீர்க்க உள்ளன. மாபெரும் பனிப் பாறைகளைக் கடல் வழியாகத் துபாய்க்குக் கொண்டு வந்து அவற்றின் மூலம் தண்ணீரைப் பெறுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
"உலக வெப்ப மயமாதலால் அண்டார்க்டிகாவில் இருந்து பிரியும் பனிப்பாறைகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஐக்கிய அரபு அமீரகத்தின் பனிப்பாறை திட்டம். மிகவும் சுத்தமான தண்ணீரை இந்த பனிப்பாறைகள் கொண்டுள்ளன. ஆனால், எதிர்பாராத விதமாக இந்த பனிப்பாறைகள் உருகி வருகின்றன. எனவே, இயற்கை நமக்கு வழங்கும் வாய்ப்பை ஏன் பயன்படுத்தக்கூடாது என நினைத்தோம். எங்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறதோ அந்த பகுதிகளுக்கு இந்த பனிப்பாறைகளைக் கொண்டு செல்ல முயற்சி செய்கிறோம்," என்கிறார் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் துபாயின் நேஷனல் அட்வைசர் பீரோவின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா அல்ஷேஹி.
மேலும் அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய பகுதிக்குட்பட்ட ஹியர்ட் தீவில் தற்போது பனிப்பாறைகள் நிலைகொண்டுள்ளன. எங்களுடைய திட்டத்தின் ஒரு பகுதியை அங்கிருந்துதான் தொடங்கவிருக்கிறோம். ஆரம்பத்தில் சிறிய பனிப்பாறைகளைக் கொண்டு வருவதன் மூலம் இந்த திட்டத்தின் செயல்முறைகளையும், குறைபாடுகளையும் கண்டறியவுள்ளோம்," என்கிறார் அவர்.
கப்பல்களின் மேல் இந்த பனிப்பாறைகளை ஏற்றாமல், கடல் வழியாக மிதக்க வைத்து நகர்த்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நுட்பமாகும். இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியா மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா வழியாகவும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பனிப்பாறைகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், கொண்டு வரும் வழியிலேயே அவை உருகிவிடாதா?
"இந்த திட்டத்தை உருவகப்படுத்திப் பார்த்தபோது, கொண்டு செல்லும் வழியில் பனிப்பாறையில் இருந்து 30 சதவீதத்தை இழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகள் 300 முதல் 500 மில்லியன் கியூபிக் கேலன்கள் அளவிற்கு தண்ணீரை கொண்டுள்ளதால், இழப்பீடு தவிர்த்து மற்றவற்றைக் கொண்டு வந்தாலே அது பெரிய வெற்றிதான்," என்கிறார் அப்துல்லா.
"இந்த பனிப்பாறைகள் அண்டார்டிகாவின் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. சர்வதேச கடற்பரப்பு சட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் இவற்றை தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் கைப்பற்றி நீர் ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே யார் இதை கொண்டு செல்கிறார்களோ அவர்களுக்கே இது சொந்தம்," எனவும் அவர் கூறுகிறார்.
குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கான பாசன ஆதாரமாகவும் இருப்பது மட்டுமன்றி, உலகின் நல்வாழ்வுக்கே இது பங்களிக்கும் என்று நம்புகின்றனர்.
பனிப்பாறைகள் மூலம் கிடைக்கும் தண்ணீரால் தங்களது பாலைவனத்தைப் பசுமையாக மாற்ற முடியும் என துபாய் நம்புகிறது.
வியப்பளிக்கும் விதமாக இதற்கு முன்னர் பலரும் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க இந்த திட்டம் கைகொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: