You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பழங்குடியின சிறுவன்
தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்து அவமானப்படுத்திய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் காலணியை கழற்ற அறிவுறுத்தப்பட்ட பழங்குடியின சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் சிறுவனின் புகாரை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
அமைச்சர் சொல்கிறார் என்பதாலும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகில் இருந்ததால் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கான முகாம் நேற்று துவங்கியது, துவக்க விழாவிற்காக வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவன் கேத்தன் என்பவரை அழைத்து தனது காலில் இருந்த செருப்பை கழற்றிவிட உத்தரவிட்டார். இந்த காணொளி நேற்று முதல் சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் பிரபலமாகத் துவங்கியது.
இதனையடுத்து தனது பேரன் போல கருதி அந்த சிறுவனை செருப்பை கழற்றிவிட கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்தார்.
"நான் சாதாரண செருப்பு அணியாமல், 'பக்கிள்ஸ்' செருப்பை அணிந்திருந்தேன். அங்கே வயதானவர்களும், மூத்தவர்களும் இருந்தனர். சிறுவர்கள் சிலர் அங்கே விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் என் பேரன் போல ஒருவனை அழைத்து செருப்பின் பக்கிள்களை கழற்றிவிடச் சொன்னேன். அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை," என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்ட கேத்தன் என்ற 14 வயது பழங்குடியின சிறுவன் கூடலூர் வட்டத்தில் உள்ள மசினகுடி காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், ''யானை முகாம் விழாவிற்கு வந்த வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் என்னை ஒருமையில் பேசியதோடு தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட உத்தரவிட்டார். அமைச்சர் சொல்கிறார் என்பதாலும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகில் இருந்ததால் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டேன். என் நண்பனும் அப்போது அமைச்சரின் அருகில் வந்தான்.''
''இந்த காட்சிகள் பிரபலமானதையடுத்து எனக்கு அவமானம் ஏற்பட்டது. இதனால் நான் வீட்டிலேயே அழுது கொண்டிருந்தேன். அங்கிருந்த அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் எனக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுவன் கார்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். உடன் இருந்த சிறுவன் கார்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறார்.
தனது தந்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், தனது தாய் கூலி வேலைக்குச் சென்று தன்னையும் தனது சகோதரிகளையும் கவனித்துக்கொள்வதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் புகார் மனுவில் உடன் இருந்த சிறுவனும் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: