கொரோனா வைரஸ்: சீனாவிலிருந்து அழைத்துவரப்படும் இந்திய மாணவர்களின் நிலை என்ன? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "சீனாவிலிருந்து அழைத்துவரப்படும் இந்திய மாணவர்களின் நிலை என்ன?"
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து அழைத்து வரப்படும் 300 மாணவர்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது.
இதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தில்லியிலுள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 'ஹுபே மாகாணத்தின் வூஹானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏா்-இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை சென்றுள்ளது. இந்த விமானம் சனிக்கிழமை காலையில் இந்தியாவுக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வூஹானிலிருந்து வரவிருக்கும் 300 மாணவர்களுக்காக மானேசரில் தனி மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அவா்களுக்கு தில்லி விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னா், மானேசா் முகாமில் விரிவான பரிசோதனை நடத்தப்படும். அனைவரும் 2 வாரங்கள் வரை, முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்' என்றனர்.

தொடர்புடைய செய்திகள்
இந்து தமிழ்: "செந்தில் பாலாஜி வீடுகளில் போலீஸ் சோதனை"

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.62 கோடி பெற்ற புகாரின் பேரில், கரூரில் நேற்று முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் வீடு, நிறுவனத்தில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கும் `சீல்' வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜூலை வரை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.1.62 கோடி பெற்ற தாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணைக்காக, சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீஸார் நேற்று கரூர் வந்தனர். கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதேபோல, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் உட்பட மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவோரின் வீடு, அலுவலகங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான நிறுவனத்தில் போலீஸார் சோதனையிடச் சென்றதையடுத்து பாதுகாப்புக் காக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் திரண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர், போலீஸார் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, திருநங்கை பாவனா, போலீஸாரின் சோதனையை கண்டித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றார். உடனே, திமுகவினர் மற்றும் போலீஸார் தடுத்து அவரை காப்பாற்றினர்.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் முன்னாள் பங்குதாரர் ஒருவருக்குச் சொந்த மான கரூர் பாரதி நகரில் உள்ள டெக்ஸ்டைல் ஒன்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் நிறுவனத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
சென்னை, கரூர், திருவண்ணா மலை, கும்பகோணம் உட்பட 17 இடங்களில் சோதனை நடை பெறுகிறது. சோதனையின்போது சொத்து ஆவணங்கள், ஆபரண ரசீதுகள், தங்க நகைகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டுக்கு சோதனையிட நேற்று சென்றனர். வீடு பூட்டப் பட்டிருந்ததால், அந்த வீட்டுக்கு போலீஸார் `சீல்' வைத்தனர்.


தினத்தந்தி: "குரூப்-2 தேர்விலும் முறைகேடு"

பட மூலாதாரம், Getty Images
குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பது உறுதி ஆகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 14 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி.என். பி.எஸ்.சி. தட்டச்சர் மாணிக்கவேல் (வயது 26), கூரியர் வேன் ஓட்டுநர் வே.கல்யாணசுந்தரம் (31) ஆகிய 2 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் மாணிக்கவேல் மதுராந்தகத்தையும், ஓட்டுநர் கல்யாணசுந்தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் இவ்வழக்கில் கைது ஆனவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க காவல்துறைக்குத் தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அந்த தேர்வு தொடர் பான ஆவணங்களையும் போலீஸ் வசம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்து இருக்கிறது.
இதுதொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் க.நந்த குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் ஆவணங்கள் ஆய்வு, நேரடி விசாரணைகளின் மூலம் தவறுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த தேர்வர்கள் கலந்தாய்வுக்கு விரைவில் அழைக்கப்படுவர்.
இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் நடந்த குரூப்-2ஏ பதவிகளுக்கான தேர்விலும் தவறு நடந்துள்ளது என்று வந்த தகவல்களை டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாணைய குழுமம் கவனமுடன் ஆராய்ந்து தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இந்த தேர்வு குறித்தும் விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய ஆவணங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் தவறு நடந்திருப்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்த தேர்வை பொறுத்தவரை முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பு போக்குவரத்துத்துறை மூலமாக செய்யப்பட்டு அத்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் 33 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தற்போது உயர்நீதிமன்றம் தன்னுடைய ஆணையில் போக்குவரத்துத்துறை நடத்திய முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாக கூறி இப்பணியை முழுவதும் மறு ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதில் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்து எந்த வித சந்தேகமும் எழுப்பப்படவில்லை.
வேளாண் பொறியாளர் தேர்வில் அரசு விதிகளின்படி, இளநிலை பொறியாளர் (வேளாண் பொறியாளர்) பதவி, வேளாண் என்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கான முன்னுரிமை பதவி ஆகும். வேளாண் பொறியியல் படித்த தகுதியான தேர்வர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே இதர என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இந்த பணியில் இடம் அளிக்கப்படும்.
இந்த தேர்வு முடிவுகளில் மற்ற பொறியியல் மாணவர்களை காட்டிலும், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த வேளாண் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற தேர்வர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். எனவே இதிலும் எந்த விதமான தவறுகளும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
2019-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் இறுதியாக தேர்வான 181 பேரில் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகின. இதனை தேர்வாணையம் கவனமுடன் ஆராய்ந்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்ததன் அடிப்படையில் அதில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என உறுதிப்படத் தெரியவருகிறது.
தேர்வு முடிவு வெளிவந்த ஒருவார காலத்துக்குள் பல்வேறு பயிற்சி மையங்கள் நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையங்களிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாக அளித்துள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டுகிறது. இவ்வாறாக பயிற்சி மையங்கள் அளிக்கும் விளம்பரங்களில் ஒரே தேர்வரை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமைகோரும் போக்கு இருக்கிறது.
மேற்சொன்ன அனைத்திலும் புகார்கள் எதுவும் பெறப்படாமலேயே ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேர்வாணையம் விசாரணை செய்து முகாந்திரம் இருக்கும் இனங்களில் உரிய விசாரணை நடத்தப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் குறிப்பிட்ட புகார்கள், செய்திகள் தேர்வாணையத்தின் கவனத்துக்கு வரும்போது, அது எவ்வளவு சிறிய புகாராக இருந்தாலும் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
தேர்வர்களும் சமூக பொறுப்புணர்ந்து நேர்மையான வழிகளில் மட்டும் தேர்வினை எதிர்கொள்ளுமாறும், எவ்வித முறைகேடுகளுக்கும் துணைபோகாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இடைத்தரகர் களை நம்பவேண்டாம். இதுகுறித்த தகவல் தெரியவரும்போது தேர்வாணையத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மட்டுமின்றி வேறு எந்த தவறும் நிகழாத வண்ணம் இருக்க தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ' இப்படிதான் இயங்க போகிறது பி.எஸ்.என்.எல்'

பட மூலாதாரம், Getty Images
இன்று முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சென்னை வட்டம் 50 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களுடன் இயங்க போகிறது. ஏறத்தாழ 55 சதவீத ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றதை அடுத்து இந்த நிறுவனமானது மீதமுள்ள பாதிக்கும் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்க போகிறது.
அரசு அணுகுமுறை, நிதிப் பிரச்சினை, தொழில் போட்டி போன்ற எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்திருந்தன.
இது ஒருபுறம் இருக்க ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













