கொரோனா வைரஸ் தொற்று: சீனாவில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்ன?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், NICOLAS ASFOURI/getty Images

சீனாவிலிருந்து தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக பரவத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து சீன அதிகாரிகள் வுஹான் நகரில் பல கட்டுபாடுகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் வுஹான் நகரில் இருக்கும் சில இந்திய மாணவர்களை தொடர்பு கொண்டது பிபிசி.

News image

விடுதிக்குள்ளே உள்ளனர்

சீனாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வுஹான் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் மேலாண்மையின் ஆய்வு மாணவராக இருந்து வருகிறார் சவுரப் ஷர்மா. இவர் ஜனவரி 17 இந்தியா வந்திருக்கிறார். அதற்கெல்லாம் முன்னதாகவே கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியதாகவும், ஆனால் அது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் வுஹானில் இந்திய மாணவர்கள் பலர் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

சவுரப் ஷர்மா
படக்குறிப்பு, சவுரப் ஷர்மா

"குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். மக்கள் முகமூடி அணிந்து கொண்டு நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். எங்கள் பல்கலைக்கழகத்தில்கூட மாணவர்களை உள்ளே இருக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவை தொடக்கக்காலம் என்பதால் மக்கள் இந்த அளவு அச்சம் கொள்ளவில்லை. விடுதிகளில் தங்கும் மாணவர்கள் எங்கே செல்கின்றனர் என்ற தகவல்களை கூறி செல்ல வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தியது" என்றார்.

அசைவ உணவுகள் எதுவும் பல்கலைக்கழக உணவகத்தில் தற்போது கொடுக்கப்படுவதில்லை. மேலும் தேவையில்லாமல் விடுதிகளை விட்டு வெளியே செல்லக்கூடாது என மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டு என்பதால் சவுரபின் நண்பர்கள் உணவுப் பொருட்களை ஏற்கனவே வாங்கி வைத்து விட்டனர். இப்போது அதை வைத்தே தாங்கள் காலத்தை கழிப்பதாகக் சவுரப் தெரிவித்தார்.

உற்சாகம் இல்லாத புத்தாண்டு

மணிப்பூரை சேர்ந்த திதேஷ்வர் மயும் எனும் மாணவர் வுஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தங்குமிடத்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் மேலும் வெளியில் சென்றால் முகமூடியை அணிந்து செல்ல வேண்டும் என கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். புத்தாண்டு சமயம் முந்தைய ஆண்டுகளைப்போல உற்சாகமாக இல்லை. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் எனவும் தெரியவில்லை என்றார் திதேஷ்வர்.

திதேஷ்வர்
படக்குறிப்பு, திதேஷ்வர்

'அளவான உணவுப்பொருட்களே உள்ளன'

சென்னையை சேர்ந்த மோனிகா சேதுராமன் வுஹானில் படித்து கொண்டிருக்கிறார்.

"வுஹானில் சுமார் 500 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அவற்றில் 173 பேர் அவர்கள் தங்குமிடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக புத்தாண்டின் போது இவ்வாறு ஆகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார் மோனிகா.

சீன அரசு எடுத்த இந்த தடுப்பு நடவடிக்கை நல்லது எனவும் மாணவர்களுக்கு கையுறை, முகமூடி மற்றும் கிறுமி நாசினி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கான பொருட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் நிலைமை மாறிவிடும் என மோனிகா நம்புகிறார். மேலும் அவர் இந்திய தூதரகத்தோடும் தங்கள் குடும்பத்தோடும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: