நரேந்திர மோதி அரசு பட்ஜெட்டில் சொன்னபடி வளர்ச்சியை எட்ட முடியாதது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் 2019-20-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்ட விஷயங்கள், திட்டங்கள் என்ன, அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டன, என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அதிலிருந்து:

முந்தைய பட்ஜெட்டில் என்ன இலக்குகள் இருந்தன என்பதை முதலில் பார்க்கலாம். முதலாவதாக, வருவாய் - செலவு திட்ட மதிப்பீடு. எவ்வளவு வரி வருவாய் கிடைக்கும், எவ்வளவு செலவழிப்போம் என்ற கணக்கு இது. வரி வருவாயைப் பொறுத்தவரை, 2019-20 நிதி ஆண்டில் 24.6 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. வரி வருவாய் வளர்ச்சி என்பது, 18.3 சதவீதம் இருக்குமென்றும் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் வரை 11.7 லட்சம் கோடி ரூபாய்தான் வசூலாகியிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 18.3 சதவீதத்திற்குப் பதிலாக 0.8 சதவீதம்தான் இருந்திருக்கிறது.

News image

இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன என்றாலும் மேலே சொன்ன வளர்ச்சி விகிதத்தில் நம்முடைய எதிர்பார்ப்பான 24.6 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயை நிச்சயம் எட்ட முடியாது. பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைவிட பாதிக்கும் குறைவான தொகை இது. இது பட்ஜெட்டின் எல்லா அம்சங்களையும் பாதிக்கும்.

அடுத்ததாக பொதுத் துறை பங்குகள் விற்பனை. இந்த ஆண்டைப் பொறுத்தவரை பொதுப் பங்கு விற்பனையிலிருந்து 1.05 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறியிருந்தார்கள். ஆனால், கடந்த நவம்பர் வரை 18,099 கோடி ரூபாய்தான் கிடைத்திருக்கிறது. ஏர் இந்தியா விற்பனையில் நடப்பதையெல்லாம் பார்த்தால், இனி பொதுப் பங்கு விற்பனையில் பணம் ஏதும் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.

வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

இந்த 18 ஆயிரம் கோடி ரூபாயும் சந்தையிலிருந்து வரவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை வாங்கியிருப்பது மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிதான் வாங்கியிருக்கிறது. அவர்கள் வெளியில் கடன் வாங்கி, இந்த நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், தனியார் துறையைச் சேர்ந்த யாரும் பணம் முதலீடு செய்ய விரும்பவில்லை என்பதுதான்.

ஜிடிபி வளர்ச்சியில் வீழ்ச்சி

அடுத்ததாக உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சி. முதலில் Nominal GDPஐ எடுத்துக்கொள்ளலாம். ஜிடிபியையும் பணவீக்கத்தையும் கணக்கிட்டு வருவதுதான் இந்த Nominal GDP. இது இந்த ஆண்டில் Nominal GDP 12 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றார்கள். ஆனால், இப்போது 7.5 சதவீத வளர்ச்சிதான் இருக்கிறது. நம்முடைய ஜிடிபி வளர்ச்சி என்பது வெறும் 5 சதவீதமாக இருக்கிறது.

சீனாவோடு, அமெரிக்காவோடு, உலகத்தோடு ஒப்பிட்டால் நாம் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அது சரியல்ல. நமக்கு எந்த அளவுக்கு வளரும் திறன் (Potential Growth Rate) இருக்கிறது என்பதோடுதான் இதனை ஒப்பிட வேண்டும். தவிர, சர்வதேச நிதியத்தின் கீதா கோபிநாத் என்ன சொல்கிறார் என்றால், இந்தியாவின் மந்த நிலை, உலகின் பொருளாதாரத்தை 0.1 சதவீதம் கீழே இழுத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

ஜிடிபியில் நம்முடைய வளரும் திறமை என்பது 9.5 சதவீதம் வரை இருந்திருக்கிறது. அதேபோல, Nominal GDPஐப் பொறுத்தவரை, 2010-11ல் 20 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருக்கிறோம். நாம் ஏற்கனவே அடைந்த வளர்ச்சியை வைத்து, இந்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டால், நாம் எந்த அளவுக்கு கீழே விழுந்திருக்கிறோம் என்பது புரியும்.

தவிர, நம்முடைய பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும்போது 2.5 சதவீதம் கூடுதலாகக் கணக்கிடப்படுகிறது என்கிறார் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியம். சுப்பிரமணியன் சுவாமி 1.5 சதவீதம் அதிகமாக கணக்கிடுகிறோம் என்கிறார். நாம் இரண்டுக்கும் பொதுவாக, 2 சதவீதம் அதிகம் கணக்கிடப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதனை தற்போது அரசு சொல்லும் வளர்ச்சி விகிதத்திலிருந்து கழித்துவிட்டுப் பார்த்தால், நம்முடைய உண்மையான வளர்ச்சி என்பது வெறும் 2 அல்லது 2.5 சதவீதம்தான். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த வளர்ச்சி விகிதம். அதாவது 70 வருடத்திற்கு முன்பு இருந்த வளர்ச்சிதான் இப்போது இருக்கிறது.

வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா சுதந்திரம் அடைந்த உடனேயே பொருளாதார வளர்ச்சி 3-4 சதவீதமாக உயர்ந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு, 8-9 சதவீத வளர்ச்சியை எட்ட ஆரம்பித்தோம். Nominal GDP 20 சதவீதம்வரை சென்றது. இதோடு தற்போதைய வளர்ச்சியை ஒப்பிடுங்கள். எவ்வளவு மோசமாக இருக்கிறோம் என்பது புரியும்.

தவறாக முடிந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு

பட்ஜெட்டையும் இந்த வளர்ச்சியின்மையையும் பிரித்துப் பார்க்க முடியாது. வரி வருவாய் குறைந்ததற்கு, இந்த வளர்ச்சிக் குறைவு ஒரு முக்கியக் காரணம். இரண்டாவது காரணம் ஜிஎஸ்டி. 2014 தேர்தலின்போது, பா.ஜ.கவின் முக்கிய பிரசாரமாக, வளர்ச்சியைத் தருவோம் என்பதை முன்வைத்தார்கள். அந்தப் பிரசாரத்தில் பொருளாதார பிரச்சனை முக்கியப் புள்ளியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு, வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பண மதிப்பழப்பு, ஜிஎஸ்டி என்று செயல்படுத்தினார்கள். அவை மிகப் பெரிய தவறுகளாக முடிந்தன.

2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசாமல், முழுமையாக அரசியல் பக்கம் விவாதத்தை திருப்பினார்கள். பொருளாதாரம் பற்றிய விவாதமே இல்லை. வெற்றிக்குப் பிறகு, முத்தலாக் போன்ற விஷயங்கள் முன்னால் வந்தன. பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ந்து வந்தது. அடுத்தடுத்தும் அரசியல் பிரச்சனைகளே, முக்கியமான பிரச்சனைகளாக உருவெடுத்தன. இது சர்வதேச அளவிலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியப் பொருளாதாரம் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட் இந்த பிரச்சனைகளையெல்லாம் சரிசெய்யுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த பட்ஜெட்டில் நிறைய எதிர்மறைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, பெரிய பணக்காரர்கள் மீது 'சர்சார்ஜ்' விதிக்கப்பட்டது. ஏற்கனவே capital gainsக்கு அவர்கள் வரி செலுத்திய நிலையில், அவர்கள் மீது விதிக்கப்பட்ட புதிய வரியால் அவர்கள் ஊக்கமிழந்தார்கள். பலர் வெளியேறினார்கள். பங்குச் சந்தை வீழ ஆரம்பித்தது.

அடுத்ததாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புத் திட்டம் - சிஎஸ்ஆர். இது கட்டாயமாக்கப்பட்டதோடு, செய்யத் தவறுவது கிரிமினல் குற்றமாக்கப்பட்டது. அடுத்ததாக ஏஞ்சல் வரி. புதிதாக தொழில்துவங்க வருபவர்கள் செலுத்த வேண்டிய வரி இது. இது தொழில்முனைவோரை தடுத்தது.

வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்யுமென எதிர்பார்க்கப்பட்ட ஒரு பட்ஜெட் இப்படி புதிதாக பல சிக்கல்களை உருவாக்கியதால், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தின் மீதான மிகப் பெரிய அடியாக இந்த பட்ஜெட் பார்க்கப்பட்டது.

இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு, எதிர்மறை அம்சங்களை விலக்கிக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால், அதற்குள் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. இதன் பிறகு, நிதியாண்டின் நடுவில் கார்ப்பரேட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வரிச் சலுகை இருந்தது. ஏற்கனவே மாதாமாதம் வரி வருவாயில் எட்ட வேண்டிய இலக்கு எட்டப்படாத நிலையில், இந்தச் சலுகை வழங்கப்பட்டது. வரி வருவாய் குறைந்ததோடு, புதிதாக முதலீட்டாளர்களும் வரவில்லை.

பெரிய நிறுவனங்களிடம் பணம் இல்லாமல் இல்லை; ஆனால், பொருளாதாரம் கீழே சென்றுகொண்டிருப்பதால் புதிதாக யாரும் முதலீடு செய்ய விரும்பவில்லை. ரிசர்வ் வங்கி பல முறை வட்டி விகிதத்தை குறைத்தது. ஆனாலும் முதலீடு வரவில்லை. பதிலாக பணவீக்கம் ஏற்பட்டது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகளைப் பொறுத்தவரை பணவீக்கம் 7.5 சதவீதமாக உயர்ந்தது. இது மிக அபாயகரமான நிலை.

இப்போதைய சூழலில் பொருளாதாரம் புத்துயிர் பெறாவிட்டால், புதிதாக முதலீடுகள் ஏதும் வராது. வட்டி விகிதத்தைக் குறைத்தது போன்ற நடவடிக்கைகள் முதலீட்டைக் கொண்டுவர உதவும் என நினைத்தார்கள். ஆனால், பிரச்சனை முதலீடு தொடர்பானதல்ல. தேவை (Demand) தொடர்பானது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள தேவை தொடர்பானது. நிறுவனங்களுக்கு சலுகை அளித்தால் அவர்கள் உடனே அதை சந்தையில் முதலீடு செய்ய மாட்டார்கள். ஆனால், கிராமப்புற பகுதிகளில் உடனே செலவுசெய்வார்கள். அதை அரசு செய்யவில்லை.

வறுமை அதிகரிப்பு

வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக, சமூகரீதியில் ஒரு பதற்றமான நிலை இருந்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குவார்கள். ஹாங்காங்கில் அதுதான் நடந்தது. ஆனால், இங்கே அதனைப் புரிந்துகொள்ளவேயில்லை.

சமீபத்தில் நுகர்வு குறித்த புள்ளிவிவரத்தின் ஒரு பகுதி வெளியானது. அந்தப் புள்ளிவிவரங்களின்படி, நுகர்வு குறைந்திருக்கிறது. வரலாற்று ரீதியாக நுகர்வு குறைந்ததே இல்லை. ஏனென்றால், பணத்தை செலவழிப்பது என்பது குறையாது. ஆனால், முதல் முறையாக நுகர்வு, குறிப்பாக உணவுப் பொருள் நுகர்வு குறைய ஆரம்பித்திருக்கிறது. வறுமை அதிகரித்திருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.

இதுதவிர, புள்ளிவிவரங்களை தவறாக அளிப்பது ஒரு முக்கியமான பிரச்சனை. இதற்கு முன்பாக எகனாமிக் சர்வேவில் கொடுத்த வரி வருவாயும் பட்ஜெட்டில் கொடுத்த வரி வருவாயும் வேறாக இருந்தன. இந்த வேறுபாடு ஜிடிபியில் ஒரு சதவீதமாக இருந்தது. அதாவது 1.76 லட்சம் கோடி ரூபாய். இந்த வித்தியாசத் தொகையை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் வாங்கப்பட்டது. உண்மையில், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அந்தப் பணம் அவர்களிடம் இல்லை என்பதுதான் அதன் அர்த்தம். இப்படிப்பட்ட தகவல்களோடு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அரசியல் சாஸன ரீதியாக இது எப்படி சரியாக இருக்கும்?

மறக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி

இந்த முறை வரி வருவாயில் குறைந்தது 3 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கும். இது தவிர, 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வருவாய் குறைந்துகொண்டே போவதால் செலவுகள் கடுமையாகக் குறையும். ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவோம் என்றார்கள். அந்தத் திட்டத்தைத் துவங்கவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. அதில் கூலி உயர்த்தப்படவில்லை. பட்ஜெட்டில் சொல்லப்பட்ட பல திட்டங்கள் துவங்கப்படவில்லை.

மறக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images

தவிர, பற்றாக்குறையை சரிசெய்ய வெளியில் கடன்வாங்கி, அதில் 75 சதவீதம் வழக்கமான செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. இது மிகப் பெரிய தவறு.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும்போது, 14 சதவீத வளர்ச்சி இருக்கும் அல்லது நாங்கள் அதைத் தருகிறோம் என்று மத்திய அரசு சொல்லவும்தான் மாநிலங்கள் அதனை ஏற்றுக்கொண்டன. வரி வருவாயைப் பொறுத்தவரை மாநில அரசானது 65 சதவீதம் அளவுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் பங்கு 35தான். ஆனால், ஜிஎஸ்டி வரியை பகிர்ந்துகொள்ளும்போது 50:50 என பிரித்திருக்கிறார்கள். அதிலேயே மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு வருவாயை விட்டுத்தருகின்றன.

குறைக்கப்பட்ட மாநில நிதி

14வது நிதிக் குழு மாநிலங்களுக்கு மொத்த வரியில் 42 சதவீதம் பகிர்வு அளிக்க வேண்டுமெனக் கூறியது. ஆனால், செஸ், சர்சார்ஜ் போன்றவற்றைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையில்தான் 42 சதவீதம் அளிக்கப்படுகிறது. மொத்த வரியில் இது வெறும் 33 சதவீதம் அளவுக்குத்தான் இருக்கும். இந்த நிலையில், மாநில அரசின் நிதியையும் குறைக்க நினைக்கிறார்கள்.

வளர்ச்சிக்கான செலவுகளில் 65 சதவீதத்தை மாநில அரசுகள்தான் செய்யும் நிலையில், அதில் கைவைப்பது மாநிலத்தின் நிதி நிலையை மோசமாக்கும். இதற்கு நடுவில் மத்திய அரசே பல திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக நேரடியாக செலவுசெய்ய நினைக்கிறது. அதில் 40 சதவீதம் அளவுக்கு மாநில அரசுகள்தான் செய்கின்றன. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு நடுவில் ராணுவம் மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்பிற்கென தனியாக நிதியை உருவாக்க வேண்டுமென நிதி கமிஷனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த வரி வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் இதற்கென ஒதுக்கப்படும். இதுபோக, ஏற்கனவே குறிப்பிட்டது போக சர்சார்ஜ், செஸ் ஆகியவையும் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகையில்தான் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

இப்போது தேசப் பாதுகாப்பிற்கென சுமார் ஐந்தரை லட்சம் கோடி செலவழிக்கப்படுகிறது. இதனை தனியாக ஒதுக்கினால், மாநில அரசும் 42 சதவீதம் தருவதாகிவிடும். இது அரசியல்சாஸனத்திற்கு விரோதமானது. மத்திய அரசின் பட்டியலில் உள்ளவற்றில் மிக முக்கியமானது பாதுகாப்புதான். அதிலும் மத்திய அரசு முழுமையாக செலவழிக்காது என்றால் எப்படி?

ஜோதி சிவஞானம்

பட மூலாதாரம், K.JOTHI SIVAGNANAM

படக்குறிப்பு, ஜோதி சிவஞானம்

இப்போதைய சூழலில் நிலைமையைச் சீராக்க செய்ய வேண்டியவை இதுதான்: முதலில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு உண்மையான தகவல்களைத் தர வேண்டும். உண்மையான வருவாய், செலவு பற்றி விவரங்களைத் தர வேண்டும். நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகை தரக்கூடாது. அரசியல் ரீதியாக அழுத்தம் இருந்தாலும் அதைச் செய்யக்கூடாது. ஏனென்றால் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

கார்ப்பரேட்களுக்கு அளித்த வரிச்சலுகையைத் திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் நிதிநிலையை மோசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஏனென்றால் பெரும்பாலான மாநில அரசுகள், வரி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசு ஒரு தடவைகூட இந்த இலக்குகளை எட்டவில்லை.

ஜிஎஸ்டியை உயர்த்தக் கூடாது

இது தவிர, ஜிஎஸ்டியை அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது. அதைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அது பேரழிவை ஏற்படுத்தும். இது கிராமப்புற மக்களிடம் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். புதிதாக எந்தத் திட்டங்களையும் போடக்கூடாது. உடனடியாக செலவுசெய்யும் வகையில் கிராமப்புற மக்களிடம் செலவுசெய்யும் வகையில் பணத்தை அளிக்க வேண்டும். அது தேவையை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு 6000 ரூபாய் தரும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தலாம்.

சிறு, மத்திய தொழில்துறையினர் செலுத்திய வரியில் திரும்பச் செலுத்த வேண்டிய வரியாகவும் காண்ட்ராக்டர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமாகவும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இதனைக் கொடுத்தால், அவை சந்தையில் செலவழிக்கப்படும்.

கிராமப்புற பகுதிகளில் சிறிய சிறிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால் கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், அரசு இதனையெல்லாம் ஏற்க மறுக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: