டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு தேர்வெழுத வாழ்நாள் தடை

TNPSC group 4

பட மூலாதாரம், Aquir / getty images

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் இடைத்தரகர்கள் உதவியோடு முறைகேடு செய்து அரசுப்பணியை பெற முயன்ற 99 நபர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு செய்த தேர்வர்கள் மற்றும் இடைத் தரகர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

கடந்த செப்டம்பர் 2019 முதல் வாரத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய சுமார் 9,398 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக முறைகேடு செய்து தேர்வாகியுள்ளனர் என சமூக வலைதளங்களிலும், பிறகு ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தது.

''விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது,'' என தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

''சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைத் கள ஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தேர்வாணையம் கூறியுள்ளது.

மேலும் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தேர்வாணையம் தடைவிதித்துள்ளது. ''சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றும் தேர்வாணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: