நரேந்திர மோதி தன் மன் கி பாத் உரையில் குறிப்பிட்ட பர்வீன் காஷ்மீரிலிருந்து திருப்பூர் வந்தது ஏன்?

காஷ்மீரில் இருந்து திருப்பூர் வரை
    • எழுதியவர், ஜெயலக்ஷ்மி ராமலிங்கம்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பிருந்தாலும் நான் விருப்பப்பட்டுத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்கிறார் காஷ்மீரிலிருந்து வந்து திருப்பூரில் வேலை செய்யும் பர்வீன் பாத்திமா.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு உரையாற்றிய கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள காஷ்மீர் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அவர்களில் ஒருவர்தான் பர்வீன் ஃபாத்திமா.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட கார்கில் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா தற்போது பின்னலாடை நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராக இருக்கிறார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழுடன் அவர் நடத்திய தொலைபேசி உரையாடலில் இருந்து..

தமிழ் தெரியாமல் எப்படி சமாளிக்கிறீர்கள்?

இந்தி மற்றும் காஷ்மீரி என இரு மொழிகள் மட்டுமே தெரிந்த எனக்கு தொழிற்சாலையில் வேலை செய்யும் சக தமிழ் ஊழியர்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். வேலை செய்யும் நிறைய பேர் வட மாநிலத்தவர்கள்தான். அதனால் மொழி தெரியாதது சிரமமாக இல்லை.

இமயமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த உங்களுக்குத் தமிழ் நாடு பிடித்துள்ளதா?

வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு இருந்தது. எனினும் இருப்பதிலேயே தூரமாக இருக்கும் தமிழகத்தை தேர்வு செய்தேன்.

தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் இங்குள்ள உணவு சிறிது வேறுபாடாகத் தெரிந்தாலும், இப்போது எங்களுக்கு எல்லாம் பிடித்துள்ளது.

இங்கே வந்து ஆறு மாதம் ஆகிறது ஆனால் வானிலை எங்களுக்கு சிறிது கடினமாக இருக்கிறது அதனால் நிறையப் பேர் இப்போது விடுமுறையில் சென்றுள்ளனர்.

சிக்கிமில் ஆறு மாத காலம் பயிற்சியை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டதால், இங்கே உள்ள பிற பெண்களை பார்த்து கொள்ளும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் சாப்பாடு, சினிமா பற்றி....

தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு விதமான உணவு உண்கிறார்கள். அவற்றை நாங்கள் இதற்கு முன்னாள் பார்த்ததே இல்லை. எங்களுக்கு நிறுவனம் கொடுத்திருக்கும் தங்குமிடத்தில் எங்களுக்கென்று தனியாக காஷ்மீரின் உணவு தயாரிக்கப்படும்.

தொழில்துறை
படக்குறிப்பு, திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்

கொஞ்சமாகத் தமிழ் கற்றுக்கொண்டுள்ளேன். தமிழ் திரைப்படங்களின் நடிகர்கள் பெயர்கள் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகள் பிடித்துள்ளன.

காஷ்மீரில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டது உங்களை எப்படி பாதித்தது?

சமீபத்தில் தொலைபேசி சேவை மற்றும் இணைய சேவை காஷ்மீரில் முற்றிலுமாக முடுக்கப்பட்டபோது என்னுடைய குடும்பத்தினரிடம் பேச மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது நிலமை சற்று சீரடைந்து வருகிறது.

நரேந்திர மோதி உங்களைக் குறிப்பிட்டுப் பேசியதை எப்படி நினைக்கிறீர்கள்?

பிரதமர் மோதி என்னைப் போன்றோரைக் குறித்து நாட்டு மக்களிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறு கிராமத்திலிருந்த என்னைப்போன்ற ஏழைகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததற்காகத் தான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நரேந்திர மோதி குறிப்பிட்ட ஹிமாயத் திட்டம் குறித்து எப்படி அறிந்தீர்கள்?

உள்ளூரில் இருக்கும் ஒருவர் மூலம் ஹிமாயத் திட்டம் குறித்து அறிந்து சிக்கிமிற்கு பயிற்சி பெறச் சென்றேன். 2019 ஜூன் மாதம் பயிற்சி முடிந்ததும் ஜூன் கடைசியில் வேலை கிடைத்தது. ஜூலை மாதக் கடைசியில் திருப்பூரில் வேலைக்கு சேர்ந்தேன்.

வேலைவாய்ப்புக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வரும் தென்னிந்திய நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது.
படக்குறிப்பு, வேலைவாய்ப்புக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வரும் தென்னிந்திய நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது.

12வது வரை படித்த பர்வீனுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். ஆனால் வீட்டில் கட்டுப்பாடு இருப்பதால் தன்னால் வெளியே வர இயலவில்லை. வெளியே வருவதற்கான ஒரு வாய்ப்பை இந்த ஹிமாயத் திட்டம் ஏற்படுத்தி தந்துள்ளதது.

தமிழகம் வர உங்கள் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனரா?

தமிழ்நாட்டில் வேலை கிடைத்தபிறகும் இங்கே அனுப்ப முதலில் என்னுடைய வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பயிற்சியளித்த இடத்திலிருந்து சிலர் வந்து பெற்றோரிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள செய்தனர்.

உங்கள் குடும்பத்தின் பின்னணி என்ன?

தந்தை சிறு சிறு வேலைகள் பார்ப்பவர். தந்தை , தாய், ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி , தாத்தா, பாட்டி என குடும்பத்தில் பலர் உள்ளனர். வீட்டுக்கு மூத்த பெண்ணான பர்வீன் தற்போது வேலை செய்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோதியின் உரை

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஹிமாயத் என்னும் திட்டம் உள்ளது.

அந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பர்வீன் ஃபாத்திமா இன்று திருப்பூரில் இருக்கும் ஒரு ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று நரேந்திர மோதி குறிப்பிட்டிருந்தார்.

லே, லடாக்கில் பகுதிகளை சேர்ந்த பல காஷ்மீரி பெண்கள் ஹிமாயத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அதே ஆடை தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஹிமாயத் திட்டத்தின் மூலம் 77 வெவ்வேறு விதமான தொழில்களில் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 18000 இளைஞர்கள் பலனடைந்தனர் எனக் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: