சந்தனமேரி: பர்மாவிலிருந்து வந்து சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் பெண் #iamthechange

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 22வது அத்தியாயம் இது.)
ஆயா, அம்மா, அப்பத்தா, அம்மாச்சி, அத்தை இன்னும் விதவிதமாக உறவு சொல்லி அழைக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு சாதி ஒடுக்குமுறைகள் குறித்து விழிப்புணர்வு பாடலை பாடிக் கொண்டிருக்கிறார் சந்தன மேரி.
சந்தனமேரியின் ஒரே லட்சியம் ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகத்தை கட்டியமைப்பட்டது. அதற்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்.
சரி யார் இந்த சந்தனமேரி?
சந்தனமேரியின் கதை பர்மாவிலிருந்து தொடங்குகிறது.
பர்மாவுக்கு வாழ்வாதாரத்திற்காக சென்றவர்கள் திரும்ப அனுப்பப்பட்டபோது, அங்கிருந்து அனைத்தையும் இழந்து வெறும் நம்பிக்கையை மட்டும் சுமந்து வந்தவர்களில் சந்தனமேரியின் குடும்பமும் ஒன்று.
பர்மாவிலிருந்து வந்த சந்தனமேரி இங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறையை கண்டு அதிர்ச்சி அடைகிறார். ஒரு பக்கம் சொந்த வாழ்க்கையில் பொருளாதார சிக்கல், மற்றொரு பக்கம் இங்கு நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகள். சந்தனமேரி தயங்கி நிற்கவில்லை, திகைத்து ஒதுங்கவில்லை. சாதிய பிரிவினைகளுக்கு எதிராக போராட முடிவு செய்கிறார்.
விவசாய தொழிலாளியாக உழைத்துக் கொண்டே, சிவகங்கை மாவட்டம் ஓரிக்கோட்டை கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சாதிய பிரிவினைகளை எதிர்த்து போராடி வருகிறார் 67 வயதான சந்தனமேரி.

"பல்லாயிரம் கிலோ மீட்டர் பாயும் நதியை இணைக்க வேண்டும் என்கிறார்கள். எனக்கு சில மைல்கள் இடைவெளியில் இருக்கும் ஊரையும், சேரியையும் இணைத்தாலே போதும்," என்று கூறி சந்த மேரி கொத்தடிமை முறைக்கு எதிராகவும் பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.
பர்மா டூ சிவகங்கை
பர்மாவிலிருந்து தமது 12வது வயதில் சிவகங்கை மாவட்டம் சூரணம் கிராமத்திற்கு வந்திருக்கிறார் சந்தனமேரி. அப்போது அவருக்கு வயது 12.
ஞானபிரகாசத்துடன் 19 வயதில் அவருக்கு திருமணம் ஆகிறது. திருமணத்துக்குப் பின் கணவர் ஊரான ஓரிக்கோட்டையில் குடியேறுகிறார்.
அப்போது நடந்த சில சம்பவங்கள்தான் தம் வாழ்க்கையையே திருப்பிப் போட்டதாக கூறுகிறார் சந்தனமேரி.
சந்தனமேரி, "1987ஆம் ஆண்டு என நினைக்கிறேன். சாதி இந்துக்களின் சுபகாரியம் மற்றும் இறுதி சடங்குகளில் சம்பளம் இல்லாத தொழிலாளியாக பணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம். இது என்னை மிகவும் பாதித்தது. கேள்வி கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது ஒடுக்கப்பட்ட பல பேர் எந்த சம்பளமும் இல்லாமல் கொத்தடிமைகளாக சாதி இந்துகள் வீட்டில் பணி செய்கிறார்கள் என்று. இது என்னை அதிர்ச்சி அடைய செய்தது," என்கிறார்.

முதலில் தமக்காக ஒலித்த உரிமை குரல், பின்னர் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூக்கத்திற்காகவும் என்று விரிவடைந்திருக்கிறது.
ஆரம்ப கால பயணம்
''ஆரம்பத்தில் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. நாம் ஏன் சுயமரியாதையோடு வாழக்கூடாது என தொடர்ந்து பேசினேன். நானும், என் கணவரும் கொத்தடிமை வேலை செய்யமாட்டோம் என உறுதியாக இருந்தோம். சம்பளம் இல்லாமல் மீதமான உணவையும், அரிசியையும் ஏன் நாம் வாங்கவேண்டும் என கேள்விகேட்டேன். படிப்படியாக மக்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள தொடங்கினர். கூலி கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவோமென தீர்க்கமாக முடிவெடுத்தனர்," என தனது ஆரம்ப கால பயணத்தை விவரித்தார்.
தமது போராட்டங்கள் குறித்து விவரிக்கும் அவர், ஒடுக்கப்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தைதான் தாம் சாதனையாக கருதுவதாக கூறுகிறார்.
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


அவர், ''தொண்டி பகுதியில் தலித் மக்கள் நுழையக்கூடாது என பாதைகள் தடுப்புவைத்து அடைக்கப்பட்டிருந்தன. அந்த பாதைகள் முன், பெண்களை திரட்டி போராட்டம் நடத்தினோம், அந்த பாதைகளை எல்லோரும் பயன்படுத்தும் சாலையாக மாற்றினோம். தாழ்த்தப்பட்ட வகுப்பு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த கொடுமையை எதிர்த்தேன்.''
''பெற்றோர்களுடன் காவல்நிலையம், ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டேன். இன்று எங்கள் ஊரில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் பயமின்றி பள்ளிக்கூடம் செல்கிறார்கள் என்பதே எனக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன்,'' என்றார்.
காலனி சாந்திபுரமானது
"காலனி என்பது ஒன்றும் தவறான சொல் அல்ல. ஆனால், இன்று அது எதனை குறிக்க பயன்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை குறிக்கதானே? அப்படித்தான் எங்கள் பகுதியும் குறிக்கப்பட்டது. அதற்கு எதிராக போராடினோம்," என்கிறார்.

முன்பு 'காலனி' என அழைக்கப்பட்ட அந்தப் பகுதி, இப்போது 'சாந்திபுரம்' என அழைக்கப்படுகிறது.
"கிராம மக்கள்தான் 'சாந்திபுரம்' என பெயரிட்டனர் . தற்போது அரசாங்க பதிவில் கூட சாந்திபுரம் என்றே உள்ளது. பேருந்து நிறுத்தம் சாந்திபுரம் பேருந்து நிறுத்தம் என சொல்லப்படுகிறது,'' என்கிறார் அவர்.
கோயில் நுழைவு போராட்டம்
பெண்கள் முன்னெடுத்த ஆலய நுழைவு போராட்டம் குறித்து நம்மிடம் விவரித்தார் சந்தன மேரி.
''தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சிறுவாச்சி முத்துநாயகி அம்மன் கோயிலில் போராட்டம் நடத்தினோம். பலர் தாக்கப்பட்டனர். அந்த போராட்டத்தை தலைமையேற்ற தோழர் மாடக்கோட்டை சுப்பு சிறிது காலத்தில் கொல்லப்பட்டார் என்பது வேதனையான நிகழ்வு. போராட்டத்திற்கு செவிமடுத்த ஆட்சியர் குத்சியா காந்தி ஒரு வாரம் தலித் மக்கள் கோயிலில் வழிபாடு செய்ய பாதுகாப்பு அரணாக செயல்பட்டார். சில காலத்தில், நாசகார கும்பலால் அந்த கோயில் சேதாரம் செய்யப்பட்டது. தலித் மக்கள் வணங்கிய கடவுள் தீட்டுப்பட்டவர் என நினைத்துவிட்டார்கள் போலும்,'' என்கிறார்.
அதேபோல கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் தலித் மக்களும் தேர் இழுக்க அனுமதிக்கவேண்டும் என கேட்டதால், தேரோட்டம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
''கண்டதேவி கோயில் தேர்வடத்தை தலித் மக்கள் இழுக்க சாதி இந்துக்கள் தடையாக இருந்தார்கள். சாதி இந்து பெண்களை முன்னிறுத்தி பெண்கள் மட்டும் இழுக்கட்டும் என சாதி இந்துக்கள் சொல்லவே, நான் சுமார் 400 தலித் பெண்களை திரட்டி, இந்த தேரோட்டத்தில் தலித் பெண்கள் பங்கேற்கவேண்டும் என முறையிட்டேன். பல அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின. சாதி வேறுபாடின்றி தேரோட்டத்தில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என தீர்ப்பு வந்ததால், ஆதிக்க சாதியினர் இன்றுவரை தேரோட்டம் நடைபெறாமல் பார்த்து கொள்கிறார்கள்,''என்கிறார் சந்தன மேரி.

சாதி வேற்றுமைகள் கிறிஸ்துவ மதத்திலும் உள்ளன என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை குருமார்களாக ஏற்றுக்கொள்வதில் தடைகள் உள்ளன என்கிறார் சந்தன மேரி. இந்துவோ,கிறிஸ்துவமோ சாதி வேற்றுமைகள் எங்கு நடந்தாலும் அதனை எதிர்க்கும் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிறார்.
''பள்ளர் கிறிஸ்துவ குருமாணவர்களுக்கு குருபட்டம் மறுக்கப்படுவதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறேன். சாதி அடிப்படையில் ஒரே கிராமத்தில் தனித்தனி சிற்றாலயங்கள் நடத்தப்படுகின்றன. தலித் கிறிஸ்துவர்கள் மீதான தீண்டாமையை எதிர்த்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து 2017ல் பொது விசாரணையில் பங்கேற்றேன். சிவகங்கை மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்துவர்களுக்கு குருத்துவ பட்டம் வழங்கவேண்டும் என்பதில் தீவிரமாக பேசிவருகிறேன்,''என்கிறார் அவர்.
குழந்தைகளுடனான உரையாடல்
சமூகத்தில் சாதி ஒழிய வேண்டுமானால், குழந்தைகளுடன் உரையாடல் நடத்த வேண்டும் என்கிறார் சந்தனமேரி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கல்வி மையம் ஒன்றை அமைத்து குழந்தைகளுக்கு சாதிபேதம் தேவையில்லை என்றும், ஆண்-பெண் சமத்துவம் பற்றிய பாடல்களை சொல்லித்தருகிறார். அதேபோல பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்தால், உடனே புகார் செய்யவேண்டும் என்றும் கற்பிக்கிறார்.

சந்தனமேரி, ''சாதி என்பது ஒரு வியாதி. இந்த வியாதி அடுத்து வரும் தலைமுறையை பாதிக்கக்கூடாது என்பதற்காக சமூக கல்வி மையத்தை நடத்துகிறேன். தாழ்த்தப்பட்ட குழந்தைகளை கழிவறைகளை கழுவ வைக்கும் பழக்கம், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் படிக்கமாட்டார்கள் என மட்டம் தட்டுவது என குழந்தைகளுக்கு நேரும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறேன். குழந்தைகள் சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதை வெளிப்படையாக சொல்லவேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்,'' என்கிறார்.
குழந்தைகளுக்கு கற்பித்தல் மூலம் மட்டுமே ஒரு சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்கிறார் அவர்.
அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம்
தலித் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது எனக் கருதும் இவர், உழைக்கும் பெண்கள் இயக்கம் என்ற அமைப்பை கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.
''பல அரசியல் கட்சிகளில் தலைமை பொறுப்புகள், முடிவு எடுக்கும் பொறுப்புகளில் பெண்களை நியமிப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்துவிட்டேன். என்னுடைய ஒவ்வொரு போராட்டத்திலும் துணையாக இருந்தது சாதாரண குடும்ப பெண்கள்தான். இவர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே எந்த போராட்டமும் வெற்றி பெறும். தொடக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு பயணித்தேன். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புடன் வேலை செய்தேன். எல்லா அமைப்புகளும் உதவுகின்றன. ஆனால் சமூக மாற்றத்திற்கு உழைப்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு பல தடைகள் உள்ளன,''என்கிறார் சந்தன மேரி.
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு
''ஆரம்ப கட்டத்தில் குடும்பத்தில், எங்கள் ஊரில் எனக்கு அவப்பெயர் இருந்தது. ஆனால் என் இலக்கை நோக்கி நான் பயணிக்க விரும்பினேன். ஒரு சில மாதங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்தும் இருந்தேன். அந்த இடைவெளி என்னை அவர்கள் புரிந்துகொள்வதற்கான காலமாக இருந்தது. அவ்வப்போது உறவினர்கள் புகார் சொன்னாலும், என் வேலையை என் குடும்பம் உணர்ந்துகொண்டது,''என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












