மகள் 'ஆரத்தி' எடுத்ததால் தொலைக்காட்சியை உடைத்த ஷாஹித் அஃப்ரிடி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - மகள் 'ஆரத்தி' எடுத்ததால் தொலைக்காட்சியை உடைத்த ஷாஹித் அஃப்ரிடி

பட மூலாதாரம், Hannah Peters / Getty
இந்திய தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்து, அதேபோல் வீட்டில் ஆரத்தி எடுப்பது போன்ற பாவனையை தன் மகள் மேற்கொண்டதால் கோபமடைந்த முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, வீட்டில் உள்ள தொலைக்காட்சியை உடைத்து விட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தனது இந்த செய்கையை அஃப்ரிடி ஒப்புக்கொண்ட காணொளி ஒன்று, அண்மையில் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலனது. இது மிகவும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காணொளியில் நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர், அஃப்ரிடியிடம் எப்போதாவது அவர் வீட்டில் உள்ள தொலைக்காட்சியை உடைத்ததுண்டா என்று வினவினார். அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, ''என் மனைவியால் ஒருமுறை அவ்வாறு நடந்தது. ஸ்டார்பிளஸ் சானலில் வெளியாகும் தொடர்கள் மிகவும் பிரபலமாக உள்ளதால் பலரும் இங்கு அதை பார்ப்பதுண்டு'' என்று நினைவுகூர்ந்தார்.
''இந்த தொலைக்காட்சி தொடர்களை தனியாக பார்க்குமாறு என் மனைவியிடம் பலமுறை நான் கூறியுள்ளேன். குழந்தைகளுடன் இந்த தொடர்களை பார்க்காதே என்று கூறியதையும் மீறி, அவர் என் குழந்தைகளுடன் இந்த தொடரை பார்த்தாள். அப்போது என் மகள் ஒரு தொடரில் காட்டப்படுவது போல ஆரத்தி செய்வது போல் பாவனை செய்தாள். இதனால் கோபமடைந்த நான் தொலைக்காட்சியை உடைத்துவிட்டேன் என்று கூறினார்.
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.
இந்த காணொளியில் இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை அஃப்ரிடி கிண்டல் செய்ததாக அவர் மீது பலரும் குற்றம்சாட்டி விமர்சனம் செய்து வருவதை அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளாது.

5 மாதங்களுக்கு பிறகு எஸ்எம்எஸ் வசதியை பயன்படுத்தவுள்ள காஷ்மீர் - டைம்ஸ் ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்எம்எஸ் (குறுந்தகவல்) வசதி மீண்டும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேடு வெளியிட்டுள்ளது.
ஸ்ரீநகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த செய்தியை, ஜம்மு காஷ்மீர் அரசின் முதன்மை செயலாளரான ரோகித் கன்சால் நேற்று தெரிவித்தார்.
''நள்ளிரவு முதல் எஸ்எம்எஸ் வசதியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளையில் இணையதள வசதியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து இறுதி முடிவு எதுவும் தற்போது எட்டப்படவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், வரும் நாட்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் படிப்படியாக பிராட்பேண்ட் இணையதள வசதி செயல்பாட்டுக்கு வரும் என்றும், மாநிலம் முழுவதிலும் நிலைமை முற்றிலும் சீரான பிறகு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசமைப்புச் சட்டம் 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் குறுந்தகவல் மற்றும் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி: குப்பைக் கிடங்கில் இயற்கை தோட்டம்

பட மூலாதாரம், EyesWideOpen / Getty
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, சென்னை மாநகராட்சியால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் மாதிரித் தோட்டத்தை மாநகராட்சி அமைத்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து, மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கிடங்கு சதுப்பு நிலத்தில் உள்ளதால், அங்குள்ள குப்பைகளை அகற்ற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில், பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களைக் கொண்டு மாதிரித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை உரம், இயற்கை வேளாண்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உரம் தயாரிப்பு மையத்துக்கு அருகிலேயே மாதிரித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோட்டத்தில் பசலைக்கீரை, சிறுக்கீரை, வெண்டைக்காய், பச்சை மிளகாய் என 10க்கும் மேற்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதாக மேலும் இந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமலர் : உச்சத்தில் தங்கம்: 2019ல் பவுனுக்கு ரூ.5,768 உயர்வு
தமிழகத்தில் 2019ல் மட்டும் ஆபரண தங்கம் விலை பவுனுக்கு 5,768 ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறுகிறது தினமலர் நாளிதழ் செய்தி.
சர்வதேச நிலவரங்களை பொறுத்து உள்நாட்டில் தங்கத்திற்கு தினமும் காலை மாலை என இரு வேளைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாலை நிலவரமே அன்றைய தின விலையாகக் கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்ததால் நேற்று கிராம் தங்கம் 3,742 ரூபாய்க்கும்; பவுன் 29 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனையானது.
ஓராண்டில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 721 ரூபாய் உயர்ந்து 3,742 ரூபாயாக அதிகரித்துள்ளது. பவுனுக்கு 5768 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 936 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 2019 செப்டம்பர் 4ம் தேதி பவுன் தங்கம் விலை முதல் முறையாக 30 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்தது. அதன்படி அன்று காலை 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 3765 ரூபாய்க்கும்; பவுன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகின. அன்று மாலை கிராம் தங்கம் 3741 ரூபாயாகவும்; பவுன் 29 ஆயிரத்து 928 ரூபாயாகவும் குறைந்தன. இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












