You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘’இது பேரணி அல்ல; போர் அணி’’ - குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி பேரணி
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் மிகப் பெரிய பேரணி ஒன்றை சென்னையில் நடத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை காலை ஒன்பதரை மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ வளாகத்திற்கு அருகில் இந்தப் பேரணி துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு கட்சிகளின் தொண்டர்களும் காலை எட்டரை மணிக்கு முன்பிலிருந்தே அந்தப் பகுதியில் குவியத் துவங்கினர்.
இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், பேரணியைக் கண்காணிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், சிறப்புக் காவல் படையினர் கவச உடைகள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, ட்ரோன்கள் மூலமும் பேரணியைப் படமெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பேரணி துவங்குவதற்கு முன்பாக தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து, அமர்ந்திருந்தனர். இதற்குப் பிறகு காலை 10.20 மணிளவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேரணி துவங்குமிடத்திற்கு வந்தார். அதற்குப் பிறகு பேரணி துவங்கியது.
இந்தப் பேரணியில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.ஐயின் மாநிலச் செயலர் முத்தரசன், சி.பி.எம்மின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஊர்வலத்திற்கு முன்பாக நடந்துவந்தனர்.
அவர்களுக்குப் பின்னால் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடி தொடர்ந்தனர். இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் நிறைவடைந்தது. இதற்குப் பின் மேடையில் ஏறிய தலைவர்கள் இந்தச் சட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதற்குப் பிறகு நன்றி தெரிவித்துப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இது பேரணி அல்ல; போர் அணி என்று குறிப்பிட்டார். "இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும். இந்தக் கொடிய சட்டத்தை திரும்பப் பெறப்படாவிட்டால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒத்த கருத்துடைய அனைவரையும் அரவணைத்துப் பேசி, போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்தப் பேரணியில் பங்கேற்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் நன்றி" என்றார் மு.க. ஸ்டாலின்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: