You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக பேரணி: "ஜனநாயக நாட்டில் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்தினால் அதனை வீடியோ பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனர் வாராக்கி மற்றும் எழிலரசு என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் மற்றும் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை வெடித்ததாகவும், நாளை (திங்கட்கிழமை ) திமுக நடத்தும் பேரணியிலும் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
அப்போது திங்கட்கிழமை அன்று நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடுள்ளதாக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் பேரணிக்காக டிசம்பர் 18ஆம் தேதி அன்று திமுக காவல்துறையிடம் அனுமதி கோரியதாக அவர் குறிப்பிட்டார். ஏதேனும் வன்முறை நடந்தால் திமுக பொறுப்பேற்றுக் கொள்ளுமா என்று கேட்டதற்கு அக்கட்சி எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பதால், அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜனநாயக சமூகத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று குறிப்பிட்டனர். ஆனால், எந்த வன்முறையும் இருக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
நாளை சென்னையில் பேரணி ஏதும் நடந்தால், அதனை ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
"நீதிமன்றம் எங்கள் பேரணிக்கு தடைவிதிக்கவில்லை. திட்டமிட்டபடி பேரணி நடைபெறும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.
நாளை திமுக பேரணி நடைபெறும் - ஸ்டாலின்
நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி அண்ணா வழியில் டிசம்பர் 23ஆம் தேதி திமுக பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணிக்காக மிகப்பெரிய விளம்பரத்தை அதிமுக அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பிற செய்திகள்:
- குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல: பினாங்கு ராமசாமி
- குடியுரிமை திருத்த சட்டம் குறித்து என்ன பேசினார் பிரதமர் மோதி? 6 முக்கிய தகவல்கள்
- குடியுரிமை திருத்த சட்டம்: பாகிஸ்தான், சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
- "நாங்கள் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்" - தாக்கப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: