You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நாங்கள் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்" - சிஏஏ போராட்டத்தில் தாக்கப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள ஷா-இ-அலாம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஒரு காணொளியும் வைரலானது. அதில் போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் கல் எறிந்தனர்.
போராட்டக்காரர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய போது, அப்பகுதி மக்கள் சிலர் போலீஸாரை காப்பாற்றினார்கள்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட செய்தியின்படி, இந்த கலவரத்தில் காவல்துறையினர் உட்பட 30 பேர் காயமடைந்தனர். இதில் காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆகியோரும் அடங்குவர்.
இதுகுறித்து ஜெ.எம். சோலாங்கி என்ற காவல்துறை அதிகாரியிடம் பிபிசி பேசியது. இவர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டவர்.
வியாழக்கிழமை நடந்த வன்முறையில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
"அகமதாபாத்தில் கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமையன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காலை 8 மணி முதல் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தும் கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன" என அவர் தெரிவித்தார்.
மேலும், "மாலை 5 மணி அளவில் ஒரு கும்பல், ஷா அலாம் தர்காவிலிருந்து வந்து சாலையில் போராட்டத்தை தொடங்கினர். நாங்கள் அமைதியாக கலைந்து போக சொன்னோம். போலீஸாரால் தடுப்பு காவலில் எடுக்கப்பட்ட மக்களையும் அவர்கள் அழைத்து சென்றனர். காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் அந்த மக்களை ஒப்படைத்தார். இதையடுத்து இந்த கும்பல் காவல்துறையினரின் மீது கல்வீசத் தொடங்கியது" எனக் கூறினார்.
இந்த தாக்குதலில் இவருக்கு தலையில் பலமாக அடிப்பட்டது. போலீஸ் தரப்பில் காவல்துறை துணை மற்றும் உதவி ஆணையர் உட்பட 26 பேர் காயமடைந்ததாக கூறினார் சோலாங்கி.
"உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்"
வன்முறையில் கை மற்றும் முதுகில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு காவல்துறை அதிகாரியிடமும் பிபிசி பேசியது.
"மாலை 5 மணிக்கு வேகமாக ஒரு கும்பல் சாலையை நோக்கி வந்தது, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அங்கிருந்தோம். மக்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றினோம். ஆனால் அந்த கூட்டம், அனைத்து முன் ஏற்பாடுகளுடன் வந்திருந்தது. இல்லையென்றால் திடீரென அவ்வளவு கற்கள் எங்கிருந்து வரும்? போலீஸாரை தாக்க வேண்டும் என்று அவர்கள் முன்பே திட்டமிட்டுதான் வந்தார்கள்" என்று அவர் கூறினார்.
"பயங்கரமான கல்வீச்சு இருந்தது. நான் என்னை நாற்காலி மூலம் பாதுகாத்துக் கொள்ள முயன்றேன். வேகமாக வந்த கல், நாற்காலியை உடைத்துக் கொண்டு என் மேல் பட்டது. எங்களிடம் லத்தி, ஹெல்மெட் அனைத்தும் இருந்தது, ஆனால், ஏதும் செய்ய முடியவில்லை. நாங்கள் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்" என்கிறார் அவர்.
போலீஸாரை காப்பாற்றிய முஸ்லிம் பெண்
கலவரத்தின்போது காவல்துறையை சேர்ந்த சிலரை ஒரு பெண் கல் வீச்சிலிருந்து காப்பாற்றியுள்ளார். கல் வீச்சு நடக்கும்போது அவர்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து அவர்களுடைய காயத்திற்கு முதலுதவியும் செய்துள்ளார்.
இந்த கலவரத்தில் சில மக்கள் காவல்துறையினரைத் தாக்கினர். மேலும் சிலர் அவர்களை காப்பாற்ற முன் வந்தனர்.
அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஃபரீன் பானு, காவலர்கள் 3 பேருக்கும் ஒரு பெண் காவல் அதிகாரிக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார்.
ஒரு பெண் காவல் அதிகாரி தலையில் பலத்த காயத்துடன் வந்ததாகவும், மற்றொருவர் கையில் காயத்துடன் வந்ததாகவும் ஃப்ரீன் பானு கூறினார்.
இரண்டு ஆண் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். அந்த மூன்று பேரையும் கலவரம் அடங்கியதும் வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியே அனுப்பியதாக கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: