2019ம் ஆண்டு இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த புகைப்படங்கள்

டெல்லி காற்று மாசு , சென்னை தண்ணீர் தட்டுபாடு, மத்திய இந்தியாவில் ஏற்பட்ட மழை பாதிப்பு என இந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அரசியல் மாற்றங்களும் பல நிகழ்ந்தன. அவ்வாறு 2019ம் ஆண்டு இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு.

சென்னையில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மழை வேண்டி தமிழக அரசு யாகம் நடத்தியதும் பெரிய அளவில் விவாதத்துக்குள்ளானது. டைட்டானிக் பட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ இந்த ஈஸ்வரி நகர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தண்ணீர் பிரச்னை தொடர்பான பிபிசியின் செய்தியை குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு இந்த புகைப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்தியாவின் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சத் பூஜையை யமுனை நதியில் மேற்கொள்வர். அதேபோல இந்த ஆண்டு சத் பூஜைக்காக தட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களுடன் நச்சு நுரை படிந்த மாசடைந்த யமுனை நதியில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் இந்த புகைப்படம் சுற்றுச்சூழல்செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது.

2019 இந்திய பொதுத் தேர்தல் முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்பட்டது. மீண்டும் பாஜக பெரும் வெற்றி பெற்று , நரேந்திர மோதி இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அன்று மாலை பாஜக தொண்டர்கள் பெரும் ஆரவாரத்துடன் பாஜக தலைவர் அமித் ஷாவையும் , பிரதமர் நரேந்திர மோதியையும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வரவேற்றனர்.

பிகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் கன மழை பெய்தது. பீகாரில் 80 சதவீத வீடுகள் மழைநீரால் பாதிப்படைந்தன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் நிறைய காணொளிகளும் புகைப்படங்களும் பகிரப்பட்டன . பட்னா நகரின் முக்கிய மருத்துவமனையில் பல வார்டுகளில் தண்ணீர் புகுந்து நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

டெல்லியில் ஏற்பட்ட கடும் காற்று மாசால், நவம்பர் மாதம் பல நாட்கள் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் காற்று மாசை தவிர்க்க முடியாத நிலையில் டெல்லியின் குறுகிறாம் நகரில் பள்ளி பகுப்பறையிலேயே மாசை கட்டுப்படுத்தும் முகமூடி அணிந்தபடி மாணவர்கள் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வரலாறு காணாத அளவில் வெங்காயத்தின் விலை அதிகரித்ததால், இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் நடந்தது. தலைநகர் டெல்லியில் உள்ள டிடியு மார்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. ஆனால் பல இழுபறிக்கு பிறகு நவம்பர் 28ம் தேதி மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவி ஏற்றார். சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் பல அரசியல் திருப்பங்களை மகாராஷ்டிர மாநிலம் சந்தித்தது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே அது வன்முறையாக மாறியது. இதன் பிறகு டெல்லி மாணவர்களை ஆதரிக்கும் விதமாக இந்தியா முழுவதும் பல மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாருக்கு ரோஜா மலர்களை வழங்கினர். அதில் பெண் ஒருவர் போலீஸ் ஒருவருக்கு மலர் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுஜித்தை உயிருடன் மீட்க 82 மணிநேரமாக நடந்த மீட்பு பணி தோல்வி அடைந்து, சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது. தமிழகத்தின் ஊடகங்களில் வெளியான இந்த புகைப்படத்தில் காணப்படும் சிறுவனின் இரண்டு கைகள் பலரின் நினைவைவிட்டு என்றும் நீங்காது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேன்யு) மாணவர்கள் உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை திரும்ப பெற கோரி நவம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கட்டண உயர்வு வரும் காலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இந்த எதிர்ப்புக்கான முக்கிய காரணம் என மாணவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த போராட்டத்தின்போது பல மாணவர்கள் காயம் குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: