You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை குடிநீர் சிக்கல்: டி காப்ரியோ பகிர்ந்த புகைப்படத்தில் உள்ள ஈஸ்வரி நகர் கிணற்றின் நிலை என்ன?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை தண்ணீர் பிரச்சனை தொடர்பான பிபிசி செய்தியை மேற்கோள்காட்டி டைட்டானிக் பட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ கடந்தவாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தபோது, அதில் காணப்பட்ட சமுதாய கிணறு பிரபலம் அடைந்தது.
கடும் தண்ணீர் பிரச்சனைக்கு மத்தியில், இன்றளவும் மக்களுக்கு குறைந்தபட்ச தண்ணீரை வழங்கிக்கொண்டிருக்கும் அந்த கிணறு பல்லாவரத்தில் ஈஸ்வரி நகர் பகுதியில் அமைந்துள்ளது.
1975ல் குடிநீர் கிணறாக சீரமைக்கப்பட்ட இந்த கிணறு, இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. தினமும் மூன்று முறை, ஒரு நபருக்கு மூன்று குடம் என்ற அளவில் தண்ணீர் எடுப்பதற்கு சுமார் 300 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன.
தினமும் காலை 6 மணிக்கு இந்த கிணற்றை திறக்கிறார் பல்லாவரம் நகராட்சி ஆறாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் முத்து வடிவேல்(55). கடந்த 1989 முதல் இந்த கிணற்றை பராமரித்துவரும் இவர், மக்கள் வழங்கும் தொகையோடு, தன்னால் முடிந்த அளவு பணத்தை சேர்த்து பராமரிப்பு பணிகளை செய்வதாக கூறுகிறார்.
''எங்கள் ஊரில் பாலாற்று தண்ணீர் வழங்கப்பட்டு மூன்று மாதம் ஆகிறது. தினக்கூலி வேலை செய்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசு கொடுத்து குடிநீர் வாங்குவது சிரமம். இந்த கிணற்று நீர்தான் எங்களை காப்பாற்றுகிறது.
இங்குள்ள பெண்கள் கிணற்றுப் பகுதியை தூய்மை செய்வார்கள். கிணற்றை சுற்றி வேலி அமைத்துள்ளோம். மழைக்காலத்தில் கிணறு தரையை தொடும். இந்த வறட்சியில் சுரக்கும் நீரை நாங்கள் பங்கிட்டுக்கொள்கிறோம்,''என்கிறார் முத்து.
மக்களின் ஒற்றுமை, கிணற்றை தூய்மையாக வைக்கவேண்டும் என்ற உறுதி காரணமாகவே இந்த கிணறு இத்தனை ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கிறது என்கிறார் முத்து. ''நீர்நிலைகளுக்கு நம் முன்னோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நீரை இறைவனாக வணங்கினார்கள். பொதுக் கிணறுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த வறட்சிகாலம் நமக்கு உணர்த்துகிறது. பாதுகாத்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு எங்கள் கிணறு எடுத்துக்காட்டு,'' என பெருமையாக சொல்கிறார் முத்து.
ஒவ்வொரு திங்களன்றும், ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என பெயரை எழுதி, சீட்டு குலுக்கப்படுகிறது. சீட்டில் உள்ள எண்களை கொண்டு வரிசையாக வந்து நீரை எடுக்கிறார்கள் மக்கள். ஈஸ்வரி நகரில் வசிக்கும் கலாவதி ஆறுமுகம்(55) குழந்தைப் பருவத்தில் இருந்து இந்த கிணற்று நீரை குடித்து வளர்ந்ததாக கூறுகிறார்.
''நான் பிறந்து வளர்ந்து இடம் ஈஸ்வரி நகர்தான். சிறு வயதில் விளையாடிவிட்டு இந்த கிணற்றில் தண்ணீர் குடித்திருக்கிறேன். பக்கத்துக்கு வீட்டு பெண்களுடன் இந்த கிணற்றில் வந்து தண்ணீர் எடுத்திருக்கிறேன். சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் என வருத்தப்படுகிறார்கள். எங்கள் ஊர் கிணறு சுரக்கிறது. இந்த வறட்சிக் காலத்தில் ஒரு நபருக்கு மூன்று குடம் தரும் இந்த கிணறு எங்கள் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்டது,''என்கிறார் கலாவதி.
ஊர் கிணறு பிரபலமானதால் மகிழ்ச்சியுடன் பேசினார் ஹரி(35). ''சென்னையில் பல இடங்களில் இருந்த நீர்நிலைகள் மீது கட்டிடம் கட்டிவிட்டார்கள். குறைந்தபட்சம் தற்போது இருக்கும் ஏரி, குளங்களை தூர்வாரி, வீடுகளில் கிணறுகளை மூடாமல் பயன்படுத்தினால் இதுபோன்ற பஞ்சகாலத்தில் எங்களை போல தப்பித்துக்கொள்ளலாம்,'' என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- முஸ்லிம் குழந்தைகளை அவர்கள் குடும்பத்திடம் இருந்து பிரிக்கும் சீனா
- 'ஷவருக்குப் பதிலாக பக்கெட்டில் குளியுங்கள்': மக்களிடம் குடிநீர் வாரியம் வேண்டுகோள்
- பட்ஜெட் 2019-20 முக்கியத் தகவல்கள்: பான் இல்லாதவர்களுக்கு ஆதார், பணமாக எடுத்தால் வரி
- செயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்