You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை, என்.ஆர்.சி: 'இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை'- நரேந்திர மோதி கூறியது உண்மையா?
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுகிழமையன்று, பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் தடுப்பு மையமே கிடையாது என்றும் அவ்வாறு இருப்பதாக வதந்தி பரவுகிறது என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி, "காங்கிரஸ் மற்றும் அர்பன் நக்ஸல்களால் கிளப்பப்படும் தடுப்பு மையம் பற்றிய விஷயம் பொய். தவறான நோக்கம் கொண்டு கூறப்பட்ட ஒரு பொய். இப்படிக்கூட பொய் சொல்லலாமா என எனக்கு வியப்பாக இருக்கிறது," எனக் கூறினார்.
மேலும் அவர், "இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்களை எந்த முகாம்களுக்கும் அனுப்பவில்லை. இந்தியாவில் தடுப்பு முகாம்களே இல்லை. இது தவறான நோக்கத்தைக் கொண்டு பரப்பக்கூடிய பொய் ஆகும். மக்களின் மனதை அழுகாக்கக்கூடிய பொய்," எனக் கூறியுள்ளார்.
ஆனால், பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவாஸ்தவ் 2018ல் செய்த களநிலவரம் பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கூற்றுக்கு எதிர்மறையாக இருக்கிறது.
பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவாஸ்தவின் செய்திக் கட்டுரையில், "தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கும் இருந்தவர்களுக்கும் தடுப்பு முகாம்கள் என்பது ஒரு கெட்ட கனவைப் போன்றது என்கிறார். இதை மறக்க அவர்களுக்கு பல நாட்கள் ஆகும்" என்கிறார்.
இதே போல அஸ்ஸாமின் தடுப்பு முகாம்கள் குறித்து பிபிசி செய்தியாளர் ப்ரியங்கா துபே செய்தி சேகரித்தார்.
அவர் தனது செய்திக் கட்டுரையில், "குடியுரிமையை தீர்மானிக்கும் சட்ட விதிமுறைகள் முயற்சியில் அஸ்ஸாம் மாநிலத்திலிருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் இருட்டில் மூழ்கியுள்ளது. "
"இந்த குழந்தைகள் சில நேரங்களில் தடுப்பு முகாம்களின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெற்றோர்களால் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டுயுள்ளது. சில நேரங்களில் யாருடைய துணையும் இல்லாமல் உலகத்தின் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இவர்களை கண்டுகொள்ள இப்போதைக்கு யாரும் இல்லை," என கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட பல கேள்விகள் மற்றும் பதில்களைப் பார்த்தோமானால், தடுப்பு முகாம்களை பற்றி விவாதம் நடந்தது தெரிய வருகிறது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
ஜூலை 10 2019ல் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், "நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் குடியுரிமை குறித்த பிரச்சனை தீரும் வரையில் அல்லது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வரையில் அவர்களை தடுப்பு முகாம்களில் மாநிலங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுவரை இவ்வாறான தடுப்பு மையங்கள் எத்தனை இருக்கின்றன," என்பது தெரியவில்லை என பதிலளித்தார்.
ஜனவரி 9 2019 அன்று, "மத்திய அரசால், அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தங்கள் பகுதியில் தடுப்பு மையங்கள் அமைக்க மாதிரி தடுப்பு மையங்கள் அல்லது தங்க வைப்பதற்கான மையங்களின் கையேடு கொடுக்கப்பட்டுள்ளது," எனவும் அவர் கூறியிருந்தார்.
ஜூலை 2 2019ல் இதே பதிலை மக்களவையில் உள்துறையின் இன்னொரு இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கையேடுகளில் அந்த மையங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர்கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'தி ஹிந்து' பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி 2019 ஜூலை 2 அன்று மக்களவையில் 2009,2012,2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு தடுப்பு மையங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என நித்தியானந்த் ராய் பேசியுள்ளார்.
16 ஜூலை 2019 அன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அஸ்ஸாமில் தடுப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்த மையங்கள் வெளிநாட்டவர்கள் சட்டம் 1946, 3(2)(இ) பிரிவின்படி குடியுரிமை இல்லாதவர்களை வைத்திருப்பதற்காக உதவுகிறது எனவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: