அபிராமி: மலைவாழ், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க போராடும் பெண்ணின் கதை #iamthechange

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்று மற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 18வது அத்தியாயம் இது.)
சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக 'டாக்டர்நெட் இந்தியா' எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் அபிராமி அரவிந்தன்.
கோயம்புத்தூரில் வசித்து வரும் அபிராமி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும் சென்று ஏழைகளுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நோயாளிகளை இவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். சிகிச்சை முடியும் வரை, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்.
இவரது தன்னார்வ குழுவில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் சேவை செய்து வருகின்றனர்.
சுகாதாரத்தில் பின்தங்கிய மக்கள்
''சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குவதில் இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களில் தமிழகம் உள்ளது. ஆனால், மாநிலத்தில் உள்ள கிராமங்களிலும், மலைவாழ் மக்கள் மத்தியிலும் மருத்துவ சிகிச்சைகள் இன்றுவரை முழுமையாக சென்றடையவில்லை. அரசின் பல்வேறு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பற்றியும் இங்குள்ள ஏழை மக்களுக்கு எந்த புரிதலுமில்லை. உடல் ஆரோக்கியத்தை தாக்கும் நோய்களுக்கும், அதன் அறிகுறிகளுக்கும் இவர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே, இவர்களுக்கு மருத்துவ சேவையை கொண்டு செல்வதும், நோய்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதும் மிகவும் அவசியமாகும்'' என்கிறார் அபிராமி.
தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கான வேலைகளை முடித்துவைத்து விட்டு, 'டாக்டர்நெட் இந்தியா'விற்கான பணிகளை தினமும் காலையில் துவங்குகிறார் இவர்.
இணைப்பு பாலம்

2012 ஆம் ஆண்டு முதல், மருத்துவ சேவைகள் செய்யும் தன்னார்வலர்களோடு இணைந்து பணியாற்றியபோது தனக்கு கிடைத்த அனுபவம் தான் இந்த அமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்கிறார் அபிராமி.
''மருத்துவ தன்னார்வ குழுக்களோடு இணைந்து பயணித்தபோது தான், கிராமங்களிலும் மலைகளிலும் வாழும் எளிய மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய புரிதல் எனக்கு ஏற்பட்டது. சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் அவர்களின் பின்தங்கிய நிலை குறித்த தெளிவு உருவானது.
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


பின்னர் 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது எனது கனவரும், அவரது நண்பரும் இணைந்து பல மருத்துவர்களை ஒருங்கிணைத்து மருத்துவ முகாம்களை நடத்தினர். அப்போது தான், சேவை செய்யும் மனப்பான்மையோடு பல மருத்துவர்கள் இருப்பதும் தெரிந்தது.
மருத்துவ சேவை தேவைப்படுகின்ற மக்கள், சேவை செய்ய தயாராக உள்ள மருத்துவர்கள் இந்த இரு தரப்பையும் இணைக்கும் பாலமாக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நானும், எனது கனவரும் முடிவு செய்து, 2017 ஆம் ஆண்டில் 'டாக்டெர்நெட் இந்தியா' எனும் அமைப்பை உருவாக்கினோம்'' என தெரிவிக்கிறார் அபிராமி.
சேவை செய்யும் மருத்துவர்கள்

இந்த அமைப்பில், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பல மருத்துவர்கள் தங்களை இணைத்துக்கொண்டு சேவை செய்து வருகின்றனர்.
''ஒரு துணிக்கடைக்கு சென்றால் அங்கே, நம்மை வரவேற்று ஒருங்கிணைத்து தேவையான உடைகளை வாங்கிச் செல்ல உதவி செய்வதற்கு ஏராளமான பணியாளர்கள் இருப்பார்கள்.
ஆனால், மருத்துவமனைகளில் அப்படி இருக்காது. குறிப்பாக, பின் தங்கிய கிராமங்களிலும், மலைகளிலும் வசிக்கும் மக்கள் நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை கண்டு அஞ்சுவதற்கான முக்கியம் காரணம் இது தான். அவர்களுக்கு உதவவும், வழிநடத்துவதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில், நாங்கள் அந்த நோயாளியை தொடர்புகொண்டு மருத்துவமனைக்கு வருவதற்கான தைரியத்தையும், உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையையும் உருவாக்குவோம்.
இதுபோலவே, ஒரு நோயாளி மருத்துவரை சந்திப்பதற்கான நேரத்தை பெறுவதும் சிரமமான காரியம். அதை நாங்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் உதவியோடு எளிமையாக்குகிறோம்'' என்கிறார் இவர்.
இவர்கள் உருவாக்கியுள்ள செயலியில் மருத்துவர்கள் தங்களின் சேவை நேரத்தை பதிவு செய்கின்றனர். அதற்கு ஏற்ப கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகளை ஒருங்கிணைத்து அரசு வழங்கிவரும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மூலம் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
ஆரோக்கியம் அவசியம்
''நோய் வந்த பிறகு அதற்கான முறையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதைவிட முக்கியம், நோய் வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டு, நோய் வருவதற்கு முன்னரே பாதுகாத்துக்கொள்வது. எனவே, அனைத்து கிராமங்களிலும் நோய் தாக்குதல்கள் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை, அந்தந்த கிராமங்களில் வசிக்கும் தன்னார்வலர்கள் தான் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும்.
மேலும், பல தன்னார்வலர்களையும், பரிவான மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்'' என்கிறார் அபிராமி அரவிந்தன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












