முஸ்லிம்களிடையே அச்சத்தை அதிகரித்த நரேந்திர மோதி அரசின் 3 முக்கிய முடிவுகள்

முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நரேந்திர மோதி கையாளும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
    • பதவி, பிபிசி

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் முஸ்லிம்களாக இல்லாதிருந்தால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வகை செய்யும், சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

வலதுசாரி இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியின் கீழ் எடுக்கப்பட்டு வரும் முடிவுகளின் வரிசையில் இதுதான் சமீபத்திய முடிவு என்று இயக்கவாதிகள் கூறுகின்றனர்.

நரேந்திர மோதி 2014 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருந்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியின் பெரும்பான்மை பலம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மோதிக்கும் அவருடைய கட்சிக்கும் ஆதரவு அதிகரித்துக் கொண்டிருந்தாலும், அவருடைய கொள்கைகள் மற்றும் முடிவுகள் சிலவற்றுக்கு உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

`சிறுபான்மையினரை ஒதுக்கித் தள்ளும்' குறிப்பாக, 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 200 மில்லியன் அளவுக்கு வாழும் முஸ்லிம்களை ஒதுக்கித் தள்ளும் வகையில் செயல்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் பிரதானமாக உள்ளன.

முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நரேந்திர மோதி கையாளும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் முஸ்லிம் மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில், முஸ்லிம் மக்களின் அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கியமான மூன்று முடிவுகள் இங்கே தரப்பட்டுள்ளன:

1. குடியுரிமை திருத்த சட்ட மசோதா (சிஏபி)

இந்த மசோதா இரண்டு நாட்களுக்குள் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவை ஒட்டியுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்து குடியேறியுள்ளவர்களில், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மன்னிப்பு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த மசோதா இப்போது குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதும் சட்டமாகிவிடும். பக்கத்து நாடுகளில் மத அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, அங்கிருந்து வெளியேறி வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் குடியுரிமை கோருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்று பாஜக கூறுகிறது.

இந்தியக் குடியுரிமை கோருபவர்கள், குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் இங்கு வாழ்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஆறு ஆண்டுகளாக இந்த மசோதா குறைக்கிறது. ஆனால் முஸ்லிம்களை இதில் இருந்து நீக்கியுள்ளது.

இது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்று இந்திய அரசியல் கட்சிகளும், விமர்சகர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்யும் இந்திய அரசியல்சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, குடியுரிமைக்கான தகுதிகளில் முதன்முறையாக இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நரேந்திர மோதி கையாளும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு இருக்காது என்று திரு. மோதியின் அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், இஸ்லாமிய அமைப்புகளும், வலதுசாரி இயக்கவாதிகளும், இது 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம் மக்களின் அமைதியைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கை என்று கூறியுள்ளனர்.

இந்தப் புதிய சட்டம் இந்தியாவில் இப்போதுள்ள குடிமக்களில் - இந்து, முஸ்லிம் அல்லது எந்த மதத்தவராக இருந்தாலும் - யாரையும் பாதிக்காது. ஆனால், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து இன்னும் குடியுரிமை பெறாத ஆயிரக்கணக்கான இந்துக்கள் குடியுரிமை பெற இது உதவியாக இருக்கும்.

இதனால் தான் வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு எதிராக பரவலான எதிர்ப்பு உள்ளது. வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாதவர்கள், ``பெருமளவில்'' தங்கள் பகுதியில் குவிந்துவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

2. காஷ்மீர் 370வது பிரிவு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் நடந்து வருவதற்கு காரணமாக இருந்தது காஷ்மீர் பகுதி.

இந்தியப் பகுதியில் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அழகிய மலைப்பகுதி மாநிலத்தில், இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்துள்ளது.

இந்தியாவில் 1947ல் பிரிவினை ஏற்பட்டபோது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் உருவானது. அதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது.

முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நரேந்திர மோதி கையாளும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

370வது பிரிவு என்ற அரசியல்சட்டத்தின் பிரிவின் மூலம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த மாநிலத்திற்கு கணிசமான தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2019ல், மோதி தலைமையிலான பாஜக அரசு, 370வது பிரிவை ரத்து செய்ய முடிவு செய்தது. அமைதியின்மை ஏற்படும் என்று அந்த மக்கள் அஞ்சுகின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியிருப்பது பற்றி நீண்ட காலமாகவே இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்றாலும், முந்தைய அரசுகள் எதுவும் அதை மாற்ற முன்வரவில்லை.

ஆனால், தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே பாஜக அரசு அதை ரத்து செய்துவிட்டது. காஷ்மீர் பகுதியை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டு, இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு போடப்பட்டு, ஊடகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பல மாதங்களாக முடக்கப்பட்டன.

முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நரேந்திர மோதி கையாளும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

370வது சட்டப்பிரிவு தான் இந்தியாவின் அங்கமாக இருப்பதற்கான நியாயமான தொடர்பு என காஷ்மீரிகள் பலரும் கருதி வந்தனர். இப்போது அதை ரத்து செய்திருப்பதன் மூலம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்வதாகத் தெரிகிறது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களும் அங்கு சென்று சொத்துகள் வாங்கி, குடியேற உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல்சாசனத்தின் மீதான தாக்குதல் இது என்று சட்ட நிபுணர்கள் கூறினர். மோதி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

3. தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்.ஆர்.சி.)

அசாம் மாநிலத்தில் உள்ள குடிமக்களின் பெயர்களைக் கொண்ட பதிவேடுதான் தேசியக் குடியுரிமைப் பதிவேடு. பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்றதாக வங்கதேசம் அறிவித்ததற்கு ஒரு நாள் முந்தைய தேதியான, 1971 மார்ச் 24க்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்ததாக ஆதாரத்தை சமர்ப்பித்தால் இந்தப் பட்டியலில் பெயர் இடம் பெறும்.

தேசிய குடியுரிமைப் பதிவேடு 1951ல் உருவாக்கப்பட்டது (இந்தியாவில் ஜனநாயக முறைப்படி மக்களால் முதலில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கீழ்) என்றாலும், `சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை' அடையாளம் காண்பதற்கான நடைமுறைகள் மோதியின் பாஜக ஆட்சியின் கீழ் முன்னுரிமை பெற்றன.

மேற்படி தகுதியை நிரூபிக்கும் வகையில் தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப் பட்டனர். அவ்வாறு தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களாகக் கருதப்படுவர்.

முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நரேந்திர மோதி கையாளும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

பல்வேறு இன மக்கள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்களில் ஒன்றாக அசாம் மாநிலம் உள்ளது. குடிமக்களுக்கான அடையாள விதிமுறைகளை உருவாக்குவது அங்கு வாழும் பல லட்சம் பேருக்கு நீண்ட காலமாகவே முக்கிய பிரச்சினையாக இருந்து வந்தது.

பெங்காலிகள், அசாமி மொழி பேசும் இந்துக்கள் மற்றும் பெருமளவிலான மலைவாழ் மக்கள் அங்கு வாழ்கின்றனர்.

அசாமில் வாழும் 32 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக உள்ளனர். நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது மாநிலமாக இது உள்ளது. இந்திய மாநிலங்களில் அதிகபட்ச அளவில் முஸ்லிம்கள் காஷ்மீர் மாநிலத்தில் வாழ்கின்றனர்.

அவர்களில் பலரும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அங்கே குடியேறியவர்களின் வாரிசுகள். மத்திய, மாநில அரசுகள் தங்களைக் குறிவைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டின்படி 1.9 மில்லியன் பேர், அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்பீல் செய்வதற்கு அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இதே நடைமுறைகள் நாடு முழுக்க அமல் செய்யப்படும் என பாஜக திரும்பத் திரும்ப கூறி வருவதால், இந்த நடைமுறைகள் நாடு முழுக்க சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: